கொடைக்கானல் : பிப்ரவரி 27, 2023

சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஒரு பெண்ணிடம் இருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதையடுத்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு துரிதமாக விசாரணையும் மேற்கொண்டு அதில் பாலியல் சீண்டல் உறுதியானதை தொடர்ந்து கொடைக்கானல் நீதிமன்ற மாண்புமிகு நீதிபதி அவர்கள் குற்றச்செயலில் ஈடுபட்ட இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளார். மிகத் துரிதமான இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது மேலும் இது போன்ற குற்றங்களில் பாதிப்படைந்த பெண்களுக்கு பக்கபலமாக காவல்துறையும் நீதிமன்றமும் உறுதுணையாக இருந்தது எனில் சர்வசாதரணமாக நடைபெறும் இது போன்ற பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவோருக்கு அச்சம் உண்டாகும்.

பாலியல் கொடுமை வழக்கில் 10 நாட்களில் தீர்ப்பு. மக்கள் நீதி மய்யம் வரவேற்பு. சட்ட வல்லுனர் – திரு. எம்.வி.பாஸ்கர் அறிக்கை, மக்கள் நீதி மய்யம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஒரு பெண்ணிடம் இருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஏறத்தாழ 10 நாட்களில் வழக்கு விசாரிக்கப்பட்டு, தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான வழக்கில், விரைவில் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கியதுடன், `பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து நமது சமூகத்தைப் பாதுகாப்பதற்கு நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்’ என்று கருத்து தெரிவித்துள்ள கொடைக்கானல் நீதிபதியை மக்கள் நீதி மய்யம் பாராட்டுகிறது.

குற்ற வழக்குகளை நீதித் துறை துரிதமாக விசாரித்து, தவறிழைத்தோருக்கு தண்டனை கொடுக்கும் என்ற எண்ணம் உருவானால், குற்றங்களின் எண்ணிக்கை நிச்சயம் குறையும். பெரிதும் வரவேற்கத்தக்க இந்த மாற்றம், பிற நீதிமன்றங்களிலும் ஏற்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

போலவே, இதுபோன்ற கொடுமைகள் நிகழாத வண்ணம் தடுப்பதற்கான முயற்சிகளையும் நமது கல்விநிலையங்களில் இருந்தே தொடங்கவேண்டும். வல்லுனர்களைக் கொண்டு மாணவர்களுக்குக் கவுன்சிலிங் அளிப்பது, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது அவசியம்.

வருடத்தில் ஒருநாள் மட்டும் மகளிர் தினம் கொண்டாடுகிறோம். மகளிர் பாதுகாப்பிற்கான முன்னெடுப்புகள் அன்றாடம் நிகழவேண்டும். அப்படி நிகழ்ந்தால், எல்லா தினங்களும் மகளிர் தினம் ஆகிவிடும்.

பெண்களை சமமாக நடத்துகிற, பாதுகாப்பாக உணரச் செய்கிற, வன்கொடுமைகள் அறவே இல்லாத சமத்துவ மாநிலமாகத் தமிழ்நாடு ஒளிரவேண்டும். இதைச் சாதித்துக்காட்டும் ஆற்றல் தமிழக அரசுக்கு நிச்சயம் உண்டு என மக்கள் நீதி மய்யம் நம்புகிறது, வலியுறுத்துகிறது.

  • எம்.வி.பாஸ்கர்,
    சட்டவல்லுனர், மக்கள் நீதி மய்யம்.