ஒரு நடிகர் அரசியலுக்கு ஏன் வந்தார், சரி வந்துட்டார் ஆனா அவ்வளவு நாட்கள் தாக்குப் பிடிக்க மாட்டார் ; எனச் சொல்லித் சிரித்தவர்கள் எம்மைக் கண்டதும் அப்படி ஒளிந்து மறைகிறார்கள்.

பூடகமாய் பேசிய ஊடகங்கள் அரசியல் விவாதங்களுக்கு மய்யம் பிரமுகர்களை அழைக்கிறார்கள்.

பகுதி நேரமாய் அரசியல் செய்பவர் கமல் ஹாஸன் என்கிறார்கள், இருக்கட்டுமே முழு நேரமாய் அரசியல் செய்பவர் எல்லோரும் எப்படிச் சேர்க்கின்றனர் கோடிக்கணக்கில் பணம் ? படம் எடுக்கிறார், படம் நடிக்கிறார், கதர் துணிகளை தயாரித்து அயல்நாடுகளில் விற்பனை செய்ய விழைகிறார், யாரின் வயிற்றிலும் அடிக்கவில்லை, அடுத்தவரிடம் அடித்துப் பிடுங்குவதில்லை புகழ்பெற்றவர் என்ற பெயரையும் தவறாக உபயோகித்ததில்லை. நினைத்தால் பணம் கொட்டிக்கொடுக்க பலருண்டு. எனினும் தனது சொந்த உழைப்பை மட்டுமே நம்பி அதிலும் எந்தவித ஒளிவுமறைவின்றி நடித்த படங்களுக்கு சம்பளமாக பெரும் வருமானம் ரொக்கமாக என்றும் கைகளில் வாங்கியதில்லை அவை மொத்தமும் வங்கி கணக்கு வழியாகவே பெற்றதாகவே கணக்கு வழக்குண்டு. பொதுவாக சினிமா தொழிலில் கருப்பு வெள்ளை என கொடுத்தல் வாங்கல் என்று பரிமாற்றங்கள் உண்டு என்பது பொதுவான கருத்து. அதிலும் நம்மவர் சம்பளமாக பெற்ற தொகைக்கு முன்னதாக வருமானவரி பிடித்தம் செய்து அல்லது பெற்றபின் அவ்வாண்டின் நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு அதற்கான வருமான வரிகளை பைசா பாக்கியில்லாமல் இந்திய வருமான வரித்துறைக்கு செலுத்தி வருவதாக சம்பந்தப்பட்ட வருமான வரித்துறை சீரோ டாக்ஸ் அரியர் என்ற விருதையும் அளித்துள்ளது. அது மட்டுமல்லாது அத்துறையின் அதிகாரப்பூர்வ விளம்பரத் தூதராக நியமித்த நிகழ்வுகளும் உண்டு.

திரைத்துறையிலும் தனது நேர்மையை தூய்மையை விட்டுகொடுக்காமல் எதற்கும் சமரசம் செய்து கொள்ளாமல் நெஞ்சம் நிமிர்த்தி லஞ்சம் தவிர்த்து என நின்றதால் அவருக்கு ஏற்பட்ட இடர்கள் நிறைய. படங்களை தடை செய்தார்கள், பெயர் மாற்றம் செய்யச் சொல்லி நிர்பந்தம் தந்தார்கள் வதந்திகளை விதைத்தார்கள், பொய்யும் புரட்டும் அளவில்லாமல் அவர்மேல் அள்ளித் தெளித்தனர். என்ன சொன்னாலும் எவர் சொன்னாலும் சொன்னதை பகுத்துப் பார்க்கும் திறன் அபரிமிதமாக கொண்டவர்க்கு தெளித்த எல்லாம் பூக்களாய் அணிந்து பெருமிதத்துடன் நெஞ்சம் நிமிர்த்தி நடந்தார்.

திரைக்குப்பின்னால் நடித்ததை திரையிடலின் போது மக்களிடையே அமர்ந்து அவர்களின் ரசிக்கும் திறனை மேம்படுத்த முனைந்தார். வெகுஜன ரசனையை விரும்பிடும் மக்களுக்கு அவர்களை அதே பாதையை நோக்கி நிறுத்தி விடாமல் பல புதுமைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மெனக்கெட துணிந்தார் கதை திரைக்கதைகளில் தொழில்நுட்பங்களில் அயல்நாடுகளில் செய்து வந்த கருவிகளை இந்தியாவிற்கு தருவித்து அதை தன் திரைப்படங்களில் அறிமுகம் செய்தார். நட்டங்கள் உண்டானாலும் அதை தனதாக்கிக் கொண்டார் வெற்றிகளில் பிறரை பங்கெடுக்கச் செய்தார்.

அவரைச் சந்திக்கும் பத்திரிக்கையாளர்கள் பல கேள்விகளை முன்வைத்து அதற்கான பதிலை பெற்றாலும் எப்போதும் ஓர் கேள்வியை தவறாமல் கேட்பார்கள். அது நீங்கள் அரசியலில் ஈடுபடுவீர்களா என்று. எதற்காக இந்தக் கேள்வியை கேட்பார்கள் என்றால் தமிழகத்தின் அரசியலில் தனிப்பெரும் தலைவர்களாக மட்டுமல்லாமல் தமிழகத்தின் முதல்வர் நாற்காலியை அலங்கரித்து ஆட்சி செய்து கோலோச்சிய மூன்று ஆளுமைகளுடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பினை பெற்று இருந்ததே அதற்குக் காரணம். புரட்சிதலைவர் என்று அன்போடு அழைக்கப்பட்ட திரு எம் ஜி ஆர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் திரு மு கருணாநிதி மற்றும் அம்மா என்று அழைக்கப்பட்ட செல்வி ஜெயலலிதா. அப்போதெல்லாம் நிச்சயம் நான் அரசியலில் ஈடுபட மாட்டேன் அதில் எனக்கு துளியும் விருப்பம் இல்லை, நான் என்னை கலைக்காகவே அர்பணித்துக் கொண்டேன் என்று உறுதியுடன் சொல்லி வந்தவரை காலம் தானாகவே ஓர் பாதையிட்டு நம்மவரை அரசியலில் ஈடுபடச் செய்து அதற்கான தளமாக ஓர் கட்சியை துவக்கச் செய்தது.

அப்படி 2018 இல் உதயமானது மக்கள் நீதி மய்யம். கட்சியிலும் அதன் பெயரிலும் மக்களையும் மக்களுக்கான நீதியையும் நேர்நிறுத்திட வேண்டும் என்பதாய் அர்த்தம் தொனிக்க மேலும் நாங்கள் கொள்கை ரீதியாக முதலாளித்துவ சார்புடைய வலதுசாரியோ என இல்லாமல் முதலாளித்துவ சார்பை முற்றிலும் புறக்கணித்துவிட்டு மக்களுக்கான இடதுசாரியோ என இல்லாமல் மக்களுக்கான நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான விவசாயம், தொழிற்சாலை மற்றும் கட்டமைப்புகள் அதனால் மக்களின் மேம்பட்ட வாழ்வினை உறுதி செய்யும் நோக்கில் தான் மய்யம் கொள்ளும் இந்த அரசியல் இயக்கம் எனும் கூற்றினை எப்போதும் சொல்லி கொண்டே இருப்பார்.

இன்னும் வருவார் நம்மவர்………