ரயில்வே துறையில் காலியாக உள்ள 24,649 பணியிடங்களை நிரப்புவதற்காக ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் வரவிருக்கும் மே மாதம் 9 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இத்தேர்வில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் 2.4 கோடி பேர் விண்ணப்பம் செய்துள்ளார்கள். அதிலும் தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தெரியவருகிறது.
தமிழகத்தில் இருந்து விண்ணப்பம் செய்தவர்களுக்கு உள்மாநிலத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படாமல் அண்டை மாநிலங்களான ஆந்திரா கேரளா கர்நாடகா ராஜஸ்தான் மத்தியப்பிரதேசம் என சற்றும் நினைத்துப்பார்க்க முடியாத தேர்வு மையங்களில் தேர்வெழுத அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது உண்மைக்கு புறம்பான ஓர் செயல்.
9 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்றால் அன்று அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள்ளாக தேர்வு மையத்தில் இருக்க வேண்டியது கட்டாயம். அப்படி என்றால் தமிழகத்தில் இருந்து அடுத்த மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் அதற்கு முந்தைய நாளே சென்று சேரவேண்டிய கட்டாயமாகிறது. அப்படி சேரவேண்டும் என்றால் தங்குமிடம் உணவு வசதிகள் என அனைத்தையும் ஏற்பாடு செய்ய வேண்டும். அதிலும் தேர்வு மையங்கள் புறநகரில் இருந்ததென்றால் அங்கே சென்று சேர போக்குவரத்தும் சுலபமாக இருந்தாக வேண்டும். இவ்வளவு சிரமங்களை உண்டாக்கும் மெத்தனப்போக்கு ஏன் என்பதே மக்கள் நீதி மய்யம் எழுப்பும் கேள்வி.
தேர்வெழுதவே இவ்வளவு சிரமங்களை தாங்கியாக வேண்டிய சூழலை உண்டாக்கிய ரயில்வே பணியாளர் தேர்வு ஆணையம் இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தேர்வெழுதும் மையங்களை விண்ணப்பித்த தேர்வர்கள் சிரமம் கொள்ளாத வகையில் அந்தந்த மாநிலங்களிலேயே தேர்வெழுத ஆவண செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது.