சென்னை ஜூன் 30, 2022

படிக்கச் சொல்லாத அரசு குடிக்கச் சொல்கிறதே என்று நமது இணையதளத்தில் சிறிது காலம் முன்பு கட்டுரை எழுதி இருந்தோம்.

இன்றைக்கு அது உண்மையாக போய் விட்டது. நீதி மன்றங்கள் அவ்வபோது மதுக்கடைகள் திறப்பு பற்றி குட்டு வைத்தாலும் அதை அப்படியே காற்றில் விட்டு நினைத்ததை செய்யும் ஆட்சி.

மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நினைக்கும் போது அதற்கான பணிகளை துவக்கி வைக்கவும் மற்ற எல்லோருக்கும் முன்னே நிற்கும் நமது மக்கள் நீதி மய்யம் என்று வீதிக்கு வீதி முழங்கிய தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் இன்னுமொரு முக்கிய விஷயத்தையும் சொன்னார். மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடைகள் குறைக்கப்பட்டு பின்னே மிக குறுகிய காலத்தில் அவற்றை முற்றிலுமாக ஒழித்து விடுவோம் மதுக்கடைகளின் வருவாயை வைத்து அரசை நடத்துவது ஒப்புக் கொள்ள முடியாத செயல் என்றும் மேலும் அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சிகளுக்கும் மதுவிலக்கு என்பது தேர்தல் நேரத்தில் தரும் பொய் வாக்குறுதி ஜெயித்தபின் அப்படி என்றால் என்ன என்று கேட்பார்கள் நான் அவர்களை கேட்கிறேன் மது ஆலைகளை மூடச் சொல்லுகிறேன் பார்ப்போம் அதை செய்வார்களா என்று நிச்சயம் செய்ய மாட்டார்கள் ஏனென்றால் இந்த இரண்டு கட்சிக்காரர்களிடமும் மது ஆலைகள் இருக்கின்றன. அதனால் இவர்கள் மதுவை ஒழிக்க மாட்டார்கள் ஏனெனில் மது ஆலைகளால் வரும் வருமானம் போய்விடும் அல்லவா ? என்பார்.

அன்றைக்கு தலைவர் சொன்னது போல் இவர்கள் செய்யவில்லை என்பதற்கு தற்போது டாஸ்மாக் கடைகளை திறக்க முற்படுவதே சாட்சியாகும்.

சமீப காலங்களில் பள்ளிப் படிப்பு படிக்கும் மாணவ மாணவியர்களே பல ஊர்களில் மது அருந்தும் காணொளிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது எவ்வளவு பெரிய கேடு இந்த மதுப்பழக்கத்தை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சென்று விட்டது மட்டுமே இந்த இரண்டு கழகங்களின் சாதனை.

ஒரு மாநிலத்தின் அரசு கல்வி மருத்துவம் சுகாதாரம் லஞ்சமற்ற ஊழலற்ற நிர்வாகத்தை பொதுமக்களுக்கு தருவதே தலையாய கடமையாக கொண்டிருக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியின் போது மதுக்கடைகள் திறக்கப்படுகையில் அதை எதிர்த்து அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் அவர்கள் கருஞ்சட்டை அணிந்து கருப்புக் கொடி ஏந்தி பல இடங்களில் போராட்டங்கள் செய்தார்.

ஆனால் அதிமுக ஆட்சி முடிந்து திமுக ஆட்சி அமைந்தும் காட்சி மாறவில்லை. பல இடங்களில் அதாவது மக்கள் வெகுவாக புழங்கும் சந்தைகள் வழிபாட்டுத் தலங்கள் அருகிலேயே டாஸ்மாக் கடைகளை திறப்பதை ஒப்புக் கொள்ளாமல் தங்கள் எதிர்ப்புகளை பொதுமக்கள் போராட்டங்களில் வாயிலாக தெரியப்படுத்தி வருவதும் தெரிந்ததே. விதிகளை மீறி மதுபான கடைகளை திறப்பது ஜனநாயகத்தை வேருடன் அழிப்பதற்கு சமமாகும்.

டாஸ்மாக் கடைகளை அதிகமாக திறப்பது மகளிரை பெண் பிள்ளைகளை பல வழிகளில் அவர்களுக்கு தொல்லைகள் ஏற்பட வழி வகுப்பதாகும். மது அருந்துவோர் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருவதால் விபத்துகளும் ஏற்படுகிறது மேலும் சண்டை சச்சரவுகளும் உண்டாகிறது. குறிப்பாக பாலியல் அத்து மீறல்கள் பெருகிவிட்டன எனலாம். மது போதையால் கொலை சம்பவங்களும் பெருகிவிட்டன.

கொரோனா பெருந் தொற்று தற்போது பெருகி வருவதாக சொல்லும் வேளையில் முன்பே உள்ள மதுக்கடைகளை மூடுவதை விட்டுவிட்டு புதிதாக கடைகளைத் திறப்பது மக்களை இன்னும் பலி கொடுப்பதற்கு சமமாகும்.

திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால் அவற்றுக்கு புறம்பாக புதிது புதிதாக டாஸ்மாக் கடைகளை திறப்பதும் மது அருந்தும் பார்களை திறப்பதும் அதிகமாகி வருகிறது இதற்குத்தானா மக்கள் திமுகவிற்கு வாக்களித்து ஆட்சியைப் பிடிக்கச் செய்தனர்.

டாஸ்மாக் கடைகளின் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது என்றும் மது அருந்தும் பார்கள் மூலமும் வருவாய் தனியார்களுக்கு கிடைக்கப்படுகிறது என்றும் யோசித்தால் மது அருந்தும் பழக்கமும் அருந்துவோரின் எண்ணிக்கையும் அதிகமாகிவிடும். மது இதனால் அருந்துவோர் மட்டுமல்லாமல் சாதாரண பொது மக்களுக்கும் இதனால் சிரமங்கள் உண்டாகும்.

டாஸ்மாக் மதுபான கடைகளையும் மது அருந்தும் பார்களையும் கல்வி நிறுவனங்களுக்கு மற்றும் பள்ளி வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலோ அமைக்காமல் மேலும் பிரதான சாலைகளிலும் அமைக்காமல் ஊருக்கு ஒதுக்குப்புறமாக குறைந்த எண்ணிக்கையே மதுபