கோவை மார்ச் 27, 2022

பாரத மாதா என்றும் தாய்நாடு, தமிழன்னை என்றும் குறிப்பிடுவதில் இருந்தே பெண்மையின் சிறப்பை மிகச்சுலபமாக புரிந்து கொள்ளலாம்.

அரசியாக ஆட்சி செய்த காலம் தொட்டே இன்றுவரை பெண்கள் தங்களை எல்லா வகையிலும் மேம்படுத்திக்கொண்டு கல்வி, வீரம், அரசியல், விஞ்ஞானம், விளையாட்டு, மருத்துவம், தொழில்துறை, விண்வெளி என நம் நாட்டின் உயர்பதவிகளில் மட்டுமல்லாது பல்வேறு அயல்நாடுகளில் உயர்நிலைகளில் தங்களை நிரூபணம் செய்து வருவதற்கு வாழ்ந்து மறைந்த, வாழும் எண்ணிலடங்கா பெண்மணிகள் சாட்சி. அவர்களின் பெயர்களை குறிப்பிட்டோமானால் நீண்டு கொண்டே போகும் சிறப்பினை உடையது மகளிர் பற்றிய வரலாறும் புரிதலும்.

இவ்வாறெல்லாம் உணர்ந்து பெருமை கொள்ளும்படி இருந்தாலும் நாடெங்கிலும் பெண்களுக்கு எதிரான, வன்கலவி, வரதட்சினை கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல்கள், வன்புணர்வுகள் மட்டுமில்லாமல் அவர்களை முற்றாக கொன்று குவிக்கும் மன்னிக்கவோ மறக்கவோ முடியாத பெருங்குற்றச் செயல்கள் நடந்து வருவது மேற்கண்ட பெருமைகளை கொண்டாட முடியாத அளவிற்கு வேதனைகளை அச்சங்களை தருகிறது.

சில வருடங்களுக்கு முன்னர் பெண்சிசுக்களை எருக்கம்பால் புகட்டி கொன்று புதைத்த நெஞ்சு பதைக்க வைக்கும் கொடுஞ்செயல்கள் அவ்வளவு சீக்கிரத்தில் இங்கே யாரும் மறந்திருக்க முடியாது. யாரேனும் உங்களிடம் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்கும் பட்சத்தில் அவ்வூரின் பெயரைச் சொன்னால் அவர்களின் பார்வையே மாறிப்போன அவலம் நிறைந்த காலங்கள் அவை.

ஒருவேளை இன்றும் அந்த அவலம் தொடரலாம் அல்லது வெளி உலகுக்கு தெரியாதவண்ணம் இன்னமும் ஆங்காங்கே நடந்தும் வரலாம்.

தமிழகம் பொருளாதார ரீதியாக, தொழில்துறை வளர்ச்சி, கட்டுமானத்தில் புதுமைப் பரிமாணம், திரையுலகில் புது யுக்திகள், கணிணி துறையில் என பலவிதங்களில் மேம்பட்டு வருவது அதில் தொடர்ந்து முன்னிலை வகிப்பது எல்லாம் ஒப்புகொள்ள கூடியது தான் என்றாலும் பெண்குழந்தைகள் மற்றும் மகளிர் பாதுகாப்பில் நம் மாநிலத்தில் நிலை என்ன ? அவர்களுக்கு எதிரான பாதுகாப்பற்ற சூழலும் பதட்டமான அநீதிகளும் தொடர்ந்து இழைக்கபடுவது குறித்து நாம் கவலைப்படுகிறவேளையில் எங்கோ ஓரிடத்தில் எப்போதோ ஓர் சமயத்தில் நடந்த கொடூர சம்பவங்கள் சமீப காலங்களில் நாளிதழ் மற்றும் இணையவெளியில் வெளியாகும் செய்திகளில் பக்கத்திற்கு ஒன்றாக பெருகி வருவது பெண் குழந்தைகள் மற்றும் மகளிர் பாதுகாப்பு உள்ளதா எனும் கேள்வியை தோன்றச்செய்து விடுகிறது.

ஒரு நாட்டினை பற்றிய புள்ளிவிவரங்கள் பொருளாதரத்தில், அறிவியலில், கல்வியில், சுற்றுலாவில் என பல வழிகளில் இருந்தாலும் ஒருவேளை அவைகள் குறைவான மதிப்பீட்டில் இருந்தாலும் அவற்றை சரிசெய்து கொள்ளலாம். ஆனால் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் பட்டியலும் அதன் உயர்ந்து வரும் விகிதாசாரமும் கொண்ட புள்ளிவிவரங்கள் உலகநாடுகளில் மத்தியில் நமக்கு பெரும் தலைகுனிவைத் தரும்.

