சென்னை மே 09, 2022

” என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ” என்று ஏக்கதுடன் இயலாமையுடனும் பாடிய காலங்கள் முடிந்து போயின அதெற்கென இழந்த இன்னுயிர்கள் ஏராளம், உடைமையை இழந்தவர்கள் ஏராளம். கொள்ளையடித்த வெள்ளையர்கள் கப்பல் ஏறி சென்று முக்கால் நூற்றாண்டு முடிந்தும் எந்த வேதனையும் முழுதாய் முடியவில்லை.

சுதந்திரம் பெற்றபின்னர் வந்த அரசுகள் ஒன்றிரண்டு தான் மக்களுக்காக திட்டங்கள் தீட்டி பூர்த்தி செய்து வந்தது. எளிமையானவர்கள் தேவையான சலுகைகள் மறுக்கப்பட்டு போலித்தனம் கொண்ட கார்போரேட் முத(லைகள்)லாளிகள் தங்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்ள தங்கள் தலையீடுகளால் அரசியல்வாதிகளை கைக்குள் போட்டுகொண்டு கோலோச்சத் துவங்கியதும் சரியத் துவங்கியது மக்களுக்கான ஆட்சியும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளும் ஆட்சியாளர்களின் கைகளை விட்டு போனது. கட்டுக்குள் வைக்க வேண்டிய அத்திவாசியப் பொருட்களின் விலையும் சகட்டுமேனிக்கு உச்சத்தில் போகத் துவங்கியது.

ஒரு பொருளின் விலை உயர்ந்தால் அதைத் தொடர்ந்து அதனுடன் கிடைக்கவேண்டிய கிளைபொருட்களின் விலையும் உயர்ந்தே தீர வேண்டிய கட்டாயமாகிறது.

உலக வர்த்தகத்தில் கச்சா எண்ணை விலை உயர்வின் பொருட்டு உலக நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உயரும் போதே காய்கறி, பழங்கள், அரிசி போன்ற பொருட்களின் விலையும் உயரும். ஓரிடத்தில் விளைவதை வேறிடத்திற்கு கொண்டு செல்லும் சரக்கு போக்குவரத்து வாடகை உயர்வதே காரணம்.





காங்கிரஸ் அரசு மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது சமையல் எரிவாயு மானியமாக திரும்பத் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அறிவித்தபோது எதிர்கட்சியாக இருந்து வானுக்கும் பூமிக்கும் குதித்து தனது எதிர்ப்பை தெரிவித்த பாஜக ஆளுங்கட்சியாக பொறுப்பிற்கு வந்ததும் சமையல் எரிவாயு பெட்ரோல் டீசல் விலைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள முழு உரிமையும் கொடுத்து பொதுமக்களின் வசவுகளை தவிர்த்துக்கொள்ள செய்த இந்த காரியத்தில் அப்பட்டமாக உண்மை தெரிய ஆரம்பித்தது எப்போது எனில் ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.722 என்று இருந்த போது அதற்கான மானியமாக ரூ.238 வழங்கப்பட்டது. பிற்பாடு அடுத்தடுத்து வந்த காலங்களில் மானியம் ரூ.25 ஆக குறைக்கப்பட்டது பின்னர் அதுவும் இல்லாமல் போனது. இதில் முக்கியமான ஒன்று தரப்பட்ட மானியம் பலரது வங்கிக்கணக்கில் வந்து சேரவே இல்லை, மானியம் பெறுவதற்கு வங்கிக்கணக்கு கட்டாயம் என்றும் சொல்லப்பட்டதால் அவசர அவசரமாக வங்கிகளில் கணக்கும் துவக்கப்பட்டது அதற்கான குறைந்தபட்ச தொகையாக இருப்பும் வைத்தாக வேண்டிய சூழலும் உண்டானது.

இப்படி பலவழிகளில் தொடர்ந்து வெறும் சிரமங்களை மக்களுக்கு தந்து கொண்டிருக்கும் மத்திய அரசு வரிகளையும் குறைத்துக்கொள்ள விழையவில்லை எண்ணை நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமூகமான தீர்வுகளை எடுக்கவில்லை. ஆறு மாதங்களுக்கு அல்லது வருடத்திற்கு ஒரு முறை உயர்ந்து வந்த சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை தற்போதெல்லாம் உடனே உடனே உயர்ந்து வருவது மக்களுக்கு கடும் மன உளைச்சலை விரக்தியை தருகிறது.

கச்சா எண்ணையின் விலை குறைந்துள்ள போதிலும் விலையை குறைக்க முற்படாமல் இன்னும் உயர்த்திக்கொண்டே போகும் எண்ணை கம்பெனிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள மத்திய அரசு கைகளை கட்டிக்கொண்டு மவுனம் காப்பது ஏன் ? தொடர்ந்து இப்படியே ஒவ்வொரு அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்த்திக்கொண்டே வந்தால் “சாது மிரண்டால் காடு கொள்ளாது” எனும் பழமொழியின் அர்த்தத்தை விரைவில் உணரக்கூடிய காலம் அமைவதை எந்த அரசும் தவிர்க்கமுடியாது.

மக்கள் நீதி மய்யம் அறிக்கை
துணைத்தலைவர் திரு மௌரியா
மாநில செயலாளர் திரு முரளி அப்பாஸ்

டெயில் பீஸ் : தேர்தல் பரப்புரையில் கொடுத்த வாக்குறுதி ஒவ்வொரு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.100 மானியமாக தரப்படும் என்ற திமுக அரசாட்சி ஏற்றுக்கொண்டு ஒரு வருடம் நிறைவு பெற்றும் மானியம் வந்த பாடாக இல்லை ; கொடுத்த வாக்கு என்னாச்சு அது காற்றோடு காற்றாக போயாச்சு.