ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்து மாணவியருக்கு எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்துள்ளது அறிந்து மகிழ்ச்சி அளிக்கிறது – தலைவர் கமல்ஹாசன்

நீட் ஓர் அநீதியான தேர்வு என்பதை அதன் விளைவுகளே நிரூபிக்கின்றன. இந்தியா முழுமைக்கும் ரத்து செய்யப்படும் வரை எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் ஐயமில்லை. அதற்காக நம் கண்மணிகளுக்கு சாதனைகளை பாராட்டாமல் இருக்க முடியுமா ?
சேலம் அருகே உள்ள ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10 மாணவியர்க்கு எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்துள்ளது அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். சிறிய கிராமத்தில் இருந்து மிகக்கடுமையான இந்த தேர்வை எதிர்கொண்டு எவருக்கும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
நீட் தேர்வை தமிழர்கள் எதிர்ப்பது இயலாமையால் அல்ல. அது சமத்துவத்திற்கு சமூகநீதிக்கும் எதிரானது என்பதால் தான் என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லும் வெற்றி இது. இச்சாதனையை சாத்தியமாக்கிய ஆசிரியர்களுக்கும் மாணவியருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.