ஈரோடு – மார்ச் 30, 2024

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தில் இன்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள், தற்போது ஆளும் பாசிச அரசுக்கு எதிராக இந்த தேர்தலை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டுமாறு தான் பிரச்சாரத்தில் நமது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த மாதம் வரை சமையல் எரிவாயு உருளையின் விலை 1018/- ரூபாயாக இருந்ததை நூறு ரூபாய் குறைத்து 918/- ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவிருப்பதால் ஆளும் பாரதீய ஜனதா கட்சி யாரும் எதிர்பாராத வண்ணம் திடுமென 818/- ற்கு விலை குறைக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் தேர்தல் தேதி குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனை குறிப்பிட்டு பேசிய திரு கமல்ஹாசன் அவர்கள், ஆளும் ஒன்றிய அரசின் தந்திரங்கள் இனியும் செல்லுபடியாகும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மக்களாகிய நீங்கள் தான் அவற்றை உணரவேண்டும். நானூறு ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்து வந்த சமையல் எரிவாயு சிலிண்டர், மேலும் அதற்கான மானியத் தொகையை நேரடியாக பயனாளர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தது, ஆனால் அதற்கு பின்னர் வந்த ஒன்றிய அரசு கொஞ்சம்கொஞ்சமாக எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்திவிட்டு எண்ணை நிறுவனங்களின் முடிவினை அரசு ஏதும் செய்ய இயலாது என்று சொல்லிவிட்டு மானியத்தையும் ஏறத்தாழ வெகு சொற்பமாக மட்டுமே அளித்து வருகிறது. ஆயிரத்து பதினெட்டு ரூபாய்கள் கொடுத்து சிலிண்டரை வாங்கி எரிக்க நேரும்போது அதனுடனே ஒவ்வொரு பயனாளரின் வயிறும் பற்றி எரிகின்ற நிலைக்கு நம்மைத் தள்ளி விட்டார்கள், எனவே நீங்கள் சற்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்கிற வகையில் கேட்டுக் கொண்டார் திரு .கமல்ஹாசன் அவர்கள்.

“ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி திமுகவின் வெற்றி வேட்பாளர் திரு. கே.இ.பிரகாஷ் அவர்களுக்கு ஆதரவாக குமாரபாளையம் தொகுதி, வெப்படை பகுதியில் பிரச்சாரம் செய்தேன். ஒவ்வொரு மாதம் சிலிண்டருக்குப் பணம் கொடுக்கும்போதும் மக்களின் வயிறு எரிகிறது, டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது கண்ணீப் புகை குண்டுகளை வீசும்போது நமது கண்கள் எரிகின்றன, குறிப்பிட்ட சமூகத்தினரைக் குறி வைத்து, கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்ட மசோதாவால் நம் இதயம் எரிகிறது. இந்தக் காயங்களுக்கெல்லாம் மருந்திடும் நாள் ஏப்ரல் 19. பெரியார் இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால், டெல்லிக்கு என்ன செய்தி சொல்லி அனுப்பி இருப்பாரோ அந்தச் செய்தியை வீரம் மிக்க ஈரோட்டு மக்கள் தேர்தல் நாளில் சொல்வார்கள்.” – திரு.கமல்ஹாசன் , தலைவர் – மக்கள் நீதி மய்யம்