தமிழகம் மார்ச் 30, 2022

மனசு பதைக்கும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து தமிழகம் முழுக்க தினமும் நடந்து கொண்டிருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது. பிரேக்கிங் நியூஸ் என்பது பரபரப்பான அரசியல் களங்களில் தேர்தல் நடைபெறும் நாட்களில் என்று மட்டுமே இருந்த காலங்கள் போய் இன்றைக்கு நாளொரு பாலியல் வன்கொடுமை மட்டுமல்லாது கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகிறது. குற்றச்செயல்களில் ஈடுபடும் அக்கயவர்கள் பெரும்பாலும் வாலிப வயதுடையவர்கள் என்பது இன்னும் வேதனையை தந்து கொண்டிருப்பது நம்முள் ஓர் அடர்ந்த கேள்வியை தொக்கி நிற்க வைக்கிறது.

இளம்வயதுடையவர் என்றால் அதிலும் பதின்ம பருவத்தில் இருக்கும் ஆண் பெண் என இருபாலரிடையே உண்டாகும் ஈர்ப்பு முதிர்ச்சியற்ற இனக்கவர்ச்சியான ஓர் தெளிவற்ற புரிதலை மட்டுமே உண்டாக்கும். அதனால் பழக நேரிடுகையில் மேலோங்கி நிற்பது காமம் எனும்படியாக மாறி விடுகிறது. நாட்கள் செல்லசெல்ல அவர்களின் நண்பர்களும் இதில் இணைந்துகொள்ள சற்றே தடம் மாறும் இப்பழக்கம் ஓர் நாள் கடும் தாக்கமுற்று அந்த சில நொடிகளில்/நிமிடங்களில் கூட்டாக இணைந்து அப்பெண்ணை சீரழித்து விடும் அவலம் நேர்ந்து விடுகிறது. இதனிடையில் முறையே ஆண் பெண் என இருவரது பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் மீதுள்ள அதீத நம்பிக்கையால் அல்லது தங்களின் பணிகளில் மூழ்கி விடுவதினால் அவர்களின் கவனத்தை பெறுவதில்லை. அவர்களுக்கு பெற்றோர்களின் மூலம் கிடைத்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி இத்தகைய செயல்களில் ஈடுபட்டு தம் வாழ்க்கையை சிதிலமாக்கிக் கொள்கின்றனர்.

பள்ளி கல்லூரிகளில் கற்றலின் நடுவே பட்டாம்பூசிகளின் மெல்லிய சிறகினைப் போன்று வண்ணமயமான வாழ்வையும் கழுகின் தொலைதூரப்பார்வை போன்ற நுண்ணிய அறிவும் உடைந்து சுக்குநூறாகி விடுகிறது.