சென்னை ஜூன் 28, 2022
ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கிட கல்வி தவிர்க்க முடியாத ஒன்று. கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். பிள்ளைப்பருவம் முதலே அவர்கள் திசை மாறி தீயவழியில் சென்றுவிடாமல் நல்லொழுக்கத்தையும், நற்பண்புகளையும் சிறந்த கல்வியையும் கற்பித்து நெறி தவறாத மனிதர்களாக உருவாக்கிடும் பணியில் ஆசிரியர்களுக்கு முக்கிய பங்கு உண்டு.
அவர்கள் ஓர் ஏணியைப் போன்றவர்கள் எண்ணிலடங்கா மாணவர்களை ஒன்று சேர்த்து கற்பித்து அவர்களின் அறிவுபூர்வமான ஆர்வத்தை வளர்த்தும் கல்வியை கற்று முடித்ததும் எதிர்காலத்தில் வளமான வாழ்வினை பெற்றிட செய்வது ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது.
அதிலும் பல வகைகளில் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்திக் கொண்டே இருக்கிறார்கள். தமிழகத்தில் தகுதித் தேர்வில் வென்று ஆசிரியர் பணிக்கு நியமனம் செய்யப்பட வேண்டி ஏராளமான ஆசிரியர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
தமிழக அரசின் பள்ளிகல்வித்துறை ஓர் அதிர்ச்சி தரும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது, அது 13,331 ஆசிரியருக்கான காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக தற்காலிக நியமனம் மூலமாக நிரப்பிக் கொள்ளுமாறு இருக்கும் அந்த அறிவிப்பு முற்றிலும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தரக்கூடியது எனலாம். இதில் மாத ஊதியங்களாக முறையே இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7500/-, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10000/- மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.12000/- என மிகச் சொற்பமாக நிர்ணயித்துள்ளது அப்பணியில் சேர்வோருக்கு விலைவாசிகள் நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே இருப்பதால் இனி வரும் காலத்தில் கடும் நெருக்கடியைத் தரும். நிரந்தமாக பணியாற்றிவரும் ஆசிரியர்களது ஊதியத்தை தர இயலாவிடினும் அவர்களின் ஊதியத்தின் பாதியளவாவது நிர்ணயித்து இருக்கவேண்டும்.
2020 ஆம் ஆண்டின் துவக்கத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் துவங்கிய கொரொனோ பெருந்தொற்று நமது இந்தியாவையும் ஆட்கொண்டு பெரும் பொருளாதார வீழ்ச்சியையும் தனிநபர் வருவாயை பன்மடங்கு வீழ்ச்சியடைய செய்தது பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்களை இழந்தும் வருவாய் இழப்புகளை சந்தித்தும் வாழ்ந்துவரும் வேளையில் குழந்தைகள் பள்ளிக்கு சென்று கல்வி கற்க முடியாத சூழலில் பிள்ளைகள் வீட்டில் கற்றுக்கொள்ள சரியான வாய்ப்பில்லாமல் தங்களது கல்வித்தரத்தை கவனச்சிதைவால் இழக்க நேர்ந்ததன் பொருட்டு அடுத்து வந்த கல்வியாண்டுகளில் தேர்ச்சி சதவிகிதத்தை வெகுவாக பாதித்தது. அதேசமயம் பிள்ளைகள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழலில் தங்களது கவனத்தை படிப்பிலிருந்து மொபைல் போன்களில் அதில் உலவும் பல ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட்டு அதிலிருந்து விடுபட முடியாமல் மனப்பிறழ்வுக்கு உட்பட்டு சிகிச்சை பெற்று வருவதும் அவை மட்டுமல்லாது அரசு மருத்துவமனையில் அதற்கென தனி பிரிவையும் துவக்கி பாதிப்புள்ளாகும் பிள்ளைகளுக்கு தொடர்ந்து கவுன்சிலிங் மற்றும் தகுந்த சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
இது போன்ற பேரிடர் காலங்களில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களின் ஊதியங்களை பெற்றுக் கொண்டு வந்தாலும் தனியார் பள்ளிகளில் பணிபுரிந்த ஆசிரியர்களின் பாடு திண்டாட்டம் ஆகிப்போனது இன்னும் வேதனை. பல பள்ளிகளில் கட்டணங்கள் வசூலிக்க தாமதம் அல்லது வசூலித்து இருந்தாலும் அங்கே பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு முன்பே அளித்த ஊதியங்களில் முக்கால் பங்கு அல்லது அதற்கும் குறைவாக இருந்ததும் உண்டு.
தங்களின் பொருளாதார வசதிகள் குறைந்ததும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அதுவரை படித்து வந்த தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்க்கச் செய்தனர். நிலைமை இவ்வாறு இருக்க கூடுதலாக மாணவ மாணவியர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்ததும் அங்கே பணியாற்றி வந்த ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிகள் உருவானது, அதிலும் அவர்கள் பெரும் சவால்களை சந்தித்தனர், தனியார் பள்ளிகள் தான் கல்வியை திறம்படக் கற்றுத் தரும் என்ற பிம்பத்தை உடைக்கும் பொருட்டு அரசு பள்ளி ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பள்ளிகல்வித்துறை தற்போது நடப்புக் கல்வியாண்டில் அரசு பள்ளிக்கல்விதுறைக்கு 36,896 கோடிகள் ரூபாய்கள் நிதி ஒதுக்கி உள்ளது பாராட்டத்தக்கது என்றாலும் தற்போது வரை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுகளில் வென்று அரசு ஆசிரியர் பணிக்காக தமிழகத்தில் சுமார் 1.20 லட்சம் இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் காத்துக் கொண்டிருகிறார்கள்.
இவர்களை எல்லாம் விட்டுவிட்டு திடீரென தற்காலிக முறையில் ஆசிரியர்களை பணியமர்த்திக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பினை வெளியிட்டு இருப்பது பெரும் கண்டனத்துக்குரியது என்று தங்கள் தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளது மக்கள் நீதி மய்யம்.
“நாங்க டெட் தேர்வில் பாஸ் பண்ணி 13 வருஷம் ஆச்சு” (விபரங்கள் கீழே)
பணி நிரந்தரம் எப்போது ?
சற்று முன் கிடைத்த செய்தி :
ஆசிரியர்களை தற்காலிக பணி நியமனம் செய்வதை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது, மேலும் ஆசிரியர்களை தகுதி அடிப்படையில் முன்னுரிமை அடிப்படையில் நியமிப்பதற்கும் வேறுபாடு உள்ளது என்றும் ஓர் கருத்தை முன் வைத்துள்ளது நீதிமன்றம்.
பணி நியமனம் செய்திட வேண்டி போரட்டம் நடத்தி வரும் ஆசிரிய பெரு மக்கள் இன்று (01.07.2022) நமது மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகம் சென்று தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்களை சந்தித்து அவரிடம் பணி நியமன கோரிக்கைகள் தொடர்பாக நடந்து வரும் போராட்டம் குறித்து பேசினார்கள். அதனை கவனத்தோடும் அக்கறையுடனும் கேட்டுக் கொண்ட தலைவர், “நீதியின் பக்கமும் நேர்மையின் பக்கமும் நின்று வரும் மக்கள் நீதி மய்யம் ஆசிரியர்களின் பணி நியமன கோரிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வருகிறது அதனால் ம.நீ.ம என்றும் உங்களுடன் துணை நிற்கும்” என்று உறுதியளித்தார்.