மதுரை, செப்டெம்பர் 24, 2022

AIIMS – மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – விலகாத மர்மம் என்று எதற்காக குறிப்பிடுகிறோம் என்று போகப் போக புரிந்து கொள்ள முடியும்.

தமிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015 இல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டு அதற்கான சட்டபூர்வ அனுமதியை மத்திய அரசு வழங்கியது. இதைத் தொடர்ந்து அதற்கான இடம் தமிழகத்தில் உள்ள திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூரில் தேர்வு செய்யப்பட்டது பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று அப்போதைய தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருந்தாலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பது தமிழக மக்களின் பெரும் கனவாக இருந்தது. பிரதமரின் மூலமாக அடிக்கல் நாட்டப்பட்ட நிகழ்வுக்குப் பின் நம்பிக்கை கொண்ட மக்களின் கனவு நாளாக நாளாக வெறும் கனவாகவே தங்கிவிட்டது. இதற்கிடையில் ஜப்பான் நாட்டு நிறுவனம் ஒன்று ரூ 1500 கோடிகள் வரை AIIMS மருத்துவமனை வளாகம் கட்டுமானப்பணிகளுக்கு நிதி ஒதுக்கி இருப்பதாக செய்திகளும் வந்தது.

பிரதமர் அடிக்கல் நாட்டும் போது சுமார் 750 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை பல்வேறு நவீன உபகரணங்கள் கொண்டதாகவும் அமையவிருக்கிறது எனவும் அதன் மதிப்பு சுமார் 1464 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக நிர்மானிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. மருத்துவமனை மட்டுமல்லாது மருத்துவக்கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரியும் இணைந்து செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. நாட்கள் வருடங்கள் ஆகின ஆயினும் எந்த பணிகளும் துவங்கப்படவில்லை. பின்னர் 2020 ஆம் ஆண்டில் கட்டுமானப்பணிகளுக்கு தேவையான பொருட்களின் விலைகள் பன்மடங்கு உயர்ந்துவிட்டதால் திட்ட மதிப்பீடு 2000 கோடி ரூபாயாக உயர்ந்து விட்டதாக செய்திகள் வெளியாகின.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகளுக்கு தேவையான கடனுதவி ஜப்பான் நாட்டைச்சேர்ந்த ஜெ.ஜெ.சி.எ எனும் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் தற்போது வரை அந்நிறுவனத்திடமிருந்து எந்த விதமான நிதிஉதவியும் வராமல் இருப்பதால் கட்டுமானப் பணிகள் எதையும் இன்னும் துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளின் கடனுதவி புரிந்துணர்வு ஒப்பந்தம் 2021 இல் போடப்பட்டு பல மாதங்கள் ஆகியும் அதற்கான நிதிகள் வந்து சேரவில்லை. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்மானிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட அதே நாளில் தான் இதர மாநிலங்கள் ஆன பஞ்சாப், அசாம், ஜம்மு காஷ்மீர் & இமாசலப் பிரதேசம். இதில் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் அதாவது பஞ்சாப் – பிதிந்தா (2019), அசாம் – குவ்ஹாதி (2020), ஜம்மு காஷ்மீர் – விஜய்பூர் (2020), ஹிமாச்சல் பிரதேஷ் – பிலாஸ்பூர் (2020) எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன (அடைப்புக்குறிக்குள் செயல்படத் துவங்கிய ஆண்டு). இதில் வஞ்சிக்கப்பட்ட மாநிலமான தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட தோப்பூரில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டது.

இதற்கிடையில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் திமுக வின் இளைஞரணி செயலாளரும் ஸ்டாலின் அவர்களின் மகனுமாகிய உதயநிதி ஸ்டாலின் (உதயநிதி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்) தமது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க மதுரைக்கு வந்தபோது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்து ஒரு செங்கல்லை எடுத்துக் கொண்டவர் அதன் பிறகு தாம் பரப்புரைக்கு சென்ற இடங்களில் எல்லாம் இன்னும் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படாமல் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் செங்கல் இதுதான் என பொதுமக்களுக்கு காண்பித்தபடியே சென்றது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரும் நீட் தேர்வு தொடர்பாக ஒவ்வொரு மீட்டிங்கிலும் முழு விலக்கு நிச்சயம் பெற்றுத் தருவோம் என உறுதியளித்தார். ஆனால் ஆட்சி அமைத்து 17 மாதங்கள் கடந்தும் இன்னும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்படவில்லை. என்பது ஓர் தனி கதை.

எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக அலுவலகங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்திற்குள் அமைந்துள்ளன. ஆனால் மதுரையில் அமையவிருக்கும் மருத்துவமனையின் நிர்வாக அலுவலகம் மட்டும் தில்லியில் அமைந்துள்ளது இது ஆகப் பெரிய முரண்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக சட்ட ஆர்வலர் பாண்டியராஜா என்பவர் தெரிந்து கொண்ட முக்கிய தகவல் என்னவென்றால் 2023 ஆம் ஆண்டில் மட்டுமே கட்டுமானப் பணிகள் துவங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை எல்லாவற்றையும் விட தமிழகத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான ஜே.பி.நட்டா காரைக்குடியில் இம்மாதம் 22 ஆம் தேதி அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் எய்ம்ஸ் மருத்துமனையின் பணிகள் 95% வரை நிறைவடைந்ததாக பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது பலரது புருவங்களையும் உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் எம்பி மாணிக் தாகூர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சு வெங்கடேசன் ஆகிய இருவரும் மதுரை தோப்பூரில் நேரில் சென்று ஒதுக்கப்பட்ட நிலத்தில் சுற்றுச்சுவர் தவிர எந்த கட்டிடமும் எழுப்பப்படாமல் இருப்பதை புகைப்படமாகவும் வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்கள்.

இந்தியா முழுமைக்குமான பொறுப்பான ஓர் மத்திய அரசு ஆட்சிஇப்பொறுப்பில் இருக்கும் ஒரு தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஓர் தலைவர் இப்படி வாய்க்கு வந்தபடி உண்மைக்கு புறம்பாக பேசிச் சென்றது அவலத்தின் உச்சம். இந்தியாவின் இதர மாநிலங்களை விட பன்மடங்கு ஜிஎஸ்டி வரிகள் உட்பட மறைமுக நேர்முக வரிகள் அனைத்தையும் பெரும்பான்மையாக ஈட்டித்தரும் தமிழகம் தொடர்ந்து பல வகைகளில் வஞ்சிக்கப்படுகிறது என்பது உண்மை. இது எதனால் என்றால் பிஜேபி யின் அரசியல் ரீதியான கொள்கைகள் பெரும்பான்மையான தமிழக மக்களுக்கும் பல அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு ஒப்பாத ஒன்றாக இருப்பதாலோ என்னவோ அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய மத்திய அரசு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை தமிழகத்தின் மீதி திணிப்பதாக எண்ணத் தோன்றுகிறது.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் சார்பாக பல கேள்விகள் மற்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

2019-ல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சாலை, சுற்றுச்சுவரைத் தவிர வேறெந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கவில்லை. பூர்வாங்கத் திட்டமிடல் பணிகள் இறுதிநிலையை எட்டியுள்ளதாகவும், நிதி ஒதுக்கீடு முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில், தமிழக மக்களுக்கு உண்மை நிலையை விளக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

எந்தெந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன, எந்தெந்த பணிகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்தான தகவலை மத்திய அரசு வெளியிட வேண்டும். பாஜகவின் சாதனையாகக் கூறிக்கொள்ளும் எய்ம்ஸ் பெயரில் புனைவுகள்தான் உலவுகின்றன. எனவே, திட்டத்தின் உண்மை நிலை குறித்து வெளிப்படையாக விளக்கி விட்டு, உரிய நிதி ஒதுக்கீடு பெற்றுத்தந்து, கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, மருத்துவமனையைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று மநீம வலியுறுத்துகிறது.

https://www.bbc.com/tamil/india-63000023

https://www.hindutamil.in/news/tamilnadu/761271-aiims-construction-work.html

https://www.dinamani.com/tamilnadu/2019/jan/27/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3084108.html