மதுரை : ஜனவரி 31, 2024
தமிழ்த்திரையுலகில் உச்சத்தில் இருக்கும் ஓர் பிரபல நடிகரான திரு.கமல்ஹாசன் அவர்கள், தான் பெறுகிற ஊதியங்களை வங்கிப் பரிமாற்றங்களின் வழியாகவே பெற்றுக் கொள்வதும் அதற்கான வருமானவரி தொகையை முறையாக செலுத்தி விடுவதும் அனைவரும் அறிந்ததே. குறிப்பாக கணக்கு வழக்கற்ற வகையில் கோடிகள் புரளும் திரையுலகில் இப்படி சம்பளம் பெறும் நடிகர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம் அப்படி பட்டியலில் முதலிடம் நிச்சயம் நம்மவருக்கு உண்டு.
திரைப்படங்களில் உண்டாகும் வெற்றி தோல்விகள், அதனால் கிடைக்கும் லாபத்திற்கு ஆர்ப்பரித்ததில்லை, படங்கள் வசூல்ரீதியாக நட்டம் அடைந்தது என்றால் அவர் சோர்ந்து போனதுமில்லை, அப்படி படங்கள் வெற்றியடைந்தால் கிடைத்த லாபத்தினை வைத்து மீண்டும் ஓர் படமெடுப்பார். வித்தியாச கதைக்களங்களை தமது சொந்த நிறுவனம் மூலமே எடுப்பது வாடிக்கை. அந்த வகையில் அவருக்கு பொருளாதார சிக்கலை உண்டாக்கிய படங்கள் சில உண்டு ஆயினும் அந்த படைப்பு போற்றப்படுவதுண்டு.
படங்களை உருவாக்கிட மெனக்கெடும் நம்மவர் திரு.கமல்ஹாசன் எவரும் எதிர்பாராத வண்ணம் அரசியலில் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை துவக்கி இதுவரை மூன்று தேர்தல்களை சந்தித்துள்ளார், ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை வஞ்சகத்தால் பறித்துக் கொண்டனர் எதிர்கட்சியினர். இதனை அறிந்து தமிழ்நாடு மற்றும் நாடு கடந்து வாழும் எண்ணிலடங்கா ரசிகர்கள், ஆதரவாளர்கள் பலரும் வேதனையும் ஆதங்கமும் அடைந்தனர்.
அப்படி ஓர் ஆதரவாளர் தமது உள்ளக்கிடக்கையை ஓர் கடிதம் மூலம் நாளிதழில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதனை அப்படியே அச்சில் ஏற்றி வாசகர்களாகிய உங்களின் பார்வைக்கு இங்கே வெளியிடுகிறோம்.
நேர்மையான கமலை புறக்கணிக்காதீர்கள் !
நடிகர் கமல்ஹாசன் கட்சி துவக்கியபோதே, தான் ஊழல் செய்து சம்பாதிக்க வரவில்லை என அறிவித்தார். சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தில் நற்பணிகள், கட்சிப் பணிகளை செய்துவருகிறார்.
‘நேர்மை ஒன்றே லட்சியம்’ என்று முழங்கிய அவரது மக்கள் நீதி மய்யம், தேர்தலில் வெற்றி பெறவில்லை ; அதற்கு காரணம் ஆளும், ஆண்ட கட்சிகளின் ஊழல் பணம் தான்.
தங்களுடைய ஊழல் பணத்தில், மக்களுக்கும் பங்கு கொடுத்து, ஓட்டு பெற்று, மீண்டும் ஊழலைத் துவங்குகின்றனர்.
‘தேர்தலில் வெற்றி கட்டாயம் இருந்தால் ஆரம்பத்திலேயே கூட்டணி அமைத்து வென்று இருப்போம். நேர்மையான அரசியலை முன்னெடுத்தால் தோல்வி தான் எனும் நிலைப்பாடு மாற வேண்டும்’ என கமல்ஹாசன் கருதுகிறார்.
அரசியல் கலகலப்புக்கு மற்ற தலைவர்கள் இருக்கின்றனர் ; நேர்மையான அரசியலுக்கு கமல் இருக்கிறார்.
உண்மையான தலைவர்கள், உயிருடன் இருக்கும்போது அவர்களைப் புறக்கணிப்பதும், அவர் மறைவுக்குப் பின் அவரைப் போற்றுவதும் வாடிக்கையாகி விட்டது. அதற்கு சமீபத்திய மிகச்சிறந்த உதாரணம், விஜயகாந்த்.
எனவே, நேர்மையான அரசியல் செய்யும் கமல்ஹாசனை நையாண்டி செய்து புறக்கணிக்காதீர்கள்.
கருத்தும் & எழுத்தும் : பெ.பரதன், மதுரை
நன்றி : தினமலர் நாளிதழ் (31.01.2024)