கடலூர் ஜூன் 24, 2022

என்ன காரணம் என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த விபத்துகள் எப்படி ஏற்படுகின்றன என்றும் விபரங்கள் வெளிவருவதில்லை. வருடத்தில் ஓர் நாள் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படும் ஆனால் அதற்காக வருடம் முழுவதும் பட்டாசுகள் தயாரிப்புப் பணிகள் நடைபெறுவது வாடிக்கை. இதில் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லையென எச்சரிக்கை அறிவிப்பு ஒவ்வொரு பாக்கெட்டிலும் அச்சிடப்படுவது அவசியம். அது மட்டுமல்லாது இனி ஒவ்வொரு பட்டாசு பாக்கெட்களில் உயிர்சேதம் அல்லாத தயாரிப்பு என்று அச்சிடப் படவேண்டிய காலகட்டத்திற்கு பட்டாசுகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வரைமுறைப்படுத்தப்படவேண்டும் காலம் விரைவில் கொண்டு வரப்படவேண்டும்.

பட்டாசுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணி பாதுகாப்பினை உறுதி செய்வது தொழிற்சாலையின் உரிமையாளரின் கடமை. பாதுகாப்பான வழிமுறைகள், அதற்கான உபகரணங்கள் முதலுதவி மருந்துப்பொருட்கள், மருத்துவ உதவிகள் சிறு விபத்து/தீ பற்றி எரிய நேர்கையில் அதனை அணைத்திட தேவையான உபகரணங்கள் அல்லது வெடிவிபத்துகள் ஏற்படா வண்ணம் அரசின் வழிமுறைகள் சட்டவிதிமுறைகள் மீறப்படாமல் அனுமதிக்கப்பட்ட அளவீடுகளில் மட்டுமே மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகள் தயாரிக்கப்பட வேண்டும்.

இப்படி அடிக்கடி பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் ஏற்படுகிறது என்றால் ஒன்று அங்கே விதிமீறல் ரசாயணங்கள் அல்லது பாதுகாப்புகள் குறைபாடுகளாக மட்டுமே இருக்கக்கூடும்.

இதுபோல் விபத்துகள் நடந்து உயிர்பலிகள் ஏற்படாமல் இருக்கவேண்டுமானால் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த ஆய்வாளர்கள் சுழற்சி முறையில் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் பாதுகாப்பு வழிமுறைகள் தகுந்த முறையில் செய்யப்பட்டுள்ளதா என மேற்கொள்ளும் ஆய்வுப்பணிகளை எந்த இடையூறுகள் இன்றி நீதியுடனும் நேர்மையுடனும் செய்து வந்தால் இத்தகைய விபத்துகள் ஏற்பட்டு அப்பாவி உயிர்கள் பலியாவதை தடுக்கலாம்.

தீபாவளி பண்டிகை என்பது அசுரனைக் கொன்று நல்லதை நிலைநாட்டியதாக நம்பப்படும் ஓர் இறைநம்பிக்கை. லட்சக்கணக்கான மக்களின் மகிழ்ச்சியை கொண்டாட்டத்தை அடைவதற்காக பல உயிர்களை அவர்களின் கனவும் அவர்களின் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை காகிதக் கட்டுகள் போலவும் மற்றும் கந்தகத் துகள்களாக்கி எரிக்கச் செய்வது என்ன நியாயம் ?