தொடரும் விசாரணை மரணங்கள் – மக்கள் நீதி மய்யம் அறிக்கை.

சேலத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன் திருட்டு வழக்கில் சேர்ந்தமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மறுநாளே உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் மரணமடைந்தார். அவர் காவல்துறையின் துன்புறுத்தலால் மரணமடைந்தார் எனும் சந்தேகம் வலுத்து அவரது உறவினர்களும், அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்திய பின்னரே சேர்ந்தமங்கலம் காவல்துறையினர் மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போராட்டங்களை ஒடுக்கிய போதும், ஊரடங்கை நடைமுறைப்படுத்துகிறேன் எனும் பெயரில் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்ட போதும், சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பவத்தின் போதும் தமிழக காவல்துறை மிகக்கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. புதிய அரசு வந்த பிறகாவது இத்தனை அத்துமீறல்கள் குறையும் என எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் அன்றாடம் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தமிழகத்தில் மனித உரிமைகள், சட்ட நடைமுறைகளையும் மதிக்கப்படுகின்றன வா எனும் சந்தேகத்தை எழுப்புகிறது.

இதுபோன்ற அத்துமீறல்கள் இனியும் நிகழாமல் பார்த்துக் கொள்ளவேண்டிய பொறுப்பும் கடமையும் காவல்துறையை தன் பொறுப்பில் வைத்திருக்கும் தமிழக தமிழக முதல்வருக்கு உண்டு. பிரபாகரன் வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள சூழலில் இவ்விசாரணையானது விரைந்து முடிவெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மையம் கேட்டுக்கொள்கிறது என மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் சிவ.இளங்கோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.