மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சியின்‌ மண்டல செயற்குழுக்‌ கூட்டம்‌, நேற்று (20.11.2021) மதுரையில்‌ நடைபெற்றது. கட்சியின்‌ துணைத்‌ தலைவர்கள்‌ திரு.A.G.மெளரியா,IPS., (ஒய்வு) அவர்கள்‌ தலைமையிலும்‌, திரு.R.தங்கவேலு அவர்கள்‌ முன்னிலையிலும்‌ நடைபெற்ற இக்கூட்டத்தில்‌, நகர்ப்புற உள்ளாட்சித்‌ தேர்தல்‌ தொடர்பான கலந்துரையாடல்‌, நிர்வாகிகளுடனான ஆலோசனை, மய்ய உறுப்பினர்களின்‌ சொற்பொழிவு, நகர்ப்புற உள்ளாட்சித்‌ தேர்தல்‌ குறித்த வியூகங்கள்‌ எனப்‌ பல்வேறு விஷயங்கள்‌ கலந்தாலோசிக்கப்பட்டன.

மேலும்‌, வரவிருக்கும்‌ நகர்ப்புற உள்ளாட்சித்‌ தேர்தலில்‌ மய்ய வேட்பாளர்கள்‌ பங்குகொள்வதோடு, தேர்தலில்‌ அவர்கள்‌ பெறும்‌ வெற்றியை கட்சித்‌ தலைவருக்கு சமர்ப்பிப்பதாகவும்‌ முடிவு எடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தின்‌ தொடக்கத்தில்‌, மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள்‌ 50 பேர்‌ பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி, மக்கள்‌ நீதி மய்யத்தில்‌ இணைந்தனர்‌. அவர்களுக்கு மக்கள்‌ நீதி மய்யக்‌ கட்சியின்‌ மதுரை மண்டல உறுப்பினர்‌ அட்டை வழங்கி கெளரவிக்கப்பட்டது.

வெகுசிறப்பாக நடைபெற்ற இக்கூட்டத்தில்‌ கட்சியின்‌ மாநில நிர்வாகிகள்‌, மண்டல மற்றும்‌ மாவட்ட நிர்வாகிகள்‌, உறுப்பினர்கள்‌ அனைவரும்‌ கலந்துகொண்டனர்‌. இதற்கான ஏற்பாடுகளை, மதுரை மண்டலச்‌ செயலாளர்‌ திரு.M.அழகர்‌ அவர்களும்‌, மதுரை மாவட்ட நிர்வாகிகளும்‌ செய்திருந்தனர்‌.