சென்னை : அக்டோபர் 08, 2022
வடகிழக்குப் பருவமழைக்குத் தமிழ்நாடு தயாரா? நிவாரணம் தீர்வாகாது! மழைநீர் வடிகால்களை சீரமைக்க வேண்டும் ! – கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்
சமீபத்தில் சென்னை மாநகர மேயர் திருமதி பிரியா ராஜன் அவர்கள் ஒரு நிகழ்வில் பேசும்போது சென்னையில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் கட்டுமானப் பணிகள் 95% சதவிகிதம் வரை முடிக்கப்பட்டதாக கூறினார். (இந்த 95% எனும் குறியீடு தமிழக சுற்றுப்பயணம் வந்த ஆளும் மத்திய அரசின் கட்சித் தலைவர் மேடையில் பேசிச் சென்றது உங்கள் நினைவில் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல) அவர் சொன்னது எந்த வகையில் உண்மை என்று சென்னைவாசிகளுக்கு நிச்சயம் தெரியும். சென்னையின் பல பகுதிகளில் பணிகள் நடைபெற்று வரும் இவ்வேளையில் நீண்ட சாலைகளும், தெருக்களும் மழை நீர் வடிகால் கட்டுமானப் பணிகள் எனும் பெயரில் பள்ளம் தோண்டப்பட்டு வந்ததும், கம்பி கான்கிரீட் போடும் பணிகளும் சில இடங்களில் மட்டுமே பெயரளவிற்கு முடித்து வைக்கப்பட்டதாக தெரியவருகிறது.
உதாரணமாக வடசென்னை வாசி ஒருவர் அவர் வசிக்கும் பகுதியில் இருந்து பெரம்பூர் செல்வதற்கு சராசரியாக 10/15 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால் போகும் வழியாக பல இடங்களில் வடிகால் கட்டுமானத்திற்கு வெட்டப்பட்ட பள்ளங்கள் இன்னும் அப்படியே இருப்பதால் அவ்வழியே சென்று வரும் வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் பலரும் அவதிக்குள்ளாகிறார்கள் அது மட்டுமில்லாது நேரமும் அதிகளவு ஆகின்றதால் கால தாமதம் ஏற்படுகிறது. காலை 10.30 மணிக்கு வீனஸ் மார்கெட் செல்ல வாகனத்தில் கிளம்பியவர் 11.25 மணிக்கு தான் சென்று சேர முடிந்ததாக வருத்தம் தோய்ந்த குரலில் தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டில் தமிழகத்தை புரட்டிப் போட்டது புயல் இதை யாரும் வெகு சுலபத்தில் மறந்திருக்க முடியாது. வெள்ளக்காடாக மாறிய சாலைகள் தெருக்கள் வீடுகளில் சூழ்ந்து நின்ற வெள்ள நீரில் சகதிகளும், சேரும், பூச்சிகளும் மற்ற உயிரினங்களும் வீடுகளுக்குள் புகுந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரயும் அல்லாட வைத்தது. மின்சாரம் நாட்கணக்கில் துண்டிக்கப்பட்டு இன்வெர்டர்களும் தமது சக்திகளை இழந்து முழுதும் இருளில் மூழ்கியது. வாயில்லா ஜீவன்களான ஆடு மாடுகள் நாய், கோழிகள் போன்ற செல்லப்பிராணிகளும் வளர்ப்புப் பிராணிகளும் அழிந்து போனது பெரும் துயரம்.
உயிருள்ள மனிதர்கள் மற்றும் பிராணிகளுக்கு மட்டும் தான் இந்த நிலை என்பதாக நின்றுவிடாமல் மோட்டார் வாகனங்களும் வெள்ள நீரில் மூழ்கி சரி செய்ய முடியாமல் பல வாகனங்கள் செயலிழந்து போயின அதனை வைத்து வியாபாரம் மற்றும் போக்குவரத்து என்று பணம் ஈட்டியவர்கள் அடுத்தடுத்து தம் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க முடியாமல் பொருளாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரும் உளைச்சலுக்கு ஆளானார்கள்.
இவற்றையெல்லாம் கண்டும் ஆட்சியாளர்கள் மனமும் அவருடைய கால்களும் ஏனோ சாலைகளில் இறங்கி வரவில்லை, சூழ்ந்து நின்று மக்களை அடித்து துவைத்த வெள்ளக்காடாக காட்சியளித்த தமிழகத்தை தரை தொடாத ஓர் பறவை போல ராட்சச இறக்கைகளை கொண்ட ஹெலிகாப்டர் மூலமாக வானில் பரந்து வட்டமிட்டு பார்த்துவிட்டு பத்திரமாக அவர்களின் பகட்டான வீடுகளுக்குள் புகுந்து கொண்டு மத்திய அரசிற்கு கடிதங்கள் எழுதி அனுப்பி வைத்தனர். துன்பத்தை கண்டும் எந்த பதைபதைப்பும் கொள்ளாமல் மத்திய நிவாரணக் குழுவினரும் ஆற அமர தமிழகம் வந்து பேருக்கு நாலைந்து இடங்களில் பார்வையிட்டு குறிப்பெடுத்துச் சென்றனர். நிவாரணத் தொகையாக சொற்பமாக நிதி ஒதுக்கீடு செய்தார்கள் என்பது இன்னும் கொடுமை.
இந்த அழகில் எதிர்க்கட்சியாக செயல்பட்டவர்கள் அடுத்த ஆட்சிக்கு அச்சாரமாக தங்களது கட்சியின் சார்பில் உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்தும் கண்டன அறிக்கைகள் கொடுத்தும் தங்கள் பொறுப்பை செவ்வனே முடித்துக் கொண்டனர்.
இப்படி பலரின் வாழ்வாதாரங்களை புரட்டிப்போடும் இயற்கையை நாம் ஒன்றும் செய்ய இயலாது, அது மனித சக்திக்கு அப்பாற்பட்டது. இயற்கையை மறைக்கைவோ அதன் தாக்கங்களை தடுக்கவோ முடியாது எனினும் அதற்குண்டான மாற்று ஏற்பாடுகளை செய்வது குறைவான பாதிப்புகளையே தருவதற்கு வாய்ப்புள்ளது.
அதற்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நீர்வழித்தடங்களை மீட்டெடுத்து சீரமைப்பது, தூர்வாரப்படவேண்டிய நீர் தங்கும் ஏரி, குளங்கள், கண்மாய்கள், ஆறுகளின் படுகைகள் சீர் செய்து கரைகளை பலப்படுத்துதல், பெரும் நகரங்களுக்கு நீர் விநியோகம் செய்ய உதவிடும் ஏரிகள் முதலானவற்றை செப்பனிட்டு பராமரிப்பது, மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் முன்பே அமைந்துள்ள மழை நீர் வடிகால்கள் ஆகியவற்றை உள்ளே தங்கியிருக்கும் குப்பை கூளங்கள் சேறு மண் திட்டுகள் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியனவற்றை இயந்திரம் கொண்டு அப்புறப்படுத்தியும் வருவது அல்லது மழை நீர் வடிகால்கள் அமையப்பெறாத சாலைகள் மற்றும் தெருக்களில் அதற்கான வழிமுறைகள் மேற்கொண்டு மக்களுக்கு சிரமம் அதிகமாக ஏற்படா வண்ணம் மிகச்சரியாக திட்டமிட்டு உறுதியான கட்டுமானங்கள் நிர்மானிப்பது அதிலும் எந்த சமரசமும் இன்றி நியாமும் நேர்மையும் கொண்ட திறந்தவெளி டெண்டர்கள் மூலம் கட்டுமானத் துறையில் அனுபவமும் தரமும் கொண்ட நிறுவனத்தினை தேர்வு செய்து அவர்களிடம் பணியை ஒப்படைத்துவிட்டு அப்பணிகள் சரியாக துரிதமாக நடைபெறுகிறதா என துறை அதிகாரிகள் மூலம் அவ்வபோது ஆய்வு செய்து உறுதிபடுத்த வேண்டும்.
இயற்கை பேரிடர்கள் நமது நாட்டின் பொருளாதரத்தை மட்டுமல்லாமல் பொதுமக்களின் வாழ்வாதாரமும் இக்கட்டில் வீழ்ந்து விடக்கூடும். எனவே, மக்களின் நலனே முக்கியம் என்பதாக பதவியில் நீடிக்கும் அரசுகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவது அவசியமாகும்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு தயாராக உள்ளதா..? கமல்ஹாசன் கேள்வி! (malaimurasu.com)
கனமழையைத் தாங்குமா தமிழ்நாடு? கமலஹாசன் கேள்வி… | www.patrikai.com