ஜனவரி 31, 2024

நகைச்சுவை என்பது மனிதற்கு அவர்களின் நலனுக்கு உகந்தது, சிரிப்பு ஒருவரது வாழ்வியலை சிக்கல் என்ன வந்தாலும் அவற்றிலிருந்து சிறிது நேரமாவது விடுபடுவது சிரிப்பினால் தான். அதனால் தான் என்னவோ இடுக்கண் வருங்கால் நகுக என்றும் கள்ளம் கபடமில்லா சிரிப்பு காலத்துக்கும் நல்லது எனவும் பல சொலவடைகள் இங்கே தொன்று தொட்டு பேசப்படுகிறது. வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பதும் நம்மிடையே உலவும் சொற்றொடர் தான்.

மன்னராட்சி காலங்களில் அரசவையில் விகடகவிகள் இருந்ததாக பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது கிருஷ்ண தேவராயர் மன்னரின் அவையில் விகடகவியாக இருந்தவர் தெனாலிராமன் எனவும் அவரின் நகைச்சுவை உணர்வும் புத்திசாலித்தனமும் ஒருங்கே அமையப்பெற்றவர் எனவும் கூறப்படுகிறது.

உலகளாவிய திரைப்படங்களில் நகைச்சுவையாக நடிகர்கள் பலர் கோலோச்சிய வரலாறும் உண்டு. உதாரணமாக சொல்வதென்றால் வசனங்கள் இல்லாமல் மௌன படங்களில் மறைந்த சார்லி சாப்ளின் நடித்த திரைப்படங்கள் இன்றைக்கும் காலத்தால் அழியாதவை. லாரல் ஹார்டி தொடங்கி வால்ட் டிஸ்னி சகோதரர்கள் வடிவமைத்த கார்டூன்களில் டாம், ஜெர்ரி, மிக்கி டொனல்ட் என அனிமேஷன்களும் காண்போரில் சிறியவர் பெரியவர் என எந்த வித்தியாசமுமில்லாமல் அனைத்து வயதினரும் இன்றைக்கும் ரசிக்கக்கூடியவை என்றால் மிகையாகாது.

நகைச்சுவை நடிகர்கள் எல்லா காலத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள், தமிழ்த் திரையுலகில் திரைப்படங்கள் எடுக்கத் துவங்கியதில் இருந்து இன்றுவரை எவ்வளவோ நகைச்சுவைக் கலைஞர்கள் தங்களது சிரிப்பு ததும்பும் நடிப்பை திரைப்படங்களில் காண்பித்து தங்களுக்கென ரசிகர் வட்டங்களை ஏற்படுத்தி இருந்தார்கள். அதில் மிகக் குறிப்பிட்டு சொல்வதென்றால் திரு.நாகேஷ் அவர்கள் (அவரது இயற்பெயர் குண்டுராவ் ஆனால் இதிலேயே உள்ள நகைச்சுவை என்னவென்றால் அவரது பெயருக்கும் உருவத்திற்கும் சிறிதும் சம்பந்தம் இருக்காது என்பது தெள்ளத்தெளிவாக தெரியும் ஏனெனில் நாகேஷ் அவர்கள் மெலிந்த தேகம் கொண்டவர், இதை பல மேடைகளில் சுவைபடச் சொல்லி இருக்கிறார்)

நாகேஷ் அவர்கள் நகைச்சுவை காட்சிகளில் நடிப்பது மட்டுமல்லாமல் மிகச்சிறந்த நடன கலைஞரும் கூட. அவரது நடனங்கள் பலவும் மிகவும் வித்தியாசமாகவும் நளினமாகவும் அதிலும் கூட நகைச்சுவை வெளிப்படும் தன்மையுடன் இருக்கும் என்பதை பல பாடல்களில் இடம்பெற்ற நடனக் காட்சிகளில் காணலாம்.

நகைச்சுவை நடிகராக வலம்வந்தவர் இயக்குனர் சிகரம் திரு.கே.பாலசந்தர் அவர்களின் பல படங்களில் கதையின் நாயகனாக கோலோச்சியதும் உண்டு. தமிழ்த் திரையுலகில் கதாநாயகர்களாக அசைக்கமுடியாத இடங்களில் இருந்த திரு.எம்ஜிஆர், திரு.சிவாஜி, திரு.ஜெமினி கணேசன் உட்பட பலருடன் அவர்களுக்கு இணையாக படம் முழுவதும் வந்து அந்த கதாபாத்திரத்தின் தன்மையை மக்களின் மனங்களில் இடம்பெற்றார்.

நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தமது படங்களில் திரு.நாகேஷ் அவர்களை மிக முக்கியமான கதாபாத்திரங்களில் இடம்பெற செய்துவிடுவார். இருவரும் போட்டி போட்டுக்கொண்டு தத்தமது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி விடுவார்கள். நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட நாகேஷ் அவர்களை முதன்முறையாக அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தில் (உயரம் குறைவாக அப்பு என்ற கேரக்டர் மற்றும் சாதாரண உயரத்தில் கார் மெக்கானிக்காக வரும் ராஜா, எல்லாவற்றுக்கும் மேலாக இவர்கள் இருவரின் அப்பாவாக இன்ஸ்பெக்டர் சேதுபதி என மூன்று வேடங்களில் நம்மவர் நடித்து பெரும் வெற்றி பெற்ற படம்) நான்கு வில்லன்களில் ஒருவராக நடிக்க வைத்து வித்தியாசம் காண்பித்தார், தனக்கு கொடுத்த பாத்திரத்தை உணர்ந்து புரிந்து கொண்டு தனக்கு நகைச்சுவை தான் பிரதானம் என்றாலும் வில்லத்தனமும் வரும் என்பதை நிரூபணம் செய்தார் திரு.நாகேஷ் அவர்கள்.

நடிப்பில் உச்சம் தொட்ட திரு.நாகேஷ் அவர்களை தனது குருவாக நினைக்கும் திரு.கமல்ஹாசன், அவர்கள் அவரது நினைவு நாளில் போற்றத்தக்க வகையில் புகழஞ்சலி வெளியிட்டுள்ளார்.

“நகைச்சுவை நடிப்பில் தனித்துவம் மிக்க மேதையாகத் திகழ்ந்த நாகேஷ் அவர்களின் நினைவு நாள் இன்று. அவரது பெயரை நான் உச்சரிக்காத நாளென ஒன்று இருந்ததில்லை. கதாபாத்திரத்தின் அகமும் புறமும் அறிந்து, ஆழமும் அகலமுமாக வெள்ளித் திரையில் நிலைநிறுத்திக் காட்டுகிற ஆற்றலால் என்னை ஆட்கொண்ட ஆசிரியர் அவர். காலத்தால் அழியாத கலைஞனின் நினைவுகளைப் போற்றுகிறேன்.”திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்