சென்னை மார்ச் 18, 2022

சட்டமன்ற தேர்தல் பரப்புரை செய்த போது அள்ளி அள்ளி வீசிய வாக்குறுதிகள் காற்றுப் போன பலூன்களாய், வெடிக்காத புஸ்வாணம் போன்றே நமத்துப் போகிறது.

சொன்ன வாக்குறுதிகள் என்ன ஆச்சு என்று கேட்டபோது ஓர் அமைச்சர் தேதி போட்டோமா என்று பொறுப்பில்லாமல் பேசுகிறார் திமுகவை ஆதரிக்கும் இன்னொரு அரசியல்வாதி மத்திய அரசு நிதிகள் ஒதுக்கினால் கொடுப்போம் என்கிறார்.

சென்ற ஆண்டு தேர்தலில் திமுக வென்ற பின் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்து பாருங்கள் போதிய நிதிகள் இல்லை எனவே அடுத்து வரும் காலங்களில் மகளிருக்கான உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப் படும் என்றார்கள். பின்னர் இடைக்கால நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்த போது அதே போல இப்போதைக்கு இல்லை என்றார்கள். உள்ளாட்சி தேர்தல் அறிவித்த போது ஒரு சில பகுதிகளிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும இல்லாமல் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விண்ணப்பம் அச்சடித்து விநியோகம் செய்தார்கள்.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இவர்கள் சென்ற காலங்களில் தேர்தலில் வெற்றி பெற செயல்படுத்திய அதே மதுரை திருமங்கலம் ஃபார்முலா மூலம் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து அண்டா குண்டா கொலுசு குடம் ஹாட் பாக்ஸ் என சகட்டு மேனிக்கு அள்ளி அள்ளி வீசியும் எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களை மிரட்டி அடாவடி செயல் மூலம் அவர்கள் வெற்றியை விலை கொடுத்து வாங்கினார்கள்.

2022 – 23 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை பட்ஜெட்டில் புருவம் உயர்த்தி ஆச்சரியம் கொள்ளும் அளவிற்கு எதுவும் இல்லை ஆனால் போதிய அளவு நிதி நிலைமை சீரானல் செய்வோம் எனும் அதே வாக்கியத்தை பூசி மெழுகி தந்துள்ளார்கள்.

மொத்தத்தில் விக்கித்து நிற்பது மக்களே.