புது தில்லி : மே ௦3, 2௦23

பேட்டி பச்சாவ் (பெண்களைப் காப்போம்) எனும் கோஷத்தை ஒவ்வொரு மேடையிலும் முழங்குகிறார் நமது இந்தியாவின் பிரதமர் மோடி. ஆனால் சொல் வேறு அவருடைய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான பிரிஜ் பூசன் சரண்சிங் இன் செயல் வேறாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக சிறுமிகளையும் இவர் விட்டுவைக்கவில்லை.

என்ன தான் ஆச்சு ?

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு எனும் அமைப்பிற்கு தலைவராக பொறுப்பு வகிக்கிறார் பஜாக வை சேர்ந்த பிரிஜ் பூசன் சரண்சிங். மேலும் உத்திரபிரதேச மாநிலத்தின் தேர்தெடுக்கப்பட்ட எம்பியாக பொறுப்பில் இருக்கிறார். கடந்த நான்கு மாதங்களாக இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பல வகைகளில் போராடி வருகின்றனர். அவர்களுடைய குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள பிரிஜ் பூசன் மீதே சுமார் 85 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டமைப்பில் உள்ள மல்யுத்த பெண் வீரர்களில் வயது வித்தியாசம் பார்க்காமல் சிறுமிகள் உட்பட பலருக்கும் பாலியல் ரீதியாக தொல்லைகள் அளிப்பதும் மனரீதியாக துன்புறுத்துவதும் வாடிக்கையாக நடந்து வந்துள்ளது. ஒருகட்டத்தில் இதனை பொறுக்க முடியாமல் பெண் வீரர்கள் பலரும் போராட்டத்தில் இறங்கினர்.

இதற்கிடையில் குத்துச்சண்டை வீரரான மேரி கொம் தலைமையில் அமைக்கபட்டுள்ள குழுவின் விசாரணையை எந்த ஒளிவு மறைவுமின்றி வெளியிட வேண்டும் மேலும் இந்திய ஒலிம்பிக் சங்கம் கூட்டமைப்பின் தலைமை அதிகாரியான திருமதி உஷா அவர்கள் இந்த சர்ச்சையில் அநீதியின் பக்கம் சாயாமல் நேர்மையான முறையில் விசாரணை மேற்கொண்டு குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரிஜ் பூசன் சரண்சிங் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது.

தனது குடும்ப சூழல் காரணமாக விளையாட்டுத் திறமைகள் கொண்ட பல பெண்கள் வெளிச்சத்திற்கு வராமலே முடங்கிப் போய் விடுகிறார்கள். அதனையும் மீறி போராடி தங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து உலக அரங்கில் தங்களின் ஒட்டுமொத்த சக்தி மற்றும் விடாமுயற்சிகளை கொண்டு பல கட்டங்களில் வெற்றி பெற்று நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கிறார்கள். இவ்வளவு பெரும் சிரமங்களுக்கிடையில் ஆணாதிக்க இடையூறுகளுக்கு சளைக்காமல் முன்னேறி வரும் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் ஏராளம். இதில் உடல்ரீதியாக மனரீதியாக என அவர்களுக்கு தொடர்ச்சியாக தரக்கூடிய அழுத்தங்கள் அவர்களை எந்த எல்லைக்கும் இட்டுச் செல்லக் கூடும் உதாரணமாக மனபிறழ்வு உண்டாகலாம் அல்லது தற்கொலை எண்ணம் மேலோங்கி தங்களை மாய்த்துக் கொள்ளவும் நேரிடலாம். பெண் என்பவள் உயர்ந்தவள் கடவுளுக்கு இணையானவள் என வெகுவாக உயர்த்திச் சொல்லும் சமூகத்தில் சிலர் விரும்பத்தகாத எண்ணம் கொண்டு பெண்களை ஓர் போகப்பொருளாக பாலியல் இச்சைகளை தீர்த்துக் கொள்ளும் காரணியாக நினைப்பதால் தான் இது போன்ற அத்துமீறல்கள் பெண்களின் மீது இன்னும் சொல்லப்போனால் சிறு குழந்தைகள் மீதும் வன்புணர்வுகள் கொண்டு அவர்களின் வாழ்க்கையையும் உயிரையும் பலியாக வைக்கிறார்கள்.

அந்த குற்றவாளிகளும் சொற்ப காலமே தண்டனைகள் அனுபவித்து விட்டு அரசியல் பின்புலம் மற்றும் பணபலம் கொண்டு சிறையை விட்டு விடுதலையாகிவிடுகின்றனர். கேட்டால் நன்னடத்தை மற்றும் கருணை அடிப்படையில் விடுதலை அளிக்கப்படுகிறதாம் இதையும் நாம் நம்பியே ஆகா வேண்டும் இது தான் காலக் கொடுமை.

மிருக பலத்தோடு பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்புணர்வுகள் மூலம் எழும் கூக்குரல் பேட்டி பச்சாவ் எனும் போலி பிம்ப பேரிரைச்சலில் அடங்கிப் போய் விடும் !