தமிழ்நாடு உதகமண்டலம் டிசம்பர் 9, குன்னூர் அருகே காட்டேரி பூங்கா நஞ்சப்ப சத்திரம் பகுதியில் நேற்று (08.12.2021 – புதன்கிழமை) மதியம் எம்.ஐ. 17 வி5 ரகத்தைச் சேர்ந்த இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த நமது நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதி உயர்திரு பிபின் லட்சுமண் சிங் ராவத் மற்றும் அவரது மனைவி திருமதி மதுலிகா ராவத் ஆகிய இருவர் உட்பட ராணுவ உயரதிகாரிகள் என மொத்தம் 13 பேர்கள் இந்த விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார்கள் என தெரியவந்துள்ளது.

புதன்கிழமை மதியம் சுமார் 12.10 மணி முதல் 12.15 மணிக்குள் மேற்குறிப்பிட்ட பகுதியில் இந்த விபத்து நடந்தது என அறியப்படுகிறது. இதில் சிக்கி உயிரிழந்த பிபின் ராவத், மதுலிகா ராவத் உட்பட மற்ற இராணுவ துறையை சேர்ந்த அதிகாரிகள் பிரிகேடியர் லிடர், ஹரிஜந்தர் சிங், நாயக் குர்ஷே வக்சிங், நாயக் ஜிதேந்திர குமார், லான்ஸ் நாயக் விவேக்குமார், லான்ஸ் நாயக் சாய் தேஜா மற்றும் ஹவில்தார் சத்பால் ஆகியோர்.

அதிர்ச்சியடைய வைத்த இந்த விபத்தினால் உயிரிழந்த தளபதி பிபின் ராவத் உட்பட மற்ற அதிகாரிகளுக்கு தனது இரங்கல்களை நமது தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தலைவர் அவர்களின் ட்விட்

மக்கள் நீதி மய்யம் பொள்ளாச்சி கிளை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஒன்று கூடி மெழுகுவர்த்திகளை ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.

எதிர்பாராமல் நிகழ்ந்த இவ்விபத்தில் உயிரழந்த அத்தனை பேருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது மக்கள் நீதி மய்யம் – மய்யத்தமிழர்கள்.

மக்கள் நீதி மய்யம் கோவை கிளை அலுவலகத்தில் மாநில செயலாளர் கோவை தங்கவேலு அவர்கள் தலைமையில், டாக்டர் திருமதி அனுஷா ரவி – மாநில செயலாளர் (கொள்கை பரப்பு), திருமதி மூகாம்பிகா ரத்தினம் (மாநில செயலாளர் – மகளிர் & குழந்தைகள் நலன்), திரு A. ரங்கநாதன் கோவை மண்டல செயலாளர் ஆகியோர் முன்னிலையில் கிளை நிர்வாகிகள் ஒன்று கூடி மெழுகுவர்த்திகளை ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.

அதே போன்று தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யம் சார்பாக கிளை அலுவலகங்களில் விபத்தில் பலியானவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.