திண்டுக்கல், ஜூலை 29, 2022

தமிழக அரசின் திடீர் அறிவிப்பால் விக்கித்து நிற்கின்றனர் தமிழக மக்கள். மாதம் தோறும் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும், முன்னறிவிப்பின்றி எந்த வகையிலும் மின் வெட்டு இருக்காது என்று தங்களின் தேர்தல் நேர வாக்குறுதியை தந்து வெற்றி பெற்ற திமுக ஆட்சியேறிய பின்னர் அதிர்ச்சி தரும் சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அரங்கேற்றி வருகிறார்கள்.

அதில் வெகு முக்கியமான ஒன்று மின் கட்டண உயர்வு, அறிப்பின்றி நாள் ஒன்றுக்கு பல மணிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுகிறது, அதற்கான காரணம் என்ன சொன்னார் என்று மக்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் இருப்பினும் மீண்டும் நினைவுபடுத்துகிறோம் “மின்சாரம் விநியோகம் செய்யும் உயர் அழுத்த கேபிள்களின் மீது அணில்கள் பல இடங்களில் ஓடி வருவதால் அதன் மூலம் மின்கம்பிகள் ஒன்றோடொன்று உரசி ஷார்ட் சர்கியூட் உண்டாகி மின் வெட்டு நிகழ்ந்து விடுகிறது” இதற்கு பல வழிகளில் எதிர் வினைகள் ஆற்றப்பட்டதும் நடந்தது நாம் அனைவரும் தெரிந்ததே.

இப்படியாக இருக்கும் போது திடீரென மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அவ்வாறு உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணங்களை திரும்பப்பெற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு கண்டனங்களை பதிவு செய்து இருந்தது. இப்போது அதனையொட்டி திண்டுக்கல் மாவட்டம் மய்யம் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் ஒன்று கூடி நாகல் நகரில் ஜூலை 28 ஆம் தேதி மிக்சி, மின் விசிறி மற்றும் தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட மின் சாதனங்களுக்கு மாலைகள் அணிவித்து தமது கண்டனங்களை தெரிவித்த போது மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் திரு ஸ்ரீனிவாச பாபு தலைமை தாங்கினார், மாவட்ட பொருளாளர் மணிகண்டன், துணைசெயலாளர் திருமூர்த்தி, மகளிரணி செயலாளர் சமேஸ்வரி உட்பட பலர் முன்னிலை வகித்தனர் உடன் நத்தம் ஒன்றிய செயலாளர் லட்சுமிபதிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.