சென்னை ஜனவரி 23, 2022

இந்த சமூகம் சில பேரை ஒதுக்கி வைக்கும். ஜெயித்தவர்களை மட்டுமே உயர்த்தி வைத்து பேசும் தோல்வியை தழுவியவர்களை கேலி பேசும், புறம் பேசும்.

அவை எல்லாவற்றையும் மீறி ஆண்டாண்டு காலமாக குறிப்பிட்ட ஓர் உயிர்களை அவர்களின் மனம் நோகும்படியாக கேலியும் கிண்டலுமாக குற்றம் இழைப்பவர்களாக சித்தரித்து நீங்கள் இப்படித்தான் என முத்திரை குத்தி தம்மிடமிருந்து தள்ளி வைக்கும்.

அப்படி தள்ளிவைக்கப்படும் மனிதர்கள் யாரென்றால் மூன்றாம் பாலினமாக அறியப்படும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள்.

திருநங்கைகள் தங்கள் வயிற்றுப்பிழைப்பிற்கு வியாபார வணிக நிறுவனங்கள் மேலும் கடைகளில் சென்று காசு கேட்டுப் பெறுகிறார்கள் என்றும் பரவலாக பேசப்படுகிறது அது ஒருபுறம் இருக்க, அவர்கள் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொண்டோமானால் அதற்கான விடை அவர்களும் நம்மைப்போல் ஓர் உணர்வுகள் உள்ள மனிதர்கள் தான் நான் அவ்வாறு எந்த வழியிலும் ஈடுபட்டு பணம் ஈட்டமாட்டேன் எனக்கு உடலில் தெம்பும் மனதில் வலிமையும் உறுதியும் உள்ளது உழைத்துப் பிழைப்பேன் என்று இன்றைக்கு கூட பல திருநங்கைகள் நற்பாதையில் பயணம் செய்கிறார்கள்.

அப்படியான ஓர் நல் உள்ளமே மாற்றுப் பாலின சகோதரி சயீனா, சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள காசா மேஜர் சாலையில் அமையப்பெற்ற ஒரு சிறிய சிற்றுண்டி விடுதியை நடத்தி வருகிறார். இவரது இந்தத் தன்னம்பிக்கையுடன் கூடிய முயற்சியை சிலர் வரவேற்றாலும் பெரும்பாலானோர் இவரது உணவு விடுதியில் உணவருந்திச் செல்ல வருவதில்லை எனவும் அதற்கான காரணமாக இவர் உணர்ந்து நிற்பது தான் ஒரு மாற்றுப் பாலினம் என்ற வேறுபாடே தான் என்று வேதனை கொண்டு சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் தனது ஆதங்கத்தை பதிவு செய்திருந்தார், மேலும் நாள் ஒன்றுக்கு சுமார் ₹ 150 வரையே இந்த கொரொனோ தொற்று பேரிடர் காலத்தில் வருமானமாக ஈட்டிக் கொண்டிருந்த நான் எனது தாயையும் நான் காப்பாற்ற முற்பட்டுள்ளேன் என்னையும் என் உணவு விடுதியை பற்றி சமூக வலைத்தளங்கள் மூலமாக கேள்வியுற்ற நல்ல உள்ளங்கள் மூலமாக தற்போது ₹ 500 முதல் ₹ 600 வரை விற்பனையாகிறது எனவும் தெரிவித்தார்.

எங்கே சென்றாலும் ஒரு சிலரைத் தவிர பலர் எங்களைப் போன்றோர்களை நிராகரிக்கிறார்கள் தேவையற்ற பேச்சுக்களை கேட்க வேண்டியுள்ளதாக இருக்கும். அதனால் தான் அவற்றை பொருட்படுத்தாமல் இவர் சுயமாக உழைத்து முன்னேற உணவு விடுதியை துவக்கி இருப்பார்.

இதனை கேள்வியுற்ற நம் மய்யம் உறவுகள் சரத் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் அச்சகோதரியின் உணவு விடுதிக்கு சென்று சயீனா அவர்களிடம் தங்களைப் பற்றி குறிப்பிட்டு நாங்கள் இருவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து வந்திருப்பதாக சொன்னதும் அவர் மிகவும் மகிழ்ந்து போனதாக தெரிகிறது. அங்கே சயீனா தயாரித்து தந்த தரமான உணவினை விரும்பி உண்ட அன்பர்கள் அவரிடம் “தன் பிறப்பு வேறுபாட்டால் புறக்கணிக்கப்படுகிறோம் என்று எண்ணி ஒடிந்து விடாமல் வாழ்வில் சாதிக்க வேண்டும் எனும் முனைப்பில் தொழில்முனைவோராக உருவாகியிருக்கிறார் அக்கா சயீனா, அவருக்கு என்றும் தம் மக்கள் நீதி மய்யம் ஆதரவாக இருக்கும்” எனவும் உறுதியளித்தார்.

பகல் வேஷம் போட்டு மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பவர்களுக்கு மத்தியில் ஒரு புறக்கணிக்கப்பட்ட பிரிவினராக நினையாமல் நேர்மையான முறையில் உழைத்து வாழ்ந்திடும் சயீனா போன்றவர்கள் உண்மையில் போற்றப்படவேண்டியவர்கள்.

சகோதரி சயீனா அவர்களின் உணவு விடுதி அமையபெற்ற இடம் மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் ஒர்க் வளாகம் காசா மேஜர் சாலை சுலைமான் சக்கரியா அவென்யூ எழும்பூர் சென்னை. உணவு விடுதியை தங்கள் வளாகத்தில் அமைத்துக் கொடுத்த நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கிறார்.

நமது மய்யம் உறவுகள் மட்டுமல்லாது அறிந்தவர் தெரிந்தவர் என உங்களால் இயன்றவரை பிறருக்கு சயீனா அவர்களின் உணவகம் பற்றி எடுத்துச் சொல்லுங்கள் உழைக்கும் கரங்கள் இன்னும் வலுவாகட்டும் அவரின் வாழ்க்கை வளமாகட்டும்.