திராவிட மாடல் ஆட்சியில் என்ன நடக்கிறது என்று விளங்கிக் கொள்ள முடிகிறது. விதைத்ததை அறுவடை செய்கிறார்களோ என்னவோ ?

2021 இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட்டு ச.ம. உறுப்பினராகி வருவாய்த்துறை & பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக மற்றும் கடலூர் மாவட்ட செயலாளர் ஆக கட்சிப் பதவியும் வகித்து வரும் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மீது அடுக்கடுக்காக புகார்கள் வாசிக்கப்படுகிறது. இதென்ன புதுமை இதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் புதிய அமைச்சராக வந்தவரை பார்த்து அப்படிதான் ஒன்றுக்கு இரண்டாக சொல்வார்கள் என்று நினைத்தால் ரொம்ப தப்புங்க. அட நீங்க வேற புகார் சொல்லுவது சொந்தக் கட்சிக்காரர்கள் தான்.

என்னது சொந்த கட்சி ஆட்களே புகார் சொல்கிறார்களா என்று புருவம் உயர்த்தும் நீங்கள் இன்னும் வருவதை படியுங்கள்.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஆளும் முதல்வர்களில் முதலிடத்தை பிடித்ததாக சொல்லும் புள்ளிவிவரங்கள் எதன் அடிப்படையில் தரவுகள் சேகரிக்கப்பட்டு அதில் எப்படிப்பட்ட ஆட்சியை தந்ததாக பெருமிதம் கொண்டு கிட்டத்தட்ட ஆட்சியேற்ற சில மாதங்களிலேயே நெம்பர் ஒன் இடத்தை பிடித்தது எப்படியோ தெரியவில்லை. ஆனால் மற்ற விஷயங்களில் அமைச்சர்களும், எம்.எல்.எ-க்கள், கவுன்சிலர்கள் நிர்வாகிகளும் ஆடும் ஆட்டத்தில் நெம்பர் 1 என பெயர் எடுத்தாகிவிட்டது. அதற்கான சான்றுகள் பல உள்ளது.

இதில் பல அட்ட்ராசிட்டிகளை செய்து முதலிடத்தை MRK பிடித்ததாக பிரபல தமிழ் வார இதழ்களை வெளியிடும் விகடன் குழுமம் அதன் இணைய பத்திரிகையில் வெளியிட்டுள்ளது.

அரசு வழக்கறிஞர்களை அதுவும் தமது சமூகத்தை சேர்ந்தவர்களை மட்டுமே நியமிப்பது, கடலூர் மேயர் பதவிக்கு கணிசமான தொகையை வசூல் செய்தது, எதிர்கட்சியாக இருந்தாலும் அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் கைகாட்டும் நபர்களுக்கே டெண்டர்களை ஒதுக்குவதும் அதற்கான கமிஷன் வருவதால் அதில் எந்த சிக்கலையும் உருவாக்க விடாமல் பணிகளை மடைமாற்றி விடுவது என கடலூர் மாவட்டத்தில் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் நடந்து கொள்வதாக அவருடைய சொந்தக் கட்சியினரே வரிசையாக வசைபாடுகின்றனர். சரி ஒருவர் மட்டுமே குறை சொல்கிறார் என்றால் கூட பரவாயில்லை உட்கட்சி காழ்ப்புணர்ச்சியின் காரணமாக கூட இருக்கலாம் என யோசிக்க வாய்ப்புண்டு ஆனால் இன்னும் சிலரும் இதே குற்றம் குறைகளை அடுக்கடுக்காக கூறும்போது சொல்லப்படுபவைகள் ஏன் உண்மையாக இருக்க வாய்ப்பு இருப்பதாக யோசிக்கத் தோன்றுகிறது.

கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆன இவரைப்பற்றி அதே மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கே.சிவராஜ் மீனவர் அணி அமைப்பாளர் என்.பி.என்.தமிழரசன், மாவட்ட பொருளாளர் வி.எஸ்.எல். குணசேகரன் இளைஞரணி துணை அமைப்பாளர் ஏ.ஜி.ஆர்.சுந்தர் ஆகிய நால்வரும் ஒன்றைப் போல் கடிதத்தை கட்சித் தலைமைக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தலின்போது மேயர் பதவிக்கு தனது மனைவியை பரிந்துரை செய்யும்படி அமைச்சரிடம் கேட்டதற்கு 1 கோடி ரூபாய் கேட்டதாக அவரின் உறவினரும் குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளருமான சிவகுமார் என்னை தொடர்பு கொண்டு சொன்னதும் மறுநாள் காட்டுமன்னார்கோயில் எம் ஆர்கே பொறியியல் கல்லூரிக்கு சென்று அமைச்சரின் மகனைச் சந்தித்ததும் அவர் உதவியாளர் கோகுலிடம் அந்த பணத்தை கொடுக்கச்சொல்லியதும் பின்னர் இந்த தகவலை அமைச்சரிடம் சொன்னதும் மற்ற எல்லோரையும் வெற்றி பெறச் செய்தால் தான் உன் மனைவி மேயராக வரமுடியும் என்று சொன்னதை நம்பி மற்ற வேட்பாளர்களுக்கு சேர்த்து செலவு செய்து வெற்றி பெற வைத்தேன். ஆனால் நகரச் செயலாளர் ராஜாவின் மனைவியை மேயராக்கி விட்டார் என்று சொல்லும் மாவட்டப் பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரன் எழுதிய கடிதத்தின் சாரம்.

நகரச் செயலாளர் ராஜாவின் முக்கிய பணியே கட்டப்பஞ்சாயத்து செய்வது, கடலூரில் மருத்துவமனைகள், கல்லூரிகளில் மற்றும் தொழிற்சாலைகளில் என வசூல் செய்வது. அவரது மனைவியை மேயராக்கியது முதல் கட்சியின் மதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது என்பதும் அவர்களது புகார்களில் ஒன்று.

அமைச்சரின் சாதி விஸ்வாசம் கடலூர் செஷன்சு கோர்ட்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திலும் நடந்துள்ளது எந்த வித முறையான தகுதியற்ற ஒருவரை தனது சமூகத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தினால் அரசு வழக்கறிஞராக நியமனம் செய்தது, மேலும் சிறுபான்மை இனத்தவர்களை பொறுப்பிற்கு தேர்வு செய்யாமல் அதையும் தனது சமூகத்தினருக்கு வழங்கியதால் தான் சிதம்பரம் மற்றும் புவனகிரி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் திமுகவின் கையை விட்டு போகவைத்தன எனவும் சொல்கிறார்கள்.

இவைகளை எல்லாம் விட இன்னுமா சிறப்பாக ஒன்றையும் தொடர்ச்சியாக செய்து வருவதாக செய்தி ஒன்று உலவுகிறது. அது எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவின் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே பி அன்பழகன் கைகாட்டும் நபர்களுக்கு அரசின் டெண்டர்களை கமிஷன் பெற்றுக் கொண்டு தந்துவிடுவது பணம் மட்டுமே ஒரே குறிக்கோள் அது தேவையான அளவிற்கு கிடைக்கும் பட்சத்தில் எதிர்கட்சியாக இருப்பினும் எந்தக் கவலையுமில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.

சென்ற ஆண்டில் திமுகவின் தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றபின் எனது தலைமையின் கீழ் நடக்கவிருக்கும் ஆட்சியில் அமைச்சர்களோ அல்லது எம்.எல்.ஏக்கள் என எவர் தவறு செய்தாலும் எனது பார்வையில் இருந்தும் கவனத்தில் இருந்தும் தப்ப முடியாது என உறுதியாகச் சொன்ன முதல்வர் தனது நடவடிக்கையை முடுக்கி விட போகிறாரா அல்லது மௌவுனமாக இன்னும் இருக்கும் வருடங்களை நகர்த்திச் செல்வாரா என்பதே எதிர்நோக்கி இருக்கும் கேள்வி.

இவற்றையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது பணம் இருந்தால் எதையும் செய்து முடிக்கலாம் என்ற எண்ணம் அரசியல்வாதிகளிடம் மேலோங்கி இருப்பது என்பது நாட்டின் சீர்கேட்டை உறுதி செய்யும் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. மேலும் நீதியும் நேர்மையற்ற நிர்வாகத்தினை கொண்டு செய்யப்படும் ஆட்சி மக்களுக்கு வெறுப்பையும் உண்டாக்கும் என்பது மறைக்கமுடியாத உண்மை.

நன்றி : JV

https://www.vikatan.com/government-and-politics/politics/minister-mrk-panneerselvam