சென்னை ஏப்ரல் 30, 2022

திங்கள் முதல் வெள்ளி வரையே அரசு அலுவலகங்களில் மக்களுக்கான சேவைகள் நடைபெறுவது வழக்கம். இடையில் ஏதேனும் அரசு விடுமுறை நாட்கள் வந்துவிட்டால் அன்றைக்கு தேவைப்படும் பணிகள் முடங்கிப்போய் விடும் அதற்கடுத்த நாளும் சனிக்கிழமை என்றால் சொல்லவே வேண்டாம் ஞாயிறு முடிந்து அடுத்த திங்களன்று தான் பணி நாள் தொடங்கும்.

இதில் மற்ற சேவைகள் எப்படியோ ஆனால் நிலம் வீடு வாங்க விற்க என பத்திரப்பதிவுகளில் கால நேரங்கள் நல்ல நாட்கள் பார்ப்பது வழக்கமான நடைமுறையாகும். இதில் இன்னும் கூடுதலாக தமிழக அரசு தற்போதைய ஆணையாக இனி சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும் என்று வெளியிட்டு உள்ளது. இதனால் நீண்ட வரிசைகள் மற்றும் தாமதங்கள் தவிர்க்கப்படகூடும் மேலும் அரசுக்கு கூடுதலாக ஓர் நாள் பணி நாளாக இருப்பதால் வருவாயும் அதிகரிக்க வாய்ப்புண்டு.

தமிழக அரசின் இப்புதிய அறிவிப்பினை நிர்வாக சீர்திருத்தத்தின் முதல் படியாகவே கருதி மனதார தன் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது மக்கள் நீதி மய்யம்.

ஆனால் இங்கே ஒன்றை குறிப்பிட்டாக வேண்டிய அவசியம், முக்கியமான சில அரசு அலுவலகங்களில் சான்றிதழ்கள் பெற வேண்டியும் தேவையான ஆவணங்கள் பெற வேண்டியும் நடையாய் நடந்தும் அப்படியும் அவற்றுக்கு லஞ்சம் கொடுத்துமே தான் பெற்றுக்கொள்வது என்பது எழுதப்படாத சட்டமாகி விட்டது. இதைக் குறிப்பிடுவதே மனசாட்சிக்கு விரோதமான ஒன்றாகும். கையூட்டு பெறுவதற்கும் வேண்டுமென்றே காலம் கடத்துவதும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

மேலும் அரசு முறை ஆவணங்கள் பெற வேண்டிய காலகட்டங்களில் ஒவ்வொரு சராசரி பொதுஜனமும் தாம் பணிபுரியும் அலுவலகம், வணிக நிறுவனங்கள் அல்லது தாமே நடத்தி வரும் சிறு கடைகளையோ விடுமுறை கேட்டுக்கொண்டு அல்லது கடைகளை அடைத்து விட்டு வரவேண்டியது கட்டாயமாக உள்ளது அப்படி வந்தாலும் அன்றைக்கே அந்த பணி முடிந்து விடும் என்பதும் நிச்சயமில்லை அடுத்த நாளோ அல்லது வேறொரு நாளோ மீண்டும் வர வேண்டியாக இருந்தால் இதற்கு முந்தைய நாளின் சம்பளம் வியாபாரம் இழக்க நேரிடும் அடுத்த நாளும் என்றால் அதற்கான இழப்புகள் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிடும்.

எனவே இது போன்ற சிக்கல்களை சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு முக்கியமான அரசு அலுவலகங்களை இனி ஞாயிற்றுக்கிழமை கூட குறிபிட்ட நேரம் வரை திறக்கப்பட்டு இருந்தால் வாராந்திர விடுமுறையில் இருக்கும் பொதுமக்களுக்கு எந்த சிரமங்களும் இருக்காது சம்பளப் பிடித்தம் வணிகம் இழப்புகள் இருக்காது.

எப்படி இது போல் செய்தால் அத்தகைய அரசு அலுவலக ஊழியர்களின் பணி நாட்கள் கூடுதலாக போய்விடும் மேலும் அவர்களுக்கு சுமையாக ஆகிவிடும் என்று தோன்றும் எனவே அப்படி ஞாயிற்றுகிழமை பணிக்கு வரும் அரசு ஊழியர்களுக்கு வாரத்தின் ஏதாவதொரு நாளில் வார விடுமுறையென விதிமுறைகளை வரையறுத்துக்கொண்டால் மிகச் சிறந்த நிர்வாகத்தை வழி நடத்திச்செல்லும். காவல் துறையினர், மருத்துவத் துறையினர், தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர், பேருந்து ஊழியர்கள் ஆகியோர்களுக்கு வார விடுப்பான ஞாயிற்றுகிழமை என்பது கிடையாது. அவர்களுக்கும் எப்படி வார விடுமுறை ஓர் நாளாக எடுத்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டு வருகிறதோ அதே ஒன்று பின்வரும் துறைகளில் செயல்படுத்த முனைந்தால் நிச்சயம் அந்த முன்னெடுப்பை மக்களுக்காக தொடர்ந்து நடுநிலையோடு இயங்கி வரும் மக்கள் நீதி மய்யம் பெரும்பான்மையான பாராட்டுதலையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்ளும்.

முக்கியமான ஓர் வேண்டுகோளையும் மக்கள் நீதி மய்யம் அரசின் முன் வைக்கிறது அது எந்த அரசுமுறை சேவைகள் பெறுவதாக இருந்தாலும் சட்டபடியும் வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்குட்பட்டு மட்டுமே அச்சேவைகளை மக்களுக்கு எந்தவித இடையூறுகளோ கால தாமதங்கள் இல்லாமலும் மிக முக்கியமாக கையூட்டு எனும் லஞ்ச லாவண்யங்கள் இல்லாமலும் மக்களுக்கு சேவை தந்திட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது.

ஏன் என்றால் லஞ்சம் கையூட்டு என்பது அரசு இயந்திரங்களின் ஸ்திரத்தன்மையை கலகலத்துச் செய்துவிடும் அவற்றை ஒன்றுமில்லாமல் அரித்துவிடும் புற்றுநோய் போன்றது.