2018 ஆண்டில் சென்னையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் சுமார் 11 வயதே நிரம்பிய மனதளவில் மாற்றுத்திரனாளி என உணரப்பட்ட பெண் குழந்தையை 17 மிருகங்கள் தொடர்ந்து வன்புணர்வு செய்த கொடுஞ்செயல், அதிலும் பதின்ம வயது முதல் 50 வயதினைக் கடந்த முதியவர் என அம்மிருகங்கள் தொடர்ந்து வாய் பேச இயலாத அக்குழந்தையை சீரழித்த கொடூரமும் அதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டில் தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் குற்றம் நடந்து முடிந்த பின்னர் அடுத்தடுத்து இது போன்று ஒவ்வொரு ஊராக நடந்து வருவது பெண்கள் பாதுகாப்பினை கேள்விக்குறியாக்குகிறது. விருதுநகர், செங்குன்றம் என தொடர்ச்சியாக நிகழும் இவை இன்னும் தொடர்ந்தால் காவல்துறையின் மீதும் நீதித்துறை மீதும் மக்களின் நம்பிக்கைகள் பொய்த்துப் போகும் அபாயம் உள்ளது.

குற்றங்கள் நடந்து முடிந்த பின்னர் அதன் பற்றிய விவரங்கள் அறிந்ததும் குற்றவாளிகளை கைது செய்து விசாரணையை நடத்துவது பின்னர் சிறிது காலங்களுக்கு பின்னர் ஜாமீன் வழங்குதல் என எந்தச் சலுகையும் காட்டப்படாமல் வழக்கை விரைவாக முடித்து மிகக் கடுமையான தண்டனையை நீதிபதிகள் வழங்குதல் வேண்டும் என்பதை தவிர, அரசியல் இயக்கங்களின் அழுத்தங்கள், சாதி மாத அமைப்புகளின் கோரிக்கைகள், நிர்பந்தங்கள் எனும்படியாக வேறந்த வழிகளும் இக்குற்றங்களை செய்பவர்களுக்கு செய்ய முற்பட்டால் இது போன்ற மகளிர் எதிரான செயல்களில் ஈடுபடுவர்கள் எந்த வித அச்சமும் இன்றி பொதுவெளியில் நடமாடுவது ஒவ்வொரு நீதிமன்றங்களிலும் கண்கள் கருப்புத் துணியால் கட்டப்பட்டு தராசினை கையில் ஏந்தி சிலையாக நிற்கும் நீதி தேவதையை நாம் அவமானம் கொள்ளுதல் போன்றதாகும்.

வேறொரு குழந்தைக்கும் பெண்ணுக்கும் நடக்கும் கொடூர பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகள் வேண்டுமானால் நமக்கு அன்றைய செய்தியாகத் தோன்றலாம் நாளை என்றாவது ஓர்நாள் அக்கொடூரம் நம் வீட்டில் நடந்துவிட்டால் ?

குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மூலமாக அவலக்குரல்கள் தொடர்ந்து ஒலிக்குமானால் அவைகள் வெறும் ஓலங்கள் அல்ல நம் மனதினையும் உணர்வினையும் குத்திக் கிழிக்கும் ஈட்டிகள் ஆகும்.

இதோ இந்த கட்டுரை எழுதப்பட்ட நேரத்தில் மதுரை வலையங்குளம் பகுதியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு பயிலும் 16 வயதுடைய பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த திமுகவின் நிர்வாகி ஒருவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர் காவல்துறையினர்.

https://tamil.oneindia.com/videos/sennai-13-vayathu-sirumikku-baliyal-tollai-5-ilainjarkal-bokchovil-kaithu-dhnt-2841350.html

https://www.dinamalar.com/news_detail.asp?id=2992663

https://www.maalaimalar.com/news/district/2022/03/26103146/3615916/tamil-news-police-search-youth-for-harassment-case.vpf

https://www.dinakaran.com/news_detail.asp?Nid=752911

https://www.dailythanthi.com/News/State/2022/03/25234025/School-girl-rape.vpf

https://www.bbc.com/tamil/india-60890792