தாம் இருந்து கொண்டு பிறருக்கு பொருள் கொடுத்தோ பணம் கொடுத்தோ உதவுவது என்பது அவரவர் இயல்பையும் மனதையும் பொறுத்தது.

தமிழகத்தின் இருவேறு பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் விபத்தில் அகால மரணத்தை அடைந்து மூளைச்சாவினால் உயிர் பிரிந்தாலும் அவரவர் பெற்றோர் முடிவு செய்து தமது பிள்ளைகளின் மரணம் அடைந்தாலும் மண்ணிலோ அல்லது சாம்பலாய் கரைந்துவிடும் உடல்களை விட்டுவிடாமல் உயிரைக் காத்துக்கொள்ள சிகிச்சை மேற்கொண்டு போராடும் பலரது உயிர்களைக் காக்கும் பொருட்டு உறுப்புகளை தானமாகத் தந்து இருக்கிறார்கள்.

இத்தகைய பெரும் தானத்தை செய்து முடித்த பெற்றோர்களை மனதார பாராட்டி நன்றி தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் அதனூடாகவே இருசக்கர வாகனங்களை விதிகளுக்கு உட்படாமல் சட்ட திட்டங்களை மீறி அதிவேகமாக ஓட்டிச் செல்லுதல், அரசு அறிவுறுத்தும் பாதுகாப்பு முறைகளை பின்பற்றிடாமல் தங்கள் வீட்டில் உள்ளவர்களின் அறிவுரைகளையும் புறந்தள்ளிவிட்டு பயணித்தல் இப்படிப்பட்ட விபத்துகளை உண்டாக்கி வாழ்வை எதிர்காலத்தை தமது வீட்டு உறவுகளை இழக்கும் அபாயம் உணர்ந்து மாணவர்களை பொறுப்புடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறது மக்கள் நீதி மய்யம்

“விபத்தில் மூளைச்சாவு அடைந்த தேனியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சக்திகுமாரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு விபத்தில் மூளைச்சாவு அடைந்த சேலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தினேஷின் உடல் உறுப்புகளும் தானம் செய்யப்பட்டுள்ளன”.

“இளம் வயதில் பிள்ளையைப் பறிகொடுத்த சோகத்தின் மத்தியிலும் உடல் உறுப்புகளைத் தானமாக அளிக்க முன்வந்த பெற்றோர்களின் கருணையும், ஈகையும், அந்த திடமனதும் போற்றுதலுக்குரியவை. மற்றவருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த தியாகத் திருவுள்ளங்களை மக்கள் நீதி மய்யம் வணங்குகிறது”.

“இரு சக்கர வாகனத்தில் செல்லும் கல்லூரி மாணவர்கள் விபத்தில் தங்கள் இன்னுயிரை இழப்பது தமிழகத்தின் அன்றாட நிகழ்வாகி விட்டது. வாகனம் ஓட்டும் மாணவர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றினாலே பாதி விபத்துகள் குறைய வாய்ப்பிருக்கிறது”.

மாணவர்கள், பெற்றோர்கள், கல்லூரி நிர்வாகம், காவல்துறை, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து விபத்துகளைக் கட்டுப்படுத்துவது குறித்த செயல்திட்டங்களை வகுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது.