ஆகஸ்ட் : 26, 2௦23

மத்திய அரசின் இந்தித் திணிப்பிற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்!

தேசிய தொழில்நுட்ப கழக பணி நியமன அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல். துணைத் தலைவர் திரு. தங்கவேலு அவர்கள் அறிக்கை.

தேசிய தொழில்நுட்பக் கழகக் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில், ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு இந்தி மொழித் தேர்வை கட்டாயமாக்கி தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ள பணி நியமன அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் கடுமையாகக் கண்டிக்கிறது. ராய்ப்பூர், ஜாம்ஷெட்பூர், கோழிக்கோடு, ராஞ்சி உள்ளிட்ட நகரங்களில் செயல்படும் தேசிய தொழில்நுட்பக் கழக கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 10 கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் அல்லாத அலுவலர் பணி நியமனங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பானது சமீபத்தில் தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்வு பெறுவதற்கு இந்தி மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது‌ மத்திய அரசின் அப்பட்டமான இந்தித் திணிப்பு அணுகுமுறையாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியை மட்டும் தொடர்ந்து தூக்கிப் பிடித்துக் கொண்டே செல்வது நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைக்கும் முயற்சியாகும். அதனால்தான் தமிழ்நாடு தொடர்ந்து இந்தித் திணிப்பை எதிர்த்து வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களுக்கு மத்திய அரசு இழைக்கும் இந்த அநீதியால், இந்த மாநிலங்களிலுள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுகிறது என்ற அடிப்படைப் புரிதலைக் கூட மத்திய அரசு உணர மறுப்பதேன் ? மத்திய அரசு என்பது அனைத்து மாநிலங்களுக்கான அரசா? இல்லை இந்தி பேசும் மாநிலங்களுக்கான அரசா? பலவழிகளில் இந்தியை வலிந்து திணிக்கும் அநீதிப்போக்கை இனியாவது மத்திய அரசு நிறுத்திக்கொள்ளவேண்டும். உடனடியாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள இந்தித் திணிப்பு அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்.

#KamalHaasan #MakkalNeedhiMaiam