சென்னை மே 1, 2022

மே தினத்தின் வாழ்த்துகளாக மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு உழைக்கும் மக்களுக்கு வாழ்த்துச்செய்தி தந்திருக்கிறார்.

“சிகாகோ வீதிகளில் பொறியாய்ப் புறப்பட்டு, ஐரோப்பாவில் படர்ந்து, சோவியத் ரஷ்யாவில் ஆக்க நெருப்பாகக் கொழுந்துவிட்ட சர்வதேசத் தொழிலாளர் நாள் இயக்கம் இன்று உலகம் முழுமையும் தொழிலாளருக்குப் பாதுகாப்பாய் நிற்கிறது. தொழிலாளர் இயக்கச் செயல்பாட்டாளர்களை வாழ்த்துகிறேன்.”

உழைப்பாளர்கள் என்பவர்கள் தேசத்தின் முதுகெலும்பு போன்றவர்கள். ஒரு நாட்டின் வளர்ச்சியில் விவசாயிகள், உழைப்பாளிகள் என இரண்டு வர்க்கத்தின் பங்கும் உண்டு. ஒன்றில்லையேல் மற்றொன்றில்லை என்பதே நிதர்சனம்.

உழைப்பாளர் தினம் என்பது நேற்றோ இன்றோ உருவானதல்ல அது பெரும் வரலாறு புரட்சியின் வித்து. அடிமைத்தனமாக நேரம் காலம் இல்லாமல் எந்த கூடுதல் அம்சங்களும் இன்றி வியர்வையும் இரத்தமும் ஒருசேர சிந்தி கடுமையாக உழைத்த உழைப்பாளர்களது மீதமுள்ள இரத்தத்தையும் உறிஞ்சிக் குடித்த முதலாளித்துவ எதிர்ப்பே உழைப்பாளர் தினம்.

18 நூற்றாண்டின் இறுதியிலும் 19 நூற்றாண்டின் துவக்கத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் பணிபுரிந்த தொழிலாளிகள் தினமும் 12 முதல் 18 மணிநேரக்கணக்கில் கட்டாய பணி புரிய நிர்ப்பந்தம் செய்யப்பட்டனர். இதற்கு எதிரான குரல்களும் உலகம் முழுவதும் ஆங்காங்கே எழுப்பப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் உருவான சாசன இயக்கம் (Chartists) ஆகும். இந்த சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது அதில் முக்கியமான ஒன்று 10 மணி நேர வேலை கோரிக்கையாகும்.

பிரான்சில் (1830 களில்) நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் நாள் ஒன்றுக்கு 15 மணிநேரமாக கட்டாயமாக உழைக்க வேண்டி இருந்ததால் அதை எதிர்த்து பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை கையில் எடுத்தனர். 1834 ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர், ஆனால் இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.

ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856 இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.

சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 – 1899 இல் இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் – அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.