ஜூலை : 2௦, 2023 Updated: 22.07.23

கடந்த ஏப்ரல் மாதத்தில் மெய்தி இன மக்களை பட்டியலினமாக அறிவிக்க வேண்டும் என்பதை பரிசீலிக்குமாறு மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட்டது அம்மாநிலத்தின் உயர்நீதிமன்றம். ஒருவேளை அப்படி மெய்தி மக்களுக்கு பட்டியலின சலுகை வழங்கினால் மலைப்பகுதிகளில் நிலங்களை வாங்கிக் குவிப்பர் என குக்கி இன மக்கள் அச்சம் கொண்டனர் ஏனெனில் வழிவழியாக மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருவது குக்கி இன மக்கள் தான். மெய்தி இன மக்கள் குக்கி மலைப்பகுதிகளில் நிலங்கள் வாங்க முடியாது என இயற்றப்பட்ட சட்டமே ஒன்றும் அமலில் உள்ளது. நிலைமை இப்படி இருக்க உயர்நீதிமன்றத்தின் இந்த அணுகுமுறை இரு சாராருக்கும் மோதலை உருவாக்க வைத்துவிட்டது. மணிப்பூர் மாநிலத்தில் 3.5 மில்லியன் மக்கள் தொகையில் சுமார் 40% சதவிகிதம் அடங்கிய குக்கி மற்றும் நாகாக்கள் அடங்கிய பழங்குடி மக்கள் பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள்.

ஏப்ரல் 28 ஆம் தேதி துவங்கிய மோதல் இன்னமும் முடிவுக்கு வராமல் வலுத்து வருகிறது. 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்ட போதிலும் இருசாராருக்கும் இடையில் எந்த சமரசமும் ஏற்படவில்லை. அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர், இந்திய ராணுவத்தின் துணைநிலை இராணுவப்படைகள், இந்திய ராணுவத்தின் 55 ஆவது பட்டாலியன் படைகளும் மணிப்பூரில் குவிக்கப்பட்டன. இருந்தும் எந்த வித உடன்பாடுகளும் ஏற்படாமல் இருந்தன. இதனிடையில் 2௦ தேதியன்று சமூக வலைதளங்களில் திடீரென ஓர் சில மணித்துளிகள் ஓடும் காணொளி வெளியாகி பரப்பானது. அதில் இருந்து உணர்ந்து கொண்டது என்னவெனில் சுமார் 2௦ வயது முதல் 21 வயதுடைய இரண்டு இளம்பெண்களின் ஆடைகள் களையப்பட்டு முற்றிலும் நிர்வாணமாக சாலையில் கலவரக்காரர்களால் பலவந்தமாக ஊர்வலம் போன்று அழைத்துவரப்பட்டனர். சுற்றிலும் ஏராளமான நபர்கள் கூச்சலிட்டபடியே வந்ததாக பதிவாகியுள்ளது (சுமார் ஆயிரம் நபர்கள் என செய்திகளில் குறிப்பிடப்பட்டு இருந்தது).

குறிப்பாக இந்தக் காணொளியில் கண்ட அதிர்ச்சி தரும் சம்பவம் கடந்த மே மாதம் 3 ஆம் தேதி எனவும் தெரியவந்துள்ளது. சில நாட்களுக்கு மணிப்பூரில் இணைய வசதி தடைசெய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தக் காணொளி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை உண்டாக்கியது, பல தரப்பில் இருந்து பெரும் கண்டனங்கள் மணிப்பூர் அரசின் மீதும் மத்திய அரசின் மீதும் வலுத்தன. இச்சம்பவம் குறித்து மணிப்பூர் காவல்துறை கடந்த மே மாதம் 18 தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் குற்றவாளிகளை தேடி வருவதாகவும் தெரிவித்தது.

இந்தியாவின் அரசியல் கட்சிகள் பலவும் இது குறித்து வன்மையாக கண்டித்துள்ளனர். அதே போன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்களும் மனம் வெதும்பி அப்பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஜனாதிபதி ஆட்சியின் மூலமாக மற்றும் சட்டத்தின் மூலமாக கிடைக்கச் செய்ய வேண்டும் எனும் கருத்தில் கொண்டு மணிப்பூர் மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரம் முற்றிலுமாக செயலிழந்துவிட்டது, ஜனாதிபதியின் ஆட்சியை செயலாக்க இதுவே தக்க தருணம் என்பது தெளிவாக தெரிகிறது” என தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Breakdown of Constitutional machinery in Manipur. Clear case for President’s rule. – Kamal Haasan, President, Makkal Needhi Maiam

பாரத மாதா என்றும் பூமித்தாய் என்றும் பெண்களை போற்றும் இந்தியாவின் ஓர் மாநிலத்தில் இப்படி பெண்களை நிர்வாணமாக்கி வன்புணர்வு செய்தது உலகளவில் நம் நாட்டின் மீதான மதிப்பை அடியோடு குறைத்து விடுகிறது என்றும் பெண்களை போற்றும் பாரம்பரியமும், பண்பும் கொண்ட நம் நாட்டில் தொடர்ந்து நடந்து வரும் இது போன்ற அருவருக்கத்தக்க பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் மற்றும் வன்முறைகள் யாவும் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும் இதற்கான முயற்சிகளில் மாநில அரசுகளும் மத்திய அரசும் ஈடுபட வேண்டும் என்றும் பல தரப்பிலும் கோரிக்கைகள் வலுத்துவருகிறது.