மறைமலை நகர் – செப்டெம்பர் 23 – 2022
தாம்பரத்தை அடுத்த செங்கல்பட்டு பகுதி மறைமலை நகர் வட்டாரத்தில் கார் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. தாம்பரம் தொகுதியின் MLA ஆன திமுகவை சேர்ந்த SR ராஜா சில தினங்களுக்கு முன்பு அந்நிறுவனத்திற்கு நேரிடையாக சென்று அதன் தலைமை நிர்வாக அதிகாரியிடம் கடும் வாக்குவாதம் செய்திருக்கிறார். எதற்காக என்றால் தனியார் நிலம் குத்தகை தொடர்பாக ஒரு சாராருக்கு வேண்டப்பட்டவராக பஞ்சாயத்து செய்யச் சென்ற ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அந்நிறுவன CEO வை ஊழியர்களின் முன்பாகவே ஆபாச வார்த்தைகளாலும், நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் இப்பகுதியில் உன்னால் தொழிற்சாலை நடத்த முடியாது என்றும் உச்சகட்டமாக உன்னுடைய கை கால்களை உடைத்து எறிவேன் என தான் மக்களின் பிரதிநிதியான பொறுப்புமிக்க சட்டமன்ற உறுப்பினர் என்ற சுயஉணர்வு சிறிதும் இல்லாமல் ஓர் ரவுடியைப் போன்று பேசியிருக்கிறார். இத்தனையும் அங்கே நிர்மானிக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் தெள்ளத்தெளிவாக அனைத்து உரையாடல்களும் பதிவாகி இருந்தது. இதற்கிடையில் அந்நிறுவனத்தின் CEO இங்கே நடக்கும் அனைத்தும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது அதனை உங்களின் தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்வேன் எனச் சொல்லியும் விடாமல் ஆபாசமாக பேசினார் MLA வான SR ராஜா.
அதிர்ச்சி தரும் இந்த ஆபாச பேச்சுக்கள் மற்றும் MLA வின் அராஜக போக்கும் அன்று அவர் நடந்து கொண்ட விதமும் அந்தக் காணொளி மூலமாக ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவ துவங்கியது. இவை அனைத்தும் முதல்வரின் கவனத்திற்கு சென்றதால் காவல்துறை மூலமாக அவர் மீது FIR பதியப்பட்டது.
எது எப்படி இருந்தாலும், அந்த நிறுவனம் மீது விதிமீறல் அல்லது ஏதேனும் புகார் இருப்பின் சம்பந்தப்பட்ட துறைகள் சார்ந்த அதிகாரிகள் மட்டுமே சட்டப்படி நடவடிக்கை எடுக்க உகந்தவர்கள் ஆவார்கள். அதை விடுத்து சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ராஜா தனிப்பட்ட முறையில் தமக்கு வேண்டப்பட்டவருக்காக பரிந்து கொண்டு வருவது சட்டப்படி குற்றமே ஆகும். மாண்புமிகு தமிழக முதல்வரின் உத்தரவையும் அறிவுரைகளையும் அவருடைய தலைமையில் செயல்படும் கட்சியில் மற்றும் ஆட்சியிலேயே கேட்க மறுத்து இப்படி அடாவடியாகவும் அராஜகத்துடன் நடந்து வருவது தான் விடியலோ ?
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் அறிக்கை மூலமாக தனது கண்டனத்தையும் முதல்வர் அவர்கள் மேற்கொண்டு கடுமையாக நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறது. நடவடிக்கைகள் கடுமையாக இருந்தால் மட்டுமே இது போன்ற அராஜக செயல்களில் ஈடுபட்டு மிரட்டல் விடுக்கும் மக்கள் பிரதிநிதிகள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து மக்களுக்கான சேவைகளில் கவனம் செலுத்துவார்கள் எனவும் அறிவுரை விடுக்கிறது.
தனியார் நிறுவன நிர்வாகிகளை மிரட்டும் திமுக எம்எல்ஏ! ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும்.மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் திரு தங்கவேலு அறிக்கை.
https://tamil.asianetnews.com/politics/case-under-3-sections-against-tambaram-dmk-mla-sr-raja-ril9wl
https://www.hindutamil.in/news/tamilnadu/872502-strict-action-against-tambaram-dmk-mla-raja.html
https://www.seithipunal.com/politics/mnm-say-about-dmk-mla