அவினாசி, செப்டெம்பர் 20 – 2022
அவினாசி அருகே கைகாட்டி புதூர் துவக்கப்பள்ளியின் மாணவர்கள் பள்ளி வளாகத்தின் உள்ளே உள்ள செடி கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருக்கும் போது அப்பளியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் தன் வீட்டின் குப்பைகளை பள்ளி வளாகத்திற்குள் அடிக்கடி கொட்டி விடுவதாக புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது. இதைப்பற்றி பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அங்கே பணிபுரியும் ஆசிரியர்கள் பலரும் அந்த நபரிடம் இப்படிச் செய்வதை பற்றி கண்டித்து கேட்கையில் அதற்கு அவர் அலட்சியமாகவும் திமிராகவும் பதிலளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இன்று கழிவு நீரை பள்ளி வளாகத்திற்குள் வீசி ஊற்றி இருக்கிறார். அந்த கழிவு நீர் அங்கே செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த மாணவர்களின் பட்டுத் தெறித்தது. இதனைக் கண்டித்த தலைமையாசிரியர் மீது தகாத வார்த்தைகளை பேசிய அவ்வீட்டின் உரிமையாளர் தனக்குத் தெரிந்த ஓர் நபரிடம் இதைப்பற்றி கூறியிருப்பதாக அறிய நேர்கிறது.
பள்ளி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் அங்கு வந்த அந்த நபர் 16 ஆவது வார்டு கவுன்சிலர் ரமணியின் கணவரான துரை என்பவர் ஆகும். கழிவு நீரையும் குப்பைகள் ஆகியவற்றை பள்ளி வளாகத்திற்குள் வீசும் அந்நபருக்கு ஆதரவாக பள்ளிக்கு வந்த துரை சகட்டுமேனிக்கு தலைமையாசிரியர் மற்றும் சக ஆசிரியர்களிடம் கடுமையான வார்த்தைகளை உபயோகித்து சப்தம் போட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நடந்த வாக்குவாதத்தில் ஈடுபட்ட துரை குடித்துவிட்டு வந்திருப்பது என்று தெரியவந்தது. நிலைமை உச்சத்தை அடைய திடீரென அவர் தலைமையாசியரை கடுமையாகத் தாக்கியதோடு நில்லாமல் தகாத வார்த்தைகளில் வசை பாடியிருக்கிறார்.
கல்வி பயிலும் மாணவ மாணவிகள் முன்னிலையில் தூய எண்ணங்களை விதைக்கும் பள்ளி வளாகத்தினுள் குடிபோதையில் வந்ததோடல்லாமல் ஆசிரியர்களையும் தலைமையாசிரியரையும் தாக்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மக்களுக்கான பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினரின் கணவர் சட்டத்தை புறந்தள்ளிவிட்டு போற்றப்பட வேண்டிய ஆசிரியர்களை தரக்குறைவாக பேசியும் அவர்களை தாக்கியும் சென்ற துரை எனும் அவரை உடனடியாக காவல்துறையினர் கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அங்குள்ள பொதுமக்களின் எண்ணம்.
எங்கு அக்கிரமம் அநியாயம் சட்டத்திற்கு புறம்பான காரியங்கள் நடந்தாலும் எனது தலைமையிலான திமுக அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்றும் அவ்வாறு செய்யும் நபர் தமது கட்சியின் நிர்வாகிகள் ஆக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் என்ற முதல்வர் இதைப்பற்றி அறிந்ததும் சொன்னதை செய்வாரா என்று பொறுத்திருந்துப் பார்ப்போம்.