அரசு அதிகாரியை சாதியைக் குறிப்பிட்டு திட்டிய மந்திரி ராஜகண்ணப்பன் பதவிநீக்கம் செய்யப்படுவாரா ?
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணி செய்துவரும் வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) திரு. ராஜேந்திரன் அவர்களை, போக்குவரத்து துறை அமைச்சர் திரு.ராஜகண்ணப்பன் பட்டியல் இனத்தவன் என்று பலமுறை கூறி, அவர் மீது சாதிய ரீதியிலான தாக்குதலும், பலமுறை அவரை ஒருமையில் பேசி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
அதிமுகவின் சேர்மன் பேச்சை தான் அவர் கேட்பார் என்றும், அமைச்சர் சொல்வதை அவர் கேட்பதில்லை என்றும் சொல்லி “நீ SC BDO தானே” என்றும், “உன்ன இன்னிக்கு வேற இடத்துக்கு தூக்கி அடிக்கிறேன்” என்று தன் சாதிய வெறியையும் அதிகார பலத்தையும் காட்டியுள்ளதாக ராஜேந்திரன் அவர்கள் புகார் சொல்கிறார்.
அதோடு இல்லாமல் “தமிழ்நாடு முழுக்க இனிமே நாங்கள்தான் வேற எவனும் வர முடியாது” என்று பேசியதாகவும் சொல்லியிருக்கிறார். இது தமிழ்நாடு முழுக்க இனி திமுக தான் என்கிற ஆவணப் பேச்சு அல்லது சாதி ரீதியிலான அகந்தை பேச்சா என்று தெரியவில்லை.
ஒருபக்கம் சமூகநீதி காக்க முதலமைச்சர் ஸ்டாலின் குழுவை அமைக்கிறார். சாதி மதம் கடந்து எங்கள் திராவிட மாடல் என்று பெருமையாக பேசுகிறார். ஆனால் அவர் அமைச்சரவையில் இருக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் மீது சாதிய ரீதியான புகார் வந்துள்ளது வெட்கக்கேடானது.
இதுகுறித்து உடனடியாக விசாரித்து இது உண்மை எனும் பட்சத்தில் போக்குவரத்து துறை அமைச்சரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அதுவே சமூக நீதியை காப்பதால் முதல்வர் கூறும் செய்தியை உண்மையாகும் என்று மக்கள் நீதி மய்யம் கருதுகிறது.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கலைஞருக்கு பிடித்த வள்ளுவனின் வரிகளை முதல்வருக்கு நினைவூட்ட விரும்புகிறது மக்கள் நீதி மய்யம்.
என மக்கள் நீதி மய்யத்தின் ஊடக பிரிவு மாநில செயலாளர் திரு.முரளி அப்பாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால் ஆனால் திமுக போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றி மாற்றி உள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து அமைச்சராக துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து மக்களின் குரலாக மக்கள் நீதி மய்யம் சமூக நீதிக்கும், மக்களுக்கும் எதிரான இதுபோன்ற அதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டே இருக்கும்.