வருகிற 19 ஆம் தேதியன்று தமிழகம் முழுக்க மாகராட்சிகள் நகராட்சிகள் பேரூராட்சிகள் உள்ளடங்கிய உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது அறிந்ததே. அத்தேர்தலில் தமிழகத்தின் கட்சிகள் தேசிய கட்சிகள் என தத்தமது வேட்பாளர்களை கூட்டணியுடன் மற்றும் தனித்து களம் காண்கின்றன.

இதில் மக்கள் நீதி மய்யம் மற்ற கட்சிகளுக்கு மாற்றாக உருவெடுத்து வருவது ஓர் நம்பிக்கையை உண்டாக்குவதாக தெரியவருகிறது. தமது கட்சியின் சார்பில் தம்மைப் போலவே சேவை மனப்பான்மை கொண்ட நிர்வாகிகளை வேட்பாளர்களாக அறிவித்து பரப்புரை செய்து அவர்களுக்கு வாக்கு சேகரிக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் நேற்று அதாவது பிப்ரவரி 16 ஆம் தேதி கோவையில் பரப்புரை செய்து மய்ய வேட்பாளர்களை ஆதரித்து பொதுமக்களிடம் டார்ச் லைட் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அவ்வகையில் அப்போது செய்தியாளர்களுடன் நடந்த சந்திப்பில் பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்து பேசுகையில், “தனது அரசியல் பயணம் எனக்கானது அல்ல. என்னை இதுவரை சகல வசதிகளை அனுபவிக்கச் செய்த மக்களுக்கு என்னால் இயன்றதைச் செய்திடவே அரசியலில் நான் நுழைய வேண்டிய அவசியம் ஆனது. சுமார் 50 ஆண்டுகாலமாக மாறி மாறி ஆட்சி செய்துவரும் இரண்டு கழகங்களின் தொடர் ஊழல் செய்து வரும் நிலையால் மக்களின் தேவைகள் இதுவரை எதுவும் சரிவர பூர்த்தி செய்யப்படவில்லை, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கும் திமுக கொடுத்த வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டியவர் மேலும் திமுக எங்களை பாஜக வின் B டீம் என்று தொடர்ந்து பொய்யை பரப்பி வந்தார்கள் அது உண்மையல்ல என்பது அவர்களுக்கும் மக்களுக்கும் தெரியும்” என்றார்.

“இந்தத் தேர்தல் என்பது ஊழலுக்கும் ஊழல் படையினருக்கும் ஒரு யுத்தம். இதில் இரண்டு பேரும் தோற்றுபோனால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி கொள்வோம். இதில் இரண்டு திராவிட கழகங்களும் ஒருவரை ஒருவர் ஊழல் செய்வதில் வெற்றியடைந்தவர்கள். தமிழக மக்களாகிய உங்களுக்கு மிக முக்கியமான ஓர் கடமை இருக்கிறது அது நேர்மைக்கு வாக்களிக்கும் உன்னதமான. அப்படி நீங்கள் நேர்மைக்கு வாக்களித்து மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அவர்கள் தூய்மையான நேர்மையான அரசியல் செய்திட அதுவே மிகச்சிறந்த வலிமையான அடித்தளமாக அமையும்” என்றார்.

தொடர்ச்சியாக பேசியவர் எங்கள் வேட்பாளர்களை தங்களுக்கு அடிபணிந்து செல்லுமாறு மிரட்டிய நிகழ்வுகளும் நடந்துள்ளது, ஆயினும் அவர்கள் சற்றும் பின்வாங்கிடாமல் பொதுமக்களுக்கு சேவை செய்திட களத்தில் நிற்கிறார்கள். பிற கட்சியினர் எங்கள் வேட்பாளர்கள் விலகிட வேண்டுமென்று நிர்பந்தம் செய்ததை எங்களுக்கான பரிசாக எங்கள் நேர்மைக்கு கிடைத்த பரிசாக எடுத்துக் கொள்கிறோம்.

இப்போது முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடந்து வரும் ஆட்சியில் கோவை அதே நிலையில் உள்ளது என்றும், அளித்த வாக்குறுதிகளின் படி கடந்த 9 மாத காலமாக எந்தவிதமான கட்டமைப்புகளையும் செய்து தரவில்லை.

“திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றுவதற்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை என்றும் கமல்ஹாசன் தன்னையும் மய்யம் கட்சியையும் பா ஜ வின் B டீம் என்றும் சொல்லும் தி மு க வினர் நீங்கள் கமல்ஹாசன் கட்சிக்கு ஓட்டுப் போட்டால் மோடி வந்துவிடுவார் என்றும் ஒவ்வொரு வீட்டிலும் சென்று சொல்லிவருகிறார்கள், நான் அரசியலுக்கு வந்தது மக்களுக்கு சேவை செய்யவே இதில் நான் எதற்கு மோடி ஜெயிக்க தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும் மேலும் அவர் வெற்றி பெற வேண்டும் என்று விருப்பபட்டால் அதற்கான வழிமுறைகள் அவருக்கு தெரியும் ஆனால் அப்படி அவர் ஜெயித்துவிடக்கூடாது என்று தான் நாங்களும் விரும்புகிறோம் என்றும் மோடி என்ன தேர்தலில் போட்டியிட்டு பிரதமர் பதவியை விட்டுவிட்டு கவுன்சிலர் ஆக போகிறாரா என்ன” என்று நகைத்தபடியே சொன்னது அங்கே பெரும் சிரிப்பலையை உண்டாக்கியது.

மேலும் கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்த அவர் தங்களின் கட்சி சார்பில் வார்டு உறுப்பினர்களாக தேர்வு பெற்றதும் வார்டுகளில் நடைபெறும் எந்த செயல்பாடுகளுக்கும் செலவிடப்படுகிற கணக்குகள் மாதா மாதம் வெளிப்படையாக மக்கள் முன்னிலையில் வார்டு சபை எனும்படியாக உண்டாக்கி செயல்படுவார்கள் என்றும் ஒருவேளை அவர்களில் யாராவது முரண்பட்டு நிற்பதாக தோன்றினால் அதற்கான நடவடிக்கை அவர்களின் மீது எடுக்கப்படும்” என்று முடித்தார்.