தூத்துக்குடி – ஏப்ரல் 27, 2023
வானமும் பூமியும் வாழும் மக்களுக்குச் சொந்தம் ; இப்படி கொள்ளையடிச்சு பூமி வறண்டு போனா குடிக்கத் தண்ணி எங்கே மிஞ்சும் ?
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் என்பவர் மணல் அள்ளும் மாபியாக்களால் அவரது அலுவலகத்திலேயே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளது நெஞ்சை பதைக்க வைத்துள்ளது.
முறையற்ற அனுமதி பெறாமல் அல்லது போலியான அனுமதி ஒப்புகைகளை வைத்து தொடர்ச்சியாக விதிகளை மீறி தாமிரபரணி ஆற்றில் மண் அள்ளப்பட்டு வருவது கண்டு கிராம நிர்வாக அதிகாரியான பிரான்சிஸ் இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து இதனால் தன உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம் என எண்ணியவர் மாவட்ட நிர்வாகத்திடம் தனக்கு பணியிட மாறுதலும் மற்றும் போதுமான பாதுகாப்பும் வழங்கிட வேண்டும் என்று மனுவும் அளித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இதில் அப்பகுதி காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் அலட்சியமாக இருந்ததாகவும் அறியப்படுகிறது. நேர்மையாக பணியாற்றி வந்த பிரான்சிஸ் மணல் அள்ளும் மாபியாவிடம் சிக்கி தனது அலுவலகத்தினுள் துள்ளத்துடிக்க சரமாரியாக அரிவாள்களால் வெட்டப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.
நீதியும் நேர்மையும் இருக்க வேண்டுமென பள்ளிப் படிப்பின்போது மனதிற்கும் புத்திக்கும் சொல்லித்தரப்படும். ஆனால் பிற்பாடு பணமும் பொருளும் சேரச் சேர அசைக்க முடியாத சொத்துக்களான அவை இரண்டும் காணாமல் போய் விடுகிறது. எனினும் பிரான்சிஸ் இறுதிவரை அதனை கடைபிடித்ததால் இப்போது அவர் தனது உயிரை இழந்திருக்கிறார். அப்படியெனில் விலைமதிப்பில்லா உயிரை விட கட்டுகட்டாக சேர்க்கும் பணத்திற்கும் அதிகாரத்திற்கும் அவ்வளவு மதிப்பு உள்ளதா என்ன ?
இயற்கை வளங்கள் முறையற்ற வழியில் எவரும் சொந்தம் கொண்டாட முடியாது அதனை உரிய துறைகளின் மூலமே அறிவுறுத்தப்பட்ட அனுமதிக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே எடுக்க முடியும். அப்படி விதிகளை மீறி சூறையாடப்படும் இயற்கை வளங்கள் இன்றைக்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு மதிப்புள்ளவையாக இருந்தாலும் மனிதர்கள் வாழ தேவையான இயற்கைச்சூழல் நிச்சயம் இருப்பது மிக அத்தியாவசியமானது.
அவ்வாறு இல்லாமல் இயற்கை வளங்களை சுரண்டி சுரண்டி ஒன்றும் இல்லாத மலடாக்க முற்பட்டால் அதன் விளைவுகள் நிச்சயம் பேரழிவுகள் உண்டாக காரணம் ஆகிவிடும். ஏன் என்றால் வானமும் பூமியும் வாழும் மக்களுக்குச் சொந்தம் ; இப்படி கொள்ளையடிச்சு பூமி வறண்டு போனா குடிக்கத் தண்ணி எங்கே மிஞ்சும் ?