சென்னை மே 09, 2022

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் வசிக்கும் மக்கள் சுமார் 60 ஆண்டு காலமாக அப்பகுதியில் வசித்து வருவது, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, சொத்து வரி, கழிவு நீர் மற்றும் குடிநீர் இணைப்பு கட்டணங்கள் ஆகியவற்றை தொடர்ந்து செலுத்தி வந்தார்கள்.

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்றால் நிலவரி சொத்து வரிகளை எப்படி சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்கள் வசூல் செய்ய முடியும் ? வீடுகள் கட்டத் துவங்கும் போதே துறை சார்ந்த அதிகாரிகள் அதற்கான அனுமதியை வழங்காமல் இது அரசின் புறம்போக்குப் பட்டியலில் இருக்கும் நிலங்கள் இதில் யாரும் வீடு கட்டி குடியேறுவது சட்டப்படி குற்றம் என்றும் எச்சரித்து இருக்கலாம். அதை விடுத்து அவ்விடத்திற்கு பட்டா அளித்தது விதிக்கு புறம்பான செயலாகும் அப்படியெனில் அதற்கு துணை போன அதிகாரிகளுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும். பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பதாய் லஞ்சப் பணத்திற்கு ஆசைப்பட்டு சகட்டுமேனிக்கு ஆவணங்களை வழங்கியது மிகப்பெரிய குற்றம்.

ஒரு நகரமோ அல்லது கிராமமோ கட்டமைப்பில் புதிய வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள தயாராக வேண்டும். சாலை விரிவாக்கம் அல்லது மேம்பாலம் கட்டுதல் போன்றவைகளும் அத்திட்டங்களில் வரும். ஆனால் அவைகள் எல்லாம் அதீத உடலுழைப்பில் ஈட்டிய பணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி சேர்த்து வைத்த பொருளைக் கொண்டு அதுவும் போதாது என்றால் அக்கம் பக்கம் வட்டிக்கு கடன் வாங்கியும் அந்த சின்னஞ்சிறிய வீடுகள் கட்டப்பட்டு இருக்கலாம்.

அப்படி சிறுகச் சிறுகச் சேர்த்துவைத்த பணத்தில் கட்டிய வீடுகளை மாற்று இடங்களை கூட தேர்வு செய்யாமல் அதிலும் அக்குடும்பங்களில் பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களும் உள்ள நிலையில் பொதுப்பணித்துறையினர் மற்றும் காவல் துறையினருடன் அப்பகுதிக்கு சென்று வீடுகளை ஜேசிபி இயந்திரங்களின் உதவியோடு இடித்து தரைமட்டம் ஆக்கியிருக்கிறார்கள்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது என்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இத்தனை ஆண்டுகாலமாய் நடந்து வந்ததாகவும் ராய் என்பவர் போட்ட பொதுநல வழக்கினில் அரசு தரப்பாக சரியான முறையான வாக்குவாதங்கள் முன்வைக்காத காரணங்களினால் இவ்வழக்கு ராய் என்பவருக்கு சாதமாக அளிக்கப்பட்டது.

திடீரென அகற்றப்படும் வீடுகள் கண்டு மனம் வெம்பிய பா ம க கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக பதவி வகிக்கும் கண்ணைய்யா என்பவர் திடீரென தன் உடலின் மீது தானே தீவைத்துக் கொண்டார். இதைச் சற்றும் எதிர்பாராத அங்கிருந்த பொதுமக்கள் பலர் தீயை அணைத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறுதியாக அவர் சொன்ன வார்த்தைகள் குரலில்லாமல் வஞ்சிக்கப்படும் இந்த மக்களுக்கு என்னால் விடிவு கிடைக்கட்டும் என்று வேதனையுடன் கூறினார்.

எந்த விரிவாக்கமோ பாலம் கட்டுதல் புறவழிச் சாலைகள் அமைக்கும் திட்டங்களில் முழுவதும் பாதிக்கப்படுவது வெகு எளிய மக்களே வெறும் சதுர அடிகள் அளவே வீடுகள் மற்றும் நிலங்கள் கொண்டிருக்கும் அடித்தட்டு மக்கள் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள். இதில் எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பிக்கும் பகாசுர நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஷாப்பிங் மால்கள் அல்லது மத சார்பு கட்டிடங்கள் போன்றவற்றை சிறு கீறல் கூட ஏற்படா வண்ணம் அவர்களுக்கு பல சலுகைகள் அளிக்கப்படுகிறது என்பது வெட்டவெளிச்சம். அதற்கு பிரதிபலனாக பெரும் தொகைகள் கூட கைமாறி இருக்கக்கூடும்.

அரசு இயந்திரம் என்பார்கள் அவற்றுக்கு இரும்புக்கரங்கள் உண்டு என்பார்கள் அந்தக் கரங்கள் குற்றச்செயல்கள் புரியும் கள்வர்களை ஒடுக்க வேண்டும் மாறாக இப்படி வேறு இடத்திற்கு கூட கால நேரம் அளிக்காமல் சிறு குழந்தைகள் வயது முதிர்ந்தவர்கள் கூட இருக்கலாம் அவற்றை எதையும் பொருட்படுத்தாமல் வீடுகளை இடித்து நிற்கதியாக நாதியற்று நிற்கும் மக்களை வஞ்சிப்பதை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிப்பதுடன் வீடுகளை இடிப்பதை நிறுத்தி விட்டு அவர்களுக்கான மாற்று வழிகளை அளித்து மக்களின் நலன் காக்க வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் தமிழக அரசினை கேட்டுக் கொள்கிறது.

கோவிந்தசாமி நகர் வீடுகளை இடித்தது தொடர்பாக அப்பகுதியில் உள்ள மக்களை சந்தித்து குறிப்பாக தீக்குளித்து மறைந்த திரு கண்ணையா அவர்களின் குடும்பத்தாரிடம் மக்கள் நீதி மய்யம் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர் தென்கிழக்கு மாவட்டம் மயிலாப்பூர் திருவல்லிக்கேணி மாவட்ட செயலாளர் திரு ஓம்ப்ரகாஷ் மற்றும் நிர்வாகிகள். உடன் நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தொலைபேசி வாயிலாக தனது இரங்கலை தெரிவித்து ஆறுதல் கூறினார்