எல்லோருக்கும் அவரவர் வாழ்க்கையில் தேடல் இருக்கும் அது ஒன்று, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டதாக கூட இருக்கலாம் அது அவரவர் தேவை, விருப்பத்தை மற்றும் இலட்சியத்தை பொறுத்தது.
அப்படி தேடல் இருக்கும் பட்சத்தில் அதற்கு நிறைய உழைக்க வேண்டும், நேர்மையான வழியில் பயணிக்க வேண்டும். நல்லவை, கெட்டவை அல்லது கேட்டவை என அவைகளை பகுத்துப் பார்த்து அறிந்துகொள்வதே மிகச்சிறந்த வழிமுறையாகும்.
பணத்தேவைக்கு உழைப்பினால் பெறும் ஊதியம் சரி, அறிவுத் தேவைக்கு என்ன உள்ளது ? அட என்னங்க நீங்க ? அதான் மாங்கு மாங்கு என்று படித்து டிப்ளோமா, டிகிரி எல்லாம் வாங்கி வைத்திருக்கிறோமே அது போதாதா ? என்று கேட்டால் அவை போதாது என்று தான் நிச்சயம் சொல்லவேண்டும்.
பள்ளி, கல்லூரிகளில் பயிலும் கல்வியறிவு என்பது தனிப்பட்ட திறமை என்று இருந்தாலும் சமமாக எல்லோரும் படிப்பதை தான் நாமும் படிக்கிறோம். ஆனால், அதையும் தாண்டி அனுபவ அறிவு மற்றும் பொதுவான நிகழ்வுகளை, வரலாறுகள், அறிவியல் ஆற்றல்கள், சுயசரிதைகள் என்று பலதரப்பட்ட வகைகளில் குவிந்து கிடக்கும் தரவுகள் ஒருவருடைய கற்றல் மற்றும் தேடல் மூலம் பெறக்கூடிய அறிவு என்று இருக்கிறது அதை எந்த வஞ்சனையும் குறைவும் இன்றி அள்ளித்தரும் மிகச்சிறந்த பொக்கிஷம் புத்தகங்கள் தான்.
நீங்கள் உங்களுக்குள் வருத்தம், சோர்வு அல்லது அயர்ச்சியில் இருந்தீர்கள் என்றால் வேறு தேவையற்ற பழக்கங்களில் மனம் போகத் துவங்கினால் உங்கள் வாழ்வும், உங்களைச் சார்ந்திருப்பவர்கள் வாழ்வும் சிறக்காது போகும் சிரமம் ஏற்படும். ஆனால் அவ்வேளைகளில் உங்களின் நாட்டம் ஓர் புத்தகம் படிப்பதில் சென்றால் சஞ்சலம் கொண்டிருக்கும் மனம் ஆசுவாசம் பெரும். உங்களுடன் இருக்கும் உங்களுக்காக மிகச்சிறந்த ஓர் நண்பன் அருகில் இருப்பதாக உணர்வீர்கள்.
மக்கள் நீதி மய்யம் நிறுவனத் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் கல்வியைப் பற்றி பேசக்கூடிய சந்தர்ப்பங்கள் வருமானால் அப்போது தனது “பால்யகால பள்ளிப்படிப்பை தொடரமுடியாமல் போயிற்று எனவும் அதனால் நான் கல்லூரி கால வாழ்க்கையும் எனக்கு தவறிப்போயிற்று” எனவும் சொல்லி இருக்கிறார். அப்படி அவர் கல்வி பயிலும் வாய்ப்பினைத் தவற விட்டிருந்தாலும் இந்த நொடிகள் வரை அவருடைய பேச்சில் அந்த குறைகளை நீங்கள் எவரும் கண்டுணர இயலாது. அதற்கான முழு காரணம் அவருடைய புத்தக வாசிப்பு ஆகும். அவருடன் அளவளாவும் பல நேர்காணல்களில்; அது தமிழில், ஆங்கிலம் அல்லது வேறு ஏதேனும் இந்திய மொழிகளில் இருப்பினும் எந்த தடங்கலும் இன்றி பேசக்கூடியவர். கதை திரைக்கதை வசனம் பாடல்கள் மரபு சார்ந்த கவிதைகள் புதுக்கவிதைகள் என அவரது பன்முகத்தன்மை அதிலும் பன்மொழிப்புலமையும் கொண்டவர், உலகநடப்புகளையும் துல்லியமாக பேசக்கூடியவர் என்பது தெள்ளத் தெளிவான நீரோடை போன்றது. உடன் உரையாடுபவர் எந்த துறையைப் பற்றி கேட்டாலும் அதற்கான நீண்ட நெடிய விளக்கங்கள் தந்து மேலும் அவற்றுக்கு சரியான மேற்கோள்களை காண்பிக்கவும் தவற மாட்டார். அதற்கு காரணமாக அமைவது தனது வாழ்க்கையில் பெரும்பாலுமான நேரங்களில் பல மணித்துளிகளை ஆக்கிரமித்து இருப்பது புத்தகங்கள் தான் என்றும் சொல்லி வருவார். அவரைப்பற்றி சிலாகித்து சொல்லும் பல ஆளுமைகள் அவரது புத்தக வாசிப்பைப் பற்றி குறிப்பிட்டு சொல்வார்கள். திரையுலகில் மிகவும் பரபரப்பான சூழல்களில் பணியாற்றும் திரைக்கலைஞர்களில் வெகு சிலரே, அதுவும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஆளுமைகளே புத்தகங்கள் வாசிக்கும் வேட்கை கொண்டவர்கள் அவர்களில் தலைவர் கமல்ஹாசன் ஒருவர்.
