ஜுலை 05, 2022

இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார வீழ்ச்சியினால் நடந்த மாற்றங்கள் மக்களிடையே எழுந்துள்ள அதிருப்தி காரணமாகவும் திறமற்ற ஆட்சியின்மையின் விளைவாக ஏற்பட்டுள்ள கடும் உணவுப் பொருட்கள் பற்றாகுறையால் பல நாடுகள் மானிதாபிமான அடிப்படியில் தத்தமது நாட்டின் சார்பாக பல பொருட்களை அனுப்பி வைத்தனர். அதே போன்று இந்தியாவும் குறிப்பாக நம் தமிழக அரசும் அரிசி முதலான பொருட்களை அனுப்பி வைத்தன.

இலங்கை இராணுவம்/கடற்படையினர் பல ஆண்டுகளாக நமது தமிழக மீனவர்களை கைது செய்தும் பல நேரங்களில் எந்த ஈவிரக்கமும் இன்றி துப்பாக்கிச்சூடு நடத்தியும் கொன்றுள்ளனர். அதே சமயம் இந்திய எல்லையில் அறியாமல் நுழைந்து விடும் இலங்கை மீனவர்களை எந்த சேதாரமும் இன்றி கைது செய்து பின்னர் இலங்கை அரசிடம் முறையாகத் தெரிவித்து பின்னர் பிடிபட்டவர்களை விடுவித்து விடுவார்கள். ஆனால் இந்த மனிதாபிமானம் கிஞ்சித்தும் இல்லாமல் தொடர்ந்து தனது அட்டூழியத்தை செய்துகொண்டே இருக்கும் இலங்கை கடற்படையை கண்டித்து இனி இதுபோல் நிகழாமல் இருக்கும் படியான புரிந்துணர்வை நமது இந்திய அரசின் வெளியுறவுத்துறை மூலம் அழுத்தம் தர வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது.

“எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, கடந்த 2 நாட்களில் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 17 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களது படகுகளை சிறைப்பிடித்துள்ளது கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாக நீடிப்பது வேதனையளிக்கிறது நெருக்கடியில் தவித்த இலங்கைக்கு மத்திய, மாநில அரசுகள் கோடிக்கணக்கில் நிதியுதவி அளித்தன. இச்சூழலில், தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை அரசுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். மீனவர்கள்,படகுகளை விடுவிக்குமாறு தமிழக அரசு,மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” – மக்கள் நீதி மய்யம்