சென்னை ஜூன் 21, 2022
காவல்துறையில் பணிபுரிய வேண்டுமெனில் குறைந்தபட்ச கல்வித்தகுதியும் அதற்கும் மேலாக உடல் ஆரோக்கியமும் மிக முக்கியம். இதில் கல்வித்தகுதி என்பது கூட (கான்ஸ்டபிள்) காவலர்கள் பணிக்கு 10ஆம் வகுப்பே போதுமானது. ஆனால் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் மற்றும் அதற்கு மேல் உயரிய காவல்துறை அதிகாரிகள் பதவிக்கு பட்டப்படிப்புகள் மற்றும் குரூப் முறை தேர்வுகள் மற்றும் பயிற்சிகள் அவசியம்.
1979 ஆம் ஆண்டில் ஆர்டர்லி எனும் முறை ஒழிக்கப்பட்டு அரசாணை வெளியிட்டு அமலுக்கு வந்தது. அரசாணை வெளியிடப்பட்டு அதிகாரப்பூர்வமாக அம்முறையை நீக்கிய பின்னும் எப்படி ஆர்டர்லி முறையை இன்னும் பின்பற்றி வருகிறார்கள் என ஓய்வு பெற்ற உயரதிகாரி ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
ஆர்டர்லி முறையை பின்பற்றும் போலீசார்கள் தங்கள் வீடுகளில் பணியமர்த்தப்பட்ட காவலர்களை சொந்த பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்வது அப்படிப் பணிபுரியும் பெரும்பாலான காவலர்களுக்கு மன உளைச்சலைத் தருவதாகவும் அதனாலே கூட தற்கொலைகள் நிகழ்வதாகவும் தகவல்கள் வந்தவண்ணம் இருக்கிறது. இதிலிருந்து இன்னொரு கோணத்தில் இருந்து பார்க்கும் அப்படி பணிபுரியும் காவலர்கள் இதை தங்களது பணி நிமித்தமாக அடுத்தடுத்த பதவிகளுக்கு செல்ல துருப்புசீட்டாகவே நினைக்கிறார்கள். அதாவது விரும்பியே பல பேர் ஆர்டர்லியாகவும் பணிபுரிய விருப்பம் கொள்கிறார்கள்.
காவல்துறையில் பணிபுரியும் உயரதிகாரிகள் போதுமான அளவில் ஊதியம் பெற்றாலும் தனிப்பட்ட முறையில் தம் சொந்தப் பணிகளுக்கு பணியாட்களை வைத்துக் கொள்வதை தவிர்ப்பதாக தெரியவருகிறது. அப்படி பணியாட்களை அமர்த்தும் பொருட்டு அவர்களுக்கான ஊதியத்தை தரவேண்டும் ஆனால் ஆர்டர்லி முறையில் தம்மிடம் பணிகளை செய்யும் காவலர்களுக்கு ஊதியம் அரசின் மூலமாகவே அளிக்கப்பட்டு விடும். சொந்தப் பணிகளும் நிறைவேறும் ஊதியமும் மிச்சம் ஆக ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
சரி, இந்த ஆர்டர்லி என்பதை பற்றி இன்னும் விரிவாக அடுத்த கட்டுரையில் அலசலாம்.
“காவல்துறை உயரதிகாரிகளின் வீடுகளில் ‘ஆர்டர்லி’ என்ற பெயரில் பணிபுரியும் காவலர்களை திரும்பப்பெற வேண்டுமென உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது வரவேற்கத்தக்கது. படித்து, பயிற்சி பெற்ற காவலர்களை அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்துவது குற்றம் என்றும், இவ்வாறு பயன்படுத்துவோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதேபோல, வெவ்வேறு இடங்களில், தனிப்பட்ட காரணங்களுக்காக காவலர்கள் பயன்படுத்தப்படுவதையும் முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும்” – என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதை வரவேற்றுள்ள மக்கள் நீதி மய்யம் மேற்சொன்னவற்றை செய்திக்குறிப்பாக வெளியிட்டுள்ளது.