சென்னை : டிசம்பர் ௦1, 2௦22

HIV எனும் எய்ட்ஸ் தினம் இன்று

1980 களில் இருந்து எய்ட்ஸ் எனப்படும் HIV பாசிடிவ் தாக்கியவர்களுக்கு மரணம் நிச்சயம். இதன் தாக்கம் ஒரு நபரை நிலைகுலையச் செய்துவிடும் மனதளவிலும் சரி உடலளவிலும் சரி மரணத்தை தள்ளிப்போட முயல்வதும் முழுமையாக பலன் தராது.

சரி, இது எப்படி பரவும்/தொற்றும் : ஹெச்.ஐ.வி தொற்றியுள்ள நபர்களின் ரத்தம், விந்து, பெண் குறி திரவம் மற்றும் தாய் பால் போன்ற உடலிலுள்ள நீர்மங்களை பரிமாறிக்கொள்வதன் மூலம்தான் ஹெச்.ஐ.வி பிறருக்கு பரவுகிறது.

எய்ட்ஸ் பாதிப்பு உண்டானால் ஒருவரது உடலில் உள்ள நோய் எதிர்ப்புத் திறனை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து பின்னர் அந்த சக்தியை முற்றிலுமாக அழித்து மரணம் ஏற்படச் செய்து விடும்.

ஆனால் இந்த நோய் பற்றிய புரிதல் பலர் பலவிதமாக பேசிக் கொள்வர். பலரிடம் உடலுறவு கொள்வதால் இந்நோய் பரவுகிறது என்றும் ஓர் கருத்து நிலவுகிறது இது முற்றிலும் தவறான கருத்து. உதாரணமாக எய்ட்ஸ் நோய் இருக்கும் ஒருவர் வேறு பெண்ணிடம் உடலுறவு கொண்டால் அவரிடமிருந்து அந்நோய் அப்பெண்ணிற்கு தொற்றிக் கொள்ளும் ஒருவேளை அந்தப் பெண் பாலியல் தொழிலாளியாக இருக்கும்பட்சத்தில் பலருக்கும் அது விரைவில் பரவக்கூடும். ஒருவருக்கு அந்த நோய் இருப்பது தெரிந்தோ தெரியாமலோ இருக்கும் பட்சத்தில் ஒன்றும் செய்ய இயலாது ஆனால் அந்நோய் இருப்பது தெரிந்தும் அதை மறைப்பது சட்டப்படி குற்றமாகும்.

இது போன்று தம்பதியர் எவரேனும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு பிறந்த குழந்தையும் தாக்கக்கூடிய அபாயம் உண்டு. அப்படி பிறக்கும் குழந்தைகள் எதிர்காலம் மிகுந்த கேள்விக்குறியுடையது. அவர்களுக்கு இச்சமூகத்தில் என்ன மாதிரியான சிக்கல்கள் வரக்கூடும் என்றும் அவர்கள் உயிர்பிழைத்து வாழுகின்ற காலங்களில் அவர்களுக்கு என்ன நிகழும் என்றோ கணிக்க முடியாது. ஆரம்பகட்ட காலங்களில் இதற்கான சிகிச்சைமுறைகளை வழங்கி வருகையில் அவர்களின் வாழ்நாட்கள் இன்னும் கொஞ்சம் நீளும்.

ஆதரவற்ற குழந்தைகள் அல்லது மாற்றுத்திறன் உள்ள குழந்தைகள் (அது உடல் மற்றும் மனம் ஆகியனவற்றை குறிப்பிடலாம்) காப்பகங்கள் பல உள்ளன. அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் வகையிலும் உள்ளன. ஆனால் இது போன்று எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காக்க எந்த அமைப்புகளும் பெரும்பாலும் இல்லை எனலாம்.

இது போன்று அசாதாராண சூழலில் துவக்கப்பட்டது தான் பெற்றால் தான் பிள்ளையா எனும் அரசு சாராத அமைப்பு. தமிழகத்தின் பிரபலமான திரைப்பட கலைஞராக, தயாரிப்பாளராக, இயக்குனராக என இன்னும் பல பல தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்கி பரிணமிக்கும் திரு கமல்ஹாசன் அவர்கள் மற்றும் 1989 முதல் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் இணைந்த திரு ராஜீவ் நம்பியார் பின்னர் ஹலோ FM இல் தலைமை நிர்வாக அதிகாரியாக 7 தனியார் வானொலி அலைவரிசைகளை நிர்வகித்தார்.

இதனிடையே எய்ட்ஸ் நோயினால் தாக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருந்த பல குழந்தைகளை காப்பாற்ற இருவருக்கும் தோன்றிய எண்ணமே பெற்றால் தான் பிள்ளையா எனும் தன்னார்வ அமைப்பு. இது போல் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இனம்கண்டு அரவணைத்து அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் கல்வி போன்ற அத்தியாவசிய தேவைகளை அவர்கள் வாழும் காலம் வரையாவது வழங்கிட வழிவகை செய்யும்பொருட்டே உருவாக்கப்பட்டது இந்த அமைப்பு. அதற்கு திரு கமல்ஹாசன் மற்றும் திரு ராஜீவ் நம்பியார் ஆகிய இருவரும் துவக்கி அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டனர்.

தொடர்ந்து இயங்க ஆரம்பித்த இந்த தொண்டு அமைப்பு எய்ட்ஸ் நோயால் பாதிப்படைந்த பல குழந்தைகளை ஆதரவுடன் தம் கரங்களுக்குள் அணைத்துக் கொண்டது. ஆரம்பகட்ட கல்வி முதல் பட்டப்படிப்புகள் வரை அங்கே அடைக்கலமாகி இருந்த குழந்தைகளுக்கு கொடுக்கத்துவங்கியது. இதற்கு பல தன்னார்வலர்கள் தங்கள் பங்களிப்பைச் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வமைப்பின் தோற்றமும் அதன் செயல்பாடுகளும் அதனால் கிடைக்கப்பெறும் பயனும் யாதெனில் இங்கே PTT யில் சேர்த்துக்கொள்ளப்பட்ட 15 வயதுடைய பெண் பிள்ளையொன்று இங்கே வழங்கப்பட்ட கல்வியின் வாயிலாக படித்து தேர்ச்சியடைந்து வந்த நிலையில் 5௦௦ மதிப்பெண்கள் கொண்ட பத்தாவது அரசு பொதுத்தேர்வில் 450 மதிப்பெண்கள் பெற்றது இன்னும் கூடுதல் சிறப்பு, மேலும் அந்தப் பிள்ளை மேற்கொண்டு படிக்க விரும்பிய துறையாக தேர்வு செய்தது மருத்துவ கல்வியான MBBS என தனது கனவாக அவள் கண்டதை அறிந்த அப்பிள்ளையின் தாய் அக்குழந்தைக்கு தேவையான கல்வியை அதற்கான அமைப்பை உருவாக்கித் தரும் பொருட்டு பணிகளை செய்து அதனால் கிடைக்கபெறும் ஊதியத்தை ஈட்ட முனைவது வாழ்தலை இன்னும் சிறப்பாக அமைத்துக்கொள்ள செய்யப்படும் முயற்சியாக கருதலாம்.

PTT யில் ஆதரவில் இருந்துவரும் அக்குழந்தைகளுக்கு அங்கே நல்ல கல்வியும், கவுன்சிலிங் தரவல்லும் சிறப்பு வல்லுனர்களிடையே மற்றும் சமூகத்தில் இது போன்ற சிறப்பான முன்னெடுப்புகளைச் செய்துவரும் பல தன்னார்வ ஆளுமைகளுடன் கலந்துரையாடச் செய்வதும், அவர்களுக்குரிய அடிப்படை மருத்துவ உதவிகள் முதல் அவர்களின் வாழ்வை இன்னும் கூடுதலாக்க வழி செய்திடும் சிறந்த சிகிச்சைகளையும் எந்த வித இடையூறும் இல்லாமல் தொடர்ந்து அளித்து வருவது இன்னும் கூடுதல் சிறப்பு. இவைகளுடன் நின்று விடாமல் கல்விக்கு பிறகான பணிகளுக்கு அவர்களை தயார்படுத்துதல் மற்றும் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளவேண்டிய நடைமுறைச் சிக்கல்கள் அவர்களின் மீதான பிறரின் பார்வை அதனை சமயோசிதமாக எப்படிக் கையாள்வது என்றும் போதிக்கப்படுகிறது என்றும் அறிய நேர்கிறது.

“இது போன்ற பல குழந்தைகள் தமது தாயை அல்லது தந்தையை இழந்த நிலையில் அங்கே காப்பற்றப்பட்டு வருகிறார்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு கனவு. முதலில் சில குழந்தைகள் அங்கே வளரத் துவங்கினார்கள். நோய் தாக்கப்பட்டதால் ஆதரவற்று இருந்தபோது வளர வளர அவர்கள் தவிர்க்க முடியாத மரணத்தை சந்தித்தே ஆகவேண்டிய காலகட்டத்தில் அவ்வளவு வலிகளை அனுபவிக்கக் கூடாது எனும் நோக்கில் அமைதியாக தமது இறுதிப் பயணத்தை மேற்கொள்ளவே இருக்கும் என்று நினைத்த எங்களது எண்ணத்தை மாற்றி கொள்ளும்படியாக அக்குழந்தைகள் கல்வியிலும் சிறந்து விளங்கத் துவங்கியதும் எங்களுடைய பொறுப்பு இன்னும் கூடுதலாக மாறிப்போனது. அவர்களில் பலர் நன்றாக படித்து பணிகளுக்கும் செல்லத் துவங்கி விட்டதாகவும் பேசியவர் தொடர்ந்து இன்னுமொரு கடினமான கருத்தையும் முன்வைத்தார். அது, பருவமடையும் பெண் குழந்தைகள் அவர்களின் தாய்மார்கள் முன்பே பாலியல் தொழிலில் தம்மை ஈடுபடுத்தி இருந்தாற்போல் தற்போது வளர்ந்து நிற்கும் இக்குழந்தைகள் மனதில் அது போன்ற எந்த எண்ணமும் தொன்றிவிடாமல் கவனமாக பார்த்துக் கொள்வது மேலும் அவர்களின் மனதில் தான் செல்லவேண்டிய அடுத்த கட்ட முயற்சிகளுக்கு தேர்வு செய்யும் வழியாக கௌரவமான ஓர் நல்ல பணியை தேர்வு செய்ய வேண்டியதும் அதற்கான சூழலை அவர்களுக்கு உருவாக்கித் தருவதும் எங்கள் கடைமையாக தெரிகிறது என்று பேசிய திரு கமல்ஹாசன் அவர்களின் சமூக அக்கறையுடன் கூடிய பார்வை எப்படி என்றால் தான் இரண்டு பெண் குழந்தைகளின் தகப்பனாகவும் அவர் PTT யில் உள்ள பெண் குழந்தைகளையும் அது போன்றே நினைப்பதாக நமக்குத் தெரியவருகிறது.

திரைக்கு நடிக்க வந்தோமா படங்கள் நடித்தோமா பணத்தை வாங்கிக் கொண்டு பெட்டியில் பூட்டி வைத்தும், கண்ணுக்கெட்டிய இடங்களில் கட்டிடங்கள், கல்யாண மண்டபம் அல்லது ஷாப்பிங் மால்கள் என கட்டி அதில் வருமானம் தேடாமல் தான் நடிக்கும் படங்களில் ஊதியமாக பெரும் தொகைகளை வருமானவரித்துறை தனில் முறையாக காண்பித்து தணிக்கை செய்து அதற்குண்டான வரிகளை அரசுக்கு செலுத்திவிட்டு பின்னர் அதிலிருந்து தொகைகளை எடுத்து நற்பணிகளுக்கு செலவு செய்வதை தனது வழக்கமாக கொண்டிருக்கும் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்கள் பொதுவெளியில் எங்கும் எந்த ஒளிவுமறைவும் இன்றி மனதிற்கு நல்லது என பட்டதை உரத்துச் சொல்லும் வழமையுடைவர். எவரும் பேசத் துணியாத கருத்துக்களை மனவலிமையுடன் பட்டவர்த்தனமாக எடுத்து வைப்பவர். அது நாட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வதாகட்டும் வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்வதாகட்டும் எதுவாக இருப்பினும் அதில் தனித்துவம் இருக்கவேண்டும் எனவும் நமது சிந்தனைகள் அதன் மூலம் உருவாகும் செயல்கள் அனைத்தும் பிறருக்கு நல்லதையே தர வேண்டும் என்றும் அதில் எந்த சமரசமும் செய்து கொள்ள அவசியமில்லை என்பது மட்டுமில்லாமல் அப்படி தன்னலத்துடன் வாழ்தலும் கூடாது என்பவர் இந்த PTT யில் தமது பங்களிப்பை தந்ததன் மூலம் தான் ஒரு சாதாரண நடிகன் என்று மட்டுமில்லாமல் மனித நேயம் மிக்கவன் என்பதை ஆங்காங்கே இவரைப் பற்றியதாக வரும் செய்திகளில் இருந்தும் நற்பணிகளில் இருந்து அறிய நேர்கிறது.

நமக்கென்ன வந்தது என்றில்லாமல் பேசவே தயங்கும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை கிடைக்கும் நேரங்களில் நிற்கும் மேடைகளில் அங்கே பேச வாய்த்திடும் தருணங்களில் நமது கடமை என்னவென்பதை நாம் உணர்ந்து அதனை மற்றவர்களுக்கும் உணர்த்தவேண்டும் என்று மொழிந்து வந்தவர். அதனாலோ என்னவோ சொன்னதோடு அலல்து பேசியதோடு நின்றுவிடாமல் எய்ட்ஸ் நோய் பற்றிய புரிதலை எடுத்துச் சொல்லி அதனால் பாதிப்படைந்தவர்களை அரவணைத்துச் செல்லுதலும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தருதலும் வேண்டும் என்று தம் கருத்துகளை முன்வைத்தவர் மேற்கண்ட பெற்றால் தான் பிள்ளையா எனும் தன்னார்வத் தொண்டு அமைப்பில் தன்னை இன்னும் ஓர் அறங்காவலராக நிலைநிறுத்திக் கொண்டார், அந்த அமைப்பின் தூதுவராக தன்னை பெருமையுடனும் பொறுப்புடனும் முன்னிருத்திக் கொண்டார் என்றால் மிகையாகாது.

இங்கே இந்த மண்ணில் வாழும் பலர் அவரவர் பெற்றது ஒன்றோ அல்லது இரண்டு பிள்ளைகளோ, அவர்களை வளர்த்து ஆளாக்கி அழகு பார்ப்பது போல், தங்களுக்கு எதனால் எப்படி இந்த நோய் தாக்கியது என்று உணரமுடியாமல் எந்த ஊன்றுகோலும் இல்லாமல் அத்துவான காட்டில் அலல்து பொட்டல்வெளியில் விழுந்த விதையொன்று கிடைத்த கொஞ்சமே தண்ணீர்த் துளிகளை தன்னகத்தே உறிஞ்சி இழுத்துக்கொண்டு மண்ணைப் பிளந்து செடியாக முளை விட அதை எந்தச் சேதாரமும் ஆகாமல் அதனைச் சுற்றி பாதுகாப்பான ஓர் வேலியே பெற்றால் தான் பிள்ளையா.

நீங்கள் சொல்லுங்கள் நாம் பெற்றால் தான் பிள்ளையா ? ஆதரவற்ற பிள்ளைகள் நாம் பெற்றது போல் காப்போம் ஏன் எனில் அன்பு ஒன்றே அள்ளக் குறையாத அள்ளித் தந்தும் சுரந்துகொண்டே இருக்கும் ஆனந்த ஊற்று.

https://twitter.com/PTPTrust?t=KA-mLds-rXdtXfL51RojMQ&s=09