அதுமட்டுமில்லாமல் 1980 களில் தனது ரசிகர்கள் நற்பணி இயக்கம் நிர்வகித்து வரும்போது தான் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியராகவும் விளங்கி மய்யம் எனும் மாத இதழை நடத்திய அனுபவமும் உண்டு.
புத்தகங்கள் தனக்கு உற்ற தோழனாக இருப்பது போல் நல்ல நட்புடன் புகழ்பெற்ற பல எழுத்தாளர்களும் இவருக்கு உற்ற தோழர்களாக இருப்பது சான்று.
தனியார் தொலைக்காட்சியில் தான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் எனும் நிகழ்ச்சியில் வாரம்தோறும் மொழி பாகுபாடு இன்றி பல எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை அதன் பொருளடக்கத்துடன் அவற்றை வாசிக்குமாறு அறிவுறுத்தும் நற்பழக்கத்தை வழக்கமாக கொண்டிருக்கும் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் அவ்வாறு பரிந்துரை செய்த புத்தகங்களை உங்களின் பார்வைக்கு இங்கே நாங்கள் பட்டியலிடுகிறோம். புத்தகங்கள் வாசிக்கச் சொல்லும் ஓர் அரசியல் தலைவரை இப்போதெல்லாம் நீங்கள் காண்பது அரிது அதிலிருந்து விதிவிலக்காக பல நல்ல புத்தகங்களை வாசிக்கச் செய்யும்படி அதை தமது கட்சியினர் மட்டுமல்லாது பொதுமக்களும் அறிந்து கொள்ள கிடைத்த வாய்ப்பினை பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக பயன்படுத்திக் கொண்டார்.
வாருங்கள் தலைவர் சொல்வது போல் உயிர்நண்பர்கள் சேர்ப்போம் ; தவறாமல் புத்தகங்கள் படித்து உய்வோம்.
அழகர்கோயில் ஆசிரியர் : தொ பரமசிவன், வெளியீடு : மதுரை காமராசர் பல்கலைக்கழகம், விலை ரூ.450/-
எஸ்தர் – ஆசிரியர் வண்ணநிலவன், வெளியீடு : நற்றினை பதிப்பகம், விலை ரூ.120/-
நிறங்களின் மொழி – ஆசிரியர்கள் : தேனி சீருடையான் & மனோகர் தேவதாஸ், வெளியீடு : விகடன் பிரசுரம், விலை ரூ.350/-
கோபல்லபுரத்து மக்கள் – ஆசிரியர் : கி.ராஜ நாராயணன், வெளியீடு : அன்னம் & அகரம் வெளியீட்டகம், விலை ரூ.230/-
வாசிப்பது எப்படி? – ஆசிரியர் : செல்வேந்திரன், வெளியீடு : ஜீரோ டிகிரி & எழுத்துப் பிரசுரம், விலை ரூ.100/-
புயலிலே ஒரு தோணி – ஆசிரியர் : ப சிங்காரம், வெளியீடு : தமிழினி வெளியீடு, விலை ரூ.325/-
அவமானம் – ஆசிரியர் : சதத் ஹசன் மண்டோ, தமிழாக்கம் – ராமானுஜம், வெளியீடு : பாரதி புத்தகாலயம், விலை ரூ.90/-
ஜெ.ஜெ.சில குறிப்புகள் – ஆசிரியர் : சுந்தர ராமசாமி, வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம், விலை ரூ.250/-
கரைந்த நிழல்கள் – ஆசிரியர் : அசோகமித்திரன், வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம், விலை ரூ.190/-
கூளமாதாரி – ஆசிரியர் : பெருமாள் முருகன், வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம், விலை ரூ.340/-
நாளை மற்றுமொரு நாளே – ஆசிரியர் : ஜி நாகராஜன், வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம், விலை ரூ.175/-
தி எமர்ஜிங் மைன்ட் – ஆசிரியர் : விளையனூர் ராமச்சந்திரன் வெளியீடு : ப்ரோபைல் புக்ஸ் விலை ரூ.299/-
சேப்பியன்ஸ் – ஆசிரியர் : யுவால் நோவா ஹராரி (தமிழில் : நாகலட்சுமி சண்முகம்) வெளியீடு : மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், விலை ரூ.599/-
தொடுவானம் தேடி – ஆசிரியர்கள் : அ.தில்லைராஜன், கோ அருண்குமார், சஜி மேத்யூ, வெளியீடு : வானவில் புத்தகாலயம், விலை ரூ.299/-
வெண்முரசு – ஆசிரியர் : ஜெயமோகன், வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 1 செட் (22 பகுதிகள் கொண்டது) – விலை ரூ.21500/-
வெண்முரசு (01 முதல் 22 வரை வரிசையாய் : முதற்கனல் / மழைப்பாடல் / வண்ணக்கடல் / நீலம் / பிரயாகை / வெண்முகில் நகரம் / இந்திர நீலம் / காண்டீபம் / வெய்யோன் / பன்னிரு படைக்களம் / சொல்வளர்காடு / கிராதம் / மாமலர் / நீர்க்கோலம் / எழுதழல் / குருதிச்சாரல் / இமைக்கணம் / செந்நா வேங்கை / திசை தேர் வெள்ளம் / கார்கடல் / இருட்கனி / தீயின் எடை
பின் குறிப்பு : மேலே குறிப்பிட்டுள்ள புத்தகங்களின் விலை வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள்/முகவர்கள் மூலம் விற்பனை செய்வதில் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடும்.