தமிழகத்தில் நடைபெறவிருந்த சட்டமன்ற தேர்தல் பொதுகூட்டதிற்கு வருகை தந்த நமது முன்னாள் பிரதமர் திரு ராஜீவ்காந்தி அவர்கள் மே 19 அன்று மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார், அந்த குண்டுவெடிப்பில் உடன் இருந்த பலரும் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை தொடங்கி விசாரணையை மேற்கொண்டு வந்த சிறப்புப் புலனாய்வுத்துறை பலரை கைது செய்தனர் அதில் ஒருவரான பேரறிவாளன் ஜூன் மாதம் 1991 இல் அவரது 19ஆவது வயதில் கைது செய்யப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்ட பேரறிவாளனுக்கு தொடர்ந்து வந்த விசாரணையில் 1998 ஆண்டில் இவருக்கும் மேலும் 25 பேருக்கும் தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டது. பின்னர் பல காலகட்டங்களில் மேல்முறையீட்டில் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 9 பேர் மட்டும் குற்றமற்றவர்கள் என உறுதி செய்து விடுவிக்கப்பட்டனர் எனினும் பலர் தொடர்ந்து சிறைத்தண்டனையை அனுபவித்து வந்தனர் இதற்கிடையில் பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதியன்று பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட்டு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பின்னர் அவர் ஜனாதிபதிக்கு 2014 ஆம் ஆண்டில் அவர் அளித்த கருணை மனுவில் அரசியல் சாசன பிரிவின் 161 படி தன்னை விடுவிக்கும்படி கோரியிருந்தார்.
பல வருடங்களாக பேரறிவாளனின் தாய் அற்புதத்தம்மாள் மத்திய மாநில அரசுகளுக்கும் ஒவ்வொரு நீதிமன்றத்திற்கும் தனது மகனை விடுவிக்ககோரி ஓய்வரியாமல் உடல் வருந்தினாலும் அதை பொருட்படுத்தாமல் அதற்கான சட்ட போராட்டங்களை சற்றும் சளைக்காமல் இம்மியும் துவண்டு போகாமல் அலைந்து திரிந்தார்.
மாநில அரசின் ஆட்சிப் பொறுப்புகளுக்கு வந்த முதல்வர்கள் தங்களின் பெயரையும் ஆட்சியையும் தக்க வைக்கும் பொருட்டு மேற்கண்ட பேரறிவாளன் உட்பட விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனைக் காலம் முழுமையாக முடிந்தும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 7 நபர்களின் விடுதலைக்கு சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் இயற்றப்பட்டு அதை மாநில ஆளுநருக்கு அனுப்பியும் நமது நாட்டின் ஜனாதிபதிக்கு அனுப்பியும் விடுதலை செய்யக்கோரி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எனினும் அதில் பல்வேறு அரசியல் ரீதியான ஆதரவுகளும் அதே சமயம் விடுதலைக்கு எதிராக ஆட்சேபக் குரல்களும் ஒலித்தது.
இதனிடையில் ராஜீவ்காந்தி அவர்களின் மகளான பிரியங்கா காந்தி மற்றும் மகன் ராகுல்காந்தி ஆகியோரும் இவர்களது விடுதலைக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்பதாகவும் அறிவித்தார்கள்.
2016 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுக அரசு மேற்சொன்ன எழுவரின் விடுதலையை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் இயற்றி அதை மத்திய அரசின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது ஆயினும் அதற்குப்பின்னர் 2018 அந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது, அதன் காரணமாக சி.பி.ஐ வசம் இருக்கும் வழக்கில் மாநில அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க அதிகாரம் இல்லை என்ற அறிவிப்பினை செய்தது. இதனைத் தொடர்ந்து எடப்பாடி கே பழனிச்சாமியின் தலைமையில் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு செப்டம்பர் 9 ஆம் தேதியன்று பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுவிக்க வேண்டும் என்று சிறப்புத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அதனை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது, இதனை அப்படியே ஆளுநர் அவர்கள் குடியரசுத்தலைவர் பார்வைக்கு அனுப்பி வைத்தார் எனினும் குடியரசுத்தலைவரும் எழுவரின் விடுதலை மீதான தீர்மானத்தினை முடிவு எட்டப்படாமலே இருந்தது. 2021 இல் முதல்வர் திரு ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றபின் பேரறிவாளனுக்கு சட்டத்தின் சட்டத்தின் வழியாக பரோல் அளிக்கப்பட்டது.
இதற்கிடையில் சிறைவாசத்தை அனுபவித்து வந்த பேரறிவாளன் பிசிஏ, எம்சிஎ போன்ற பட்டப்படிப்புகளும் ஐந்துக்கும் மேற்பட்ட சான்றிதழ் படிப்புகளையும் முடித்துள்ளார். மேலும் திறந்தவெளி பல்கலையின் மூலமாக டெஸ்க்டாப் பப்ளிஷிங் படிப்பில் முதல் மாணவனாக தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
சிறையில் இருந்து கொண்டே தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் எனும் புத்தகத்தினையும் எழுதி வெளியிட்டார். அதில் எவ்வித குற்றமும் இழைக்க வில்லை என்றும் தான் ஒரு நிரபராதி எனவும் தனது வாதங்களை முன்வைத்தார்.
இந்நிலையில்தான் தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம், அவரை விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆளுநர் முடிவு எடுக்காமல் காலதாமதம் செய்ததாக ஏற்கனவே கூறியிருந்த உச்ச நீதிமன்றம் 142வது பிரிவுப்படி தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அவரை விடுதலை செய்துள்ளது.
ஓர் ஆயுள் தண்டனைக்காலம் என்பது 14 ஆண்டுகாலம் கொண்டது ஆனால் இரட்டை ஆயுள் தண்டனைக்காலத்தை விட இருமடங்குக்கும் மேலாக சுமார் 30 ஆண்டுகள் கடந்தும் தற்போது சட்டத்தின் வழியாகவே நடந்த ஓர் அறவழி போராட்டம் முடிவுக்கு வந்தது. பேரறிவாளான் எனும் சிறைப்பறவை இனி சுதந்திரமாக பிடித்ததை செய்து பிடித்தபடி வாழ்ந்து வர எந்தத் தடையும் இல்லை.
பலர் சட்டத்தினை கையில் கொண்டு அதனை துஷ்ப்ரயோகம் செய்து அதிலுள்ள விதிவிலக்குகளை வளைத்து அவசியமற்று குறுக்குவழிகளில் சென்று சமூக சீர்கேட்டினை உண்டாக்கி விடுகிறார்கள். அவற்றை அறவே தவிர்த்து அறவழி மட்டுமே மகத்தானது என்றும் சட்டத்தின் படியே செல்வது மட்டுமே சிறந்தது என்றும் உணர்த்த வைத்திருக்கிறது என்கிற வகையில் தனது மகிழ்ச்சியினை தெரிவித்து உள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள்.