சென்னை மே 24, 2022

அகில இந்திய தொழில்நுட்பம் கல்விக்குழுமம் (AICTE) பொறியியல் படிப்பிற்கான கல்விக் கட்டணங்களை 25% வரை உயர்த்தியுள்ளது, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மாணவ மாணவிகளின் பொறியியல் பட்டப்படிப்பை கற்கும் கனவினை சிதைக்கும் முக்கிய காரணியாகும்.

உயர்கல்வியில் சிறந்த இடத்தைப் பிடித்திருக்கும் தமிழகம் அனைத்து மாணவர்களும் உயர்கல்வியை பெறவேண்டும் என்று எண்ணுவதே முழுமையான சமூகநீதியின் நோக்கமாகும்.

தற்போது AICTE ஆணையம் அமைத்த நீதிபதி ஸ்ரிகிருஷ்ணா தலைமையிலான தேசிய கட்டணக் குழு தனது பரிந்துரையை சமர்ப்பித்துள்ளது. அதில் இளநிலை பொறியியல் படிப்பிற்கு ரூ.79600 முதல் ரூ.1.90 லட்சம் வரையும் முதுநிலைப் பொறியியல் படிப்பிற்கு ரூ.1.41 முதல் ரூ.3 லட்சங்கள் வரை கட்டணமாக நிர்ணயித்துள்ளது.

பாலிடெக்னிக் மற்றும் மேலாண்மைப் படிப்புகளுக்கும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இப்புதிய கல்விக் கட்டணங்கள் முன்பிருந்ததைவிட சுமார் 20 முதல் 25 சதவிகிதம் வரை கூடுதலாக செலுத்த வேண்டியதாக இருக்கும்.

மேலும் மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட கல்விக்கட்டணத்தை எக்காரணம் கொண்டும் குறைக்ககூடாது என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்ககைகளை விடுத்து கல்விக்கட்டணத்தை உயர்த்தியுள்ளது நியாமற்றது. இதனை தமிழக அரசு முற்றிலும் ஒப்புக்கொள்ளாமல் அக்குழுவின் உயர்த்தப்பட்ட கல்விக்கட்டணத்தை எக்காரணம் கொண்டும் தமிழகத்தில் அமல்படுத்த மறுக்க வேண்டும் அவகளின் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும்.

பொறியியல் கல்லூரிகளுக்கான கட்டணங்கள் தொடர்பாக மாநில அரசுகளே குழுக்களை அமைத்த சூழலில் இதனை மத்திய குழுவான எஐசிடிஇ (AICTE) தீர்மானிக்க தேவையில்லை.

கல்வியை சேவை மனப்பான்மையுடன் அணுக வேண்டுமே தவிர வியாபார நோக்கில் நகர்த்திச்செல்ல கூடாது. கல்லூரி நிர்வாகத்தின் அவசியமற்ற செலவுகள் உயர்ந்தால் எனில் அதை மாணவர்களின் மீதி சுமத்தி அவர்களை தர்மசங்கடத்திற்குள் உள்ளாக்க கூடாது.

தமிழகத்தில் சுமார் 480 பொறியியல் கல்லூரிகள் இருக்கும்பட்சத்தில் அவைகளில் முழுதுமாக 100 சதவிகிதம் இருக்கைகள் நிரம்பி விடுவதில்லை, அப்படியே முழு இருக்கைகளும் நிரம்பும் கல்லூரிகள் மிகக் குறைவு தான். இதில் முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது யாதெனில் 20 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பாமலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கல்விக்கட்டணத்தை உயர்த்திக்கொண்டே போவது பொறியியல் கல்வி கற்க வேண்டும் என்ற மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விடும் இதனால் பணிக்கு செல்கையில் சொற்பமாக சம்பளமாக பெற வேண்டியும் இருக்கலாம்.

எனவே கல்லூரிகளில் சிறந்த கட்டமைப்புகளை உருவாக்குவது, சிறந்த கல்வியை போதிக்கும் திறமை வாய்ந்த பேராசியர்களையும் விரிவுரையாளர்களையும் நியமனம் செய்து தரமான மேம்பட்ட கல்வியை தரவல்ல சூழலை உருவாக்கிடவும் தகுந்த வேலைவாய்ப்பினை கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கல்வியை தந்திடும் வகையில் முக்கிய மாற்றங்களை கொண்டு வருவது மட்டுமே மத்திய மாநில அரசுகளின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர வணிக ரீதியாக கல்லூரி நிர்வாகங்கள் பயன்பெறும் வகையில் கல்வியை கொண்டு செல்லக் கூடாது என்றும் மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது.