“உங்கொப்புரான் நான் சத்தியமா காவல்காரன் நீ ஒப்புக்கொள்ள மறுத்தாலும் நான் காவல்காரன்” என்று தொடங்கும் பாடல் ஒன்று படத்தில் உண்டு.

ஆனால் தற்போதெல்லாம் இங்கே செய்யாத தவறை ஒப்புகொள்ளச் சொல்லி காவல் துறையினர் செய்யும் சித்திரவதைகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன அவைகளின் அதிர்ச்சி தரும் பட்டியல் தான் இக்கட்டுரையில் நீங்கள் காணவிருப்பது.

தடை கேட்ட பீட்டா ; அஹிம்சையை காத்த மக்கள் ; அராஜகத்தை கையில் எடுத்த காவல் துறை

சென்னை ஜனவரி 23, 2017

2014 ஆண்டில் இருந்து சுமார் 3 ஆண்டுகளாக பீட்டா (PETA) எனும் விலங்குகள் நல அமைப்பின் வழக்கின் காரணமாக தடை செய்யப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு (இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டம் 1966 ன் சட்டப்படி, உச்சநீதிமன்றம் 2014 ஆண்டில் ஜல்லிக்கட்டை தடை செய்தது, அதனைத் தொடர்ந்து 2009 இல் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் 2009 ஐ அகற்றக்கோரி வழக்கும் போட்டது பீட்டா (PETA) அமைப்பு)  விளையாட்டை நிரந்தரமாக ஆண்டு தோறும் நடத்திட கோரி அறப்போராட்டத்தினை கையில் எடுத்த பல கல்லூரிகளின் மாணவர்கள் மற்றும் அவர்களின் போராட்டத்தில் மூலம் ஈர்க்கப்பட்டு அங்கே திரண்ட பொதுமக்களும் பெண்களும் குழந்தைகளும் என அமைதியாக சென்னை கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் சுமார் 7 நாட்களாக (2017 ஜனவரி 17 முதல் 23 வரை) நடைபெற்று வந்தநிலையில் 2017 ஆண்டு ஜனவரி 23 அன்று மாலை அங்கிருந்த போராட்ட மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்திட முற்பட்டனர் அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் நடந்த தள்ளுமுள்ளு தடியடியாக மாறி போலீசார் கண்மூடித்தனமாக தாக்கினர். இதனை அறிந்த மேலும் பல கல்லூரி மாணவர்களும் மெரினா கடற்கரையை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர்.

இதனையறிந்த சென்னைக் காவல்துறை மெரினாவிற்கு செல்லவேண்டிய 7 வழிகளையும் பாரிகார்டுகள் மூலம் தடுப்புகள் உண்டாக்கி அவர்களை உள்ளே வரமுடியாமல் செய்தனர் மேலும் அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவித்து கண்ணீர்புகை குண்டுகளையும் வீசினர். இது பெரும் கலவரமாக மாறவே அச்சம் அடைந்த போலீசார் கடற்கரையில் இருந்த கடைகளை தூக்கி வீசியும் அங்கிருந்த மரச்சட்டங்கள் மூலமும் அங்கிருந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரையும் கண்மூடித்தனமாக தாக்கினர். இதற்கிடையில் ஐஸ் அவுஸ் பகுதியில் இருந்த காவல் வாகனம் ஒன்றை அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டது. இதனால் மேலும் பதட்டமான சூழ்நிலை அங்கே உருவானது கலவரத்தில் இதை போட்டோ மற்றும் வீடியோ எடுக்க முயன்ற பல நாளிதழ் மற்றும் தொலைகாட்சி நிருபர்களையும் தாக்கினர் போலீசார். அது மட்டுமன்றி அங்கிருந்த குடிசைகளுக்கும் ஆட்டோக்களுக்கும் சில போலீசார் தீ வைத்த காட்சிகள் ரகசியமாக எடுக்கப்பட்டு அவை சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

https://tamil.oneindia.com/news/tamilnadu/have-dialogue-with-anti-nationalist-says-actor-kamal-hassan-272543.html

OneIndia.com

https://tamil.oneindia.com/news/tamilnadu/police-hit-tv-channel-reporters-cameramen-272517.html

OneIndia.com


காலால் எட்டி உதைத்து காலனாய் மாறிய காவலர்

திருவெறும்பூர் மார்ச் 8, 2018

கடந்த 2018 ஆம்  வருடம் மார்ச்சு மாதம் 8 ஆம் தேதி  உலக மகளிர் தினம் அன்று நடந்த ஓர் துயரச்சம்பவம் திருச்சியில் திருவெறும்பூரில் சில நொடிகளில் இந்த விபரீதம் நடந்து முடிந்தது. அந்த விபரீதத்தில் உயிர் இழந்த உஷா எனும் கர்பிணிப் பெண் தன் வயிற்றில் மூன்று மாத சிசுவுடன் பலியானார். உஷா எனும் அப்பெண் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது அவரது கணவர் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை என கூறப்படுகிறது.

அப்போது அப்பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசாரை கண்டதும் ஹெல்மெட் அணியாத அச்சத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் செல்லவும் இதனால் கோபம் அடைந்த காமராஜ் என்ற போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் என்பவர் சிறிது தூரம் அவர்களை விரட்டிச் சென்று ஓரிடத்தில் எட்டி உதைத்துள்ளார் இதனால் நிலை தடுமாறிய வாகனம் சாலையில் சரிந்ததும் எதிரே வந்த வேனில் மோதி அப்பெண் சம்பவ இடத்தில் பலியானார், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததும் நீதிபதி உயிரிழந்த பெண்ணின் கணவர் ஹெல்மெட் அணியாததே இறப்பிற்கு காரணம் என்று வழக்கை முடித்து வைத்தது எனினும் இச்சம்பவம் நிகழக் காரணமாக இருந்த அந்தக் காவலர் கைது செய்யப்பட்டு பின்னர்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

https://tamil.samayam.com/latest-news/state-news/chennai-high-court-says-trichy-ushas-death-was-due-to-husband-not-wearing-helmet/articleshow/63366027.cms

Samayam.com

முத்து நகரில் உயிர் குடித்த தோட்டாக்கள்

தூத்துக்குடி மே 22, 2018

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலை தொடர்ந்து பலவிதமான மாசுகளை ஏற்படுத்தி வருவதால் உயிர்ப்பலியாகும் வகையிலான தொற்று வியாதிகள் கேன்சர் குழந்தை பிறப்பு மகப்பேறின்மை போன்ற பிரச்சினைகள் ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து வந்ததில் அவதியுற்ற மக்கள் அந்த ஆலையை நடத்தி வரும் வேதாந்தா எனும் நிறுவனத்தினையும் கண்டித்து அவ்வப்போது நடத்தி வந்த போராட்டங்களின் காரணமாக மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் செயலில் ஆலை நிர்வாகம் இறங்கவே இதில் அதிர்ச்சியுற்ற ஆயிரக்கணக்கான தூத்துக்குடி வாழ் பொதுமக்கள் மாசு தரும் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018 ஆண்டில் மே  அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகாரளிக்க வேண்டி அந்த அலுவலகம் நோக்கி முன்னேறிய மக்கள் அங்கிருந்த காவல் தடுப்புகளை உடைத்தும் பெருந்திரளில் திரண்ட மக்களை சமாளிக்க முடியாமல் இருந்த காவலர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென மக்களை நோக்கி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் வயதுடைய பெண் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர் மேலும் இதில் 102 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து மறுநாளும் ஒருவர் கொல்லப்பட்டார் அதனால் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. இந்தக் கோரச்சம்பவத்தினை அரங்கேற்றிய காவலர்கள் சுமார் 132 பேரை கைது செய்தனர். கலவரத்தினை கட்டுக்குள் கொண்டுவரும் நிகழ்வின் ஒரு பகுதியாக திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மே 23 இரவு 7 மணிமுதல் இணைய சேவை நிறுத்தப்பட்டது ஜனநாயக விதிமீறலின் உச்சக்கட்டமாக கருதப்படுகிறது. இந்த அதிர்ச்சி சம்பவத்தினை விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டு தற்போது 35 கட்டமாக விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/india-52766549

BBC.com

https://tamil.samayam.com/latest-news/state-news/kamal-hassan-responds-to-sterlite-shutdown-in-thoothukudi/articleshow/64357868.cms

Samayam.com

வதைத்து வாழ்வை சிதைத்த காக்கிகள் !

சாத்தான்குளம் ஜூன் 19, 2020

கடந்த 19 ஜூன் மாதம் 2020 வருடம் தூத்துக்குடி மாவட்டம்  சாத்தான்குளத்தில் கடை நடத்திகொண்டிருந்த போது ஊரடங்கு விதிகளை மீறியதாக புகார் பதித்து தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கைது செய்து லாக் அப்பில் வைத்து விசாரணை செய்கிறோம் என்று கடும் சொற்களையும் வசவுகளையும் அவர்கள் மீது பேசிபடியே அவர்கள் இருவர் மீதும் அங்கிருந்த காவல்துறையினரும் கண்மூடித்தனமாக தாக்கியதும் மேலும் அவர்கள் காவல் நிலையத்தில் லாக் அப்பில் வைக்கபட்டிருந்த போதே பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டும் இருந்ததும் தெரிய வந்தது. இதனால் உடல்ரீதியாக மனரீதியாக பதிக்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் அதிகமாக தாக்கப்பட்டதால் சிகிச்சை பலனின்றி துரதிர்ஷவசமாக உயிரிழந்தனர்.


தடி எடுத்த காவல் ;

நாமக்கல் ஜனவரி 11, 2022

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் வீட்டில் நடந்த நகை திருட்டு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கடந்த நவம்பர் மாதம் 18-ஆம் தேதியன்று தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டியைச் சேர்ந்த குமார் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த விசாரணையில் 2022 இல் ஜனவரி 11-ஆம் தேதி அன்று மாற்றுத்திரனாளி பிரபாகரன் மற்றும் அவரின் மனைவியை (ஹம்சலா) சந்தேகத்தின் பேரில் சேந்தமங்கலம் காவல்துறையினர் கைது செய்து பிரபாகரனை நாமக்கல் கிளை சிறையிலும், அவரது மனைவி ஹம்சலாவை சேலம் மத்திய பெண்கள் சிறைச்சாலையில் அடைத்தனர். பின்னர் ஜனவரி 12-ஆம் தேதி சிறையில் இருக்கும்போதே, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று பிரபாகரன் கூறியதன் அடிப்படையில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அன்று இரவு 11:40 மணியளவில் பிரபாகரன் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் அடைந்தனர் உறவினர்களும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினரும் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு அமைப்பினர், மனித உரிமை ஆர்வலர்கள் என  பின்னர் பிரபாகரனின் மரணம் தொடர்பாக பல போராட்டங்கள் நடந்ததையொட்டி சேந்தமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் உட்பட மூன்று பேர் சேலம் டிஐஜி-யால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இதனை “காவல்துறையின் கட்டுப்பாட்டில் நடந்த சந்தேக மரணம்” என்றும் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தமிழக முதல்வர் இவ்வழக்கினை மேற்கொண்டு விசாரிக்க சிபிசிஐடி துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/india-60030346

BBC.com

கூடி நின்று கொடுமை செய்த காவலர்கள்

கொடுங்கையூர் ஜனவரி 21, 2022

சென்னை கொடுங்கையூரில் ஜனவரி 21 2022 அன்று நடந்த இச்சம்பவம் இதுவும் காவல் துறையினர் மூலம் நடந்த இன்னுமொரு அத்துமீறல் ஆகும். சென்னை சட்டக்கல்லூரியில் பயிலும் மாணவர் அப்துல் ரஹீம் பகுதி நேரமாக மெடிக்கல் கடையில் வேலை பார்த்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது முககவசம் அணிவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் உடனடியாக அவ்வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று மிகவும் கடுமையான முறையில் விசாரணை என்ற பெயரில் சரமாரியாக லத்திகளால் அடித்து மேலும் அவரது உடைகளை அரைகுறையாக களைந்து பல காவலர்கள் கொடூரமாக தாக்கியதில் அவருடைய கண்ணருகில் சதைகள் கிழிந்து தையல்கள் போடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிகழ்வும் நடந்தது இந்த ஊரறியும். மேலும் இந்தத் தாக்குதல் நடைபெறும்போது அம்மாணவர் தனது செல்போனில் ரகசியமாக அவற்றை படம் எடுக்கும்படி வைத்தால் இது பலர் அறிய வெளிச்சத்திற்கு வந்ததால் தெரிந்தது. இதில் பெண் ஆய்வாளர் உட்பட 9 காவலர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

போலீசாரால் காயமுற்ற மாணவர் அப்துல் ரஹீம்

https://www.maalaimalar.com/news/district/2022/01/21161431/3403098/Tamil-News-Law-student-attacked-issue-RTO-investigation.vpf

Maalaimalar.com

இருளர்கள் வாழ்வில் என்றைக்கு வருமோ வெளிச்சம் ?

கள்ளக்குறிச்சி ஜனவரி 24, 2022

நாடோடி பழங்குடிகளான இருளர் சமூகத்தினர் மீது காவல்துறையினர் தொடர்ந்து பொய் வழக்குகள் புனைந்து அவர்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைகளையும் கொண்டு தான் ஜெய்பீம் என்ற திரைப்படம் எடுக்கப்பட்டு வெளியாகி பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது அறிந்ததே. இல் கடலூர் மாவட்டம் கம்மாபுரம் காவல் நிலையத்தில் லாக்கப் மரணமே இப்படம் உருவாக காரணமாக அமைந்தது. அதே போன்று பொய் வழக்குப் புகாரில் சிக்கியிருக்கிறது விருத்தாச்சலம் காவல் நிலையம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை இருளர் குடியிருப்பைச் சேர்ந்த அஜீத் என்ற இளைஞரைக்கைதுசெய்த விருத்தாசலம் காவல்துறையினர், அவர்மீது கடைகளை உடைத்து பணத்தை திருடியதாக நான்கு திருட்டு வழக்குகளை பதிவு செய்தனர் சிறார் சிறையில் அடைத்தனர். அதன் பிறகு ஜாமீனில் வெளிவந்த அஜீத் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அனுப்பிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அஜித் வேப்பூரில் குடும்பத்துடன் கொத்தடிமையாக வேலை பார்த்து பின் மனித உரிமைச் செயற்பாட்டாளர் கல்யாணி, பாபு, திருமேனி ஆகியோர்களால் மீட்கப்பட்டு கீரிமாதா கோயிலுக்கு அருகில் உள்ள இருளர் குடியிருப்பிற்கு சென்று அங்கே வசித்திருக்கிறார். இதனிடையில் இதனைக் கேள்விப்பட்ட கள்ளகுறிச்சி மாவட்ட ஆட்சியர் மீட்கப்பட்ட  இவர்களை சந்தித்து ஆறுதல் கூறி ரொக்கமாக 5000 ரூபாயை கொடுத்துள்ளார். 26.12.2021 அன்றைக்கு இவரின் வீட்டிற்கு வந்த தனது அக்காவிற்கும் அம்மாவிற்கும் ஏதோ மனவருத்தம் உண்டாகி அங்கிருந்து கோபித்துக்கொண்டு சென்ற அக்காவை காண மாவட்ட ஆட்சியர் கொடுத்த பணத்தையும் ஒரு பையையும் எடுத்துக்கொண்டு சென்ற அஜித் மதுபானக்கடை ஒன்றில் மதுவை அருந்திவிட்டு அந்த கிறக்கத்தில் பேருந்து நிலையத்தில் தன்னிலை மறந்து உறங்கிவிடவே, பின் அதிகாலை சுமார் 2.45 மணிக்கு உறக்கம் கலைந்து விழிப்பு வரவே பேருந்து நிலையத்தில் இருந்த போலீசார் அஜித்தை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று ஒரு தனியறையில் பூட்டிவைத்து என்னிடமிருந்த செல்போனையும் மீதம் இருந்த பணத்தையும் பிடுங்கி வைத்துவிட்டு என்ன சாதியென கேட்டு லத்தியால் தாக்கிவிட்டு கடைகளை உடைத்துக் காசை திருடியதாக குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி கொறடாவில் கை விரல்களை நசுக்கி தாங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லை உன்னை சாகடித்துவிடுவோம் என்று மிரட்டி கைரேகைகளை பிரதி எடுத்துக்கொண்டு சிறுவர் சீர்திருத்தச் சிறையில் அடைத்துவிட்டனர் என்றும் கூறிய அஜித் பற்றிய தகவல்களை அறிந்துகொண்டு மனித உரிமைச் செயற்பாட்டாளர் திரு கல்யாணி இருளர்கள் மேல் தொடர்ந்து வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு செய்யாத குற்றத்தை செய்ததாக கூறி வழக்குகளை பதித்து அவர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்குவது தொடர்ந்து வருகிறது என்றார்.

இருளர்கள் என்றாலே திருடர்களா என்ன ? எப்போது தான் இவர்கள் வாழ்க்கை இருளில் இருந்து ஒளி பெறுமோ தெரியவில்லை !

மேகண்டவை எல்லாம் சில தான் இது போல் தகவல்கள் வெளியே வராமல் இருந்திருக்கலாம் அல்லது அதிகாரத்தின் மூலம் வெளிவரவிடாமல் நசுக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கு இவையே சில முன்னுதாரணங்கள்.

தனி மனித வாழ்வியலை பாதித்து நிர்மூலமாக்கும் சில பல காவல் துறையினரின் இத்தகைய அத்துமீறும் அவலங்கள் என்று தீர்க்கப்படும். மிக முக்கியமாக நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், அது காவல் துறையின் முழு அதிகாரங்களும் தமிழக அரசின் முதல்வர்களே தங்கள் தலைமையில் நிர்வகிப்பார்கள், அப்படி நிர்வகிக்கும் முதல்வரின் கவனத்திற்கு இத்தகைய அத்துமீறல்கள் வராமல் போய் விடுமா என்ன ? சந்தேகத்தின் அடிப்படையில் முறையான தகவல்கள் அறிவிப்புகள் எதுவுமின்றி விசாரணைக்கு அழைத்து வரப்படும் நபர்கள் தாக்கப்பட்டு உயிரிழக்கும் இடமாக மாறும் காவல் நிலையங்களை என்னவென்று அழைப்பது ? மரணம் நிகழும் அளவிற்கு வன்முறையை நிகழ்த்தும் காவலர்கள் தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்படுவார்கள் அல்லது வேறு இடத்திற்கு பணிமாற்றம் செய்யப்படுவார்கள் இவையே தான் சரியான தண்டனையா ? காக்கும் கரங்கள் உயிரை பறிக்கலாமா ? இப்படி ஒவ்வொரு முறையும் விசாரணை என்ற பெயரில் அப்பாவிகள் தண்டிக்கபட்டு மரணம் நிகழ்ந்தால் அந்தக் குடும்பத்தின் கதி என்னவாகும் ? ஒருவேளை அவர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டது உண்மையென ஊர்ஜிதமாகும் பட்சத்தில் நீதிமன்றம் அதற்கான தகுந்த தண்டனையை வழங்கும் அதை விடுத்து காவல் துறையினரே சட்டத்தினை கையில் எடுத்து விசாரணைக்கு உட்படச் சொல்லியும் செய்யாத தவறை ஒப்புக்கொள்ளச் சொல்லியும் துன்புறுத்தும் அவலங்கள் தொடர்வது இழுக்கே ஆகும்.

சற்று முன் : update