ஜூலை 27, 2௦23

2௦15 ஆண்டு ஜூலை 27 அன்று மறைந்த இந்திய விஞ்ஞானி மற்றும் முன்னாள் ஜனாதிபதியுமான திரு அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் நாடு முழுவதும் நினைவு கூரப்படுகிறது. அது குறித்து மக்கள் நீதி மய்யத் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கீழ்கண்டவாறு தம் அஞ்சலியை பகிர்ந்துள்ளார்.

வான் அறிவியலிலும் வாழ்வியல் நெறிகளிலும் சிறந்து விளங்கிய மாமனிதர், ஒரு பொன்னுலகைக் கனவு கண்டு அதை மாணவ சமுதாயத்திடம் விதைத்துப் போனவர், சூழியலும் நாட்டின் சூழ்நிலைகளும் மேம்பட தன் சிந்தனை மொத்தமும் செலவிட்டவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள். அந்தப் பெருமனிதரை இந்நாளில் நினைவு கூர்வோம்.திரு கமல்ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம்

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam, 15 அக்டோபர் 1931 – 27 ஜூலை 2015) பிறந்த ஊர் ராமேஸ்வரம் எனும் ஓர் சிறிய தீவு போன்ற நகரம். பிறந்த நேரத்தில் வளர்ந்து ஆளாகி இவ்வளவு பெயர் புகழ் பதவிகள் அடைவார் என அங்கே யாரும் நினைத்திடவில்லை. காலம் செல்ல செல்ல திரு அப்துல் கலாம் அவர்கள் படிப்பில் சிறந்த முன்னோடியாக விளங்கி வான்வெளி அறிவியல் மேதையாகி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தலைவராகவும், இந்திய விண்வெளி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகவும் பதவி வகித்தவர் முதல் இந்தியக் குடிமகன் எனும் ஜனாதிபதி பதவியை அலங்கரித்தார். 1974 ஆம் ஆண்டில் முதல் அணு ஆயுத சோதனை மற்றும் 1998 போக்ரான் – 2 எனும் அணு ஆயுத சோதனையும் இவருடைய தலைமையின் கீழ் நடைபெற்றது. இந்தியாவின் இரண்டு பெரிய கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவில் திருமதி லட்சுமி சேகல் என்பவரை தோற்கச் செய்து இந்திய குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினார்.

இந்தியா 2௦2௦ எனும் தனது எழுத்தில் உருவான புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற பல திட்டங்களை முன்மொழிந்துள்ளார். இந்த நூல் மட்டுமல்லாமல் இவரின் பல நூல்கள் கொரிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தென்கொரியாவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர் 2௦11 இல் தேச இளைஞர்களுக்காக இந்தியாவில் ஊழலை ஒழிப்பதை மையக்கருவாக கொண்டு “நான் என்ன தரமுடியும்” என்ற இயக்கத்தை துவங்கினார்.

திரு கலாம் அவர்களுக்கு இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம பூசன், பத்ம விபூஷன், பாரத ரத்னா, மற்றும் ஹூவர் பதக்கம், என்.எஸ்.எஸ்.வான் புரான் பதக்கம் உள்ளிட்ட பல விருதுகள் அவரால் பெரும கொண்டது எனலாம். 1970லிருந்து 1990 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் கலாம் போலார் எஸ் எல் வி மற்றும் எஸ்.எல்.வி-III திட்டங்களுக்காக முயற்சி மேற்கொண்டார். இரண்டு திட்டங்களும் வெற்றிகரமாக முடிந்தன.

2௦15 ஆம் ஆண்டு மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் தலைநகரில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடயே உரையாற்றிக் கொண்டிருந்த போது சுமார் மாலை 6.3௦ மணிக்கு பேசியபடியே மேடையிலேயே மயங்கிச் சரிந்து விழுந்தார், பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது பூத உடல் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் கொண்டு வரப்பட்டு 21 குண்டுகள் முழங்க பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு அமைச்சர்கள் கலந்துகொள்ள ராணுவ மரியாதையுடன் பேய்க்கரும்பு எனுமிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.