சென்னை : செப்டெம்பர் 07, 2023

சனாதனம் : இது பெரும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. சரி அப்படி என்றால் என்ன ?

சனாதன தர்மம் என்பது சமஸ்கிருத சொல்லாகும். இதற்கு நிலையான தத்துவ ஞானம், நிலையான நம்பிக்கை, அசைக்க முடியாத நித்திய சட்டம், மரியாதைக்குரிய ஒழுங்கு முறை என்பதே இதுவரையிலும் அதன் பொருள்களாக புரிந்துகொள்ளப்பட்டு வருகிறது. பொதுவாக தர்மம் என்பது சனாதன தர்மம், வர்ணாசிரம தர்மம் என இரண்டு வகையாக சொல்லப்படுகிறது.

இதில் பலவிதமான அடக்குமுறைகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது எனலாம். இன்ன சாதியை சேர்ந்தவர்கள் இன்னார் இன்ன தொழிலை தான் செய்ய வேண்டும், என்பதும் அவர்களுக்கான அனுமதி குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே எனவும் பெண்களுக்கு சம உரிமைகள் என்பது அவசியமற்றது அவர்களுக்கு பல விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதும் அதில் சர்ச்சையை ஏற்படுத்தும் விதிகளாக கருதப்படுகிறது. இதையே காலம்காலமாக செய்துவர வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளதாக கூறுவதை எதிர்த்து தான் தமிழகத்தில் தந்தை பெரியார் முதலானோர் போராடினர். இதனிடையில் தற்போது மத்தியில் உள்ள ஆட்சியினை சேர்ந்த அரசியல்வாதிகள் நாளொரு கருத்துகளை பேசி வருகின்றனர். சமீபத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் தமிழ்நாடு அரசின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உரையாற்றும் போது பழங்கால மூடநம்பிக்கைகள் பிற்போக்குத்தனமான சனாதன தர்மம் கொள்கைகள் நிலையான ஒன்றல்ல அவைகளை காலரா டெங்கு போன்ற உயிர்கொல்லும் நோய்கள் போன்றவை அவற்றை ஒழித்துவிட வேண்டும் என்று பேசியது தற்போது தமிழ்நாடு மட்டுமல்லாது பரவலாக பலமாநிலங்களில் விவாதத்திற்கு உள்ளாகும் கருத்தாக அமைந்தது. இதனிடையே வட மாநிலத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நிழற்படத்தை கத்தியால் கிழித்து அதனை தீ வைத்து எரித்துக் கொண்டே உதயநிதியின் தலையை துண்டித்து கொண்டு வருபவருக்கு 1௦ கோடி ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளதும் பெரும் சர்ச்சையாகி உள்ளது.

இந்த இரு சர்ச்சைகளிலும் எழுந்துள்ள பலதரப்பட்ட கருத்துக்களை உணர்ந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள், ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவரும் தத்தமது கருத்துக்களை பொதுவெளியில் முன்வைக்க உரிமை உள்ளது. அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏதேனும் இருந்தால் இருதரப்பிலும் ஆரோக்கியமான விவாதங்கள் மேற்கொள்வதில் எந்த தவறும் இல்லை. அதை விடுத்து வன்முறையை தூண்டும் விதமாக கொஞ்சமும் பொறுப்பற்ற முறையில் கொடூரச் செயலை செய்தால் பரிசு தருவதாக அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது என்றும் உண்மையான ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு அதன் குடிமக்கள் கருத்துவேறுபாடு ஏற்படும்பொழுது ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபடுவதாகும். சரியான கேள்விகளைக் கேட்பது சரியான பதில்களுக்கு வழிவகுத்தது சிறந்த சமூக வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நமக்கு கற்பித்துள்ளது என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

The hallmark of a true democracy is the ability of its citizens to disagree and engage in continued discussion. History has repeatedly taught us that asking the right questions has led to important answers and contributed to our development as a better society. Mr. Udhayanithi Stalin is entitled to his views on Sanatana. If you disagree with his viewpoint, it is important to engage in a discussion based on the merits of Sanatana instead of resorting to threats of violence or legal intimidation tactics, or distorting his words to evoke emotional responses for narrow political gains. Tamil Nadu has always been a safe space for healthy debates, and it will continue to remain so. It is crucial to critically evaluate our traditions, ensuring inclusivity, equality, and progress. Let’s embrace constructive discussions to foster a harmonious and inclusive society. – Mr. Kamal Haasan, President – Makkal Needhi Maiam

திரு.கமல்ஹாசன் அவர்களின் ஆங்கில ட்வீட்டின் தமிழாக்கம்

உண்மையான ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு அதன் குடிமக்கள் கருத்து வேறுபாடு ஏற்படும்பொழுது ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபடுவதாகும்.

சரியான கேள்விகளைக் கேட்பது சரியான பதில்களுக்கு வழிவகுத்தது சிறந்த சமூக வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நமக்குக் கற்பித்துள்ளது…

திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சனாதனத்தைப் பற்றிய தனது கருத்துக்களை கூற
உரிமை உண்டு..

அவருடைய கருத்துடன் நீங்கள் உடன்படவில்லை என்றால், வன்முறை அச்சுறுத்தல்கள் அல்லது சட்டரீதியான மிரட்டல் உத்திகள் அல்லது குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக உணர்ச்சிபூர்வமான பதில்களைத் தூண்டும் வகையில் அவரது வார்த்தைகளைத் திரித்துக் கூறுவதற்குப் பதிலாக, சனாதனத்தின் தகுதியின் அடிப்படையில் விவாதத்தில் ஈடுபடுவது முக்கியம்.

ஆரோக்கியமான விவாதங்களுக்கு தமிழ்நாடு எப்போதும் பாதுகாப்பான இடமாக இருந்து வருகிறது, அது தொடர்ந்தும் இருக்கும்..

அனைவருக்கும் உண்டான, சமத்துவம் மற்றும் முன்னேற்றத்தை உறுதிசெய்து, நமது மரபுகளை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்வது மிகவும் முக்கியமானது.

இணக்கமான மற்றும் உள்ளடக்கிய சமூகத்தை வளர்ப்பதற்கு ஆக்கபூர்வமான விவாதங்களை ஏற்றுக்கொள்வோம். – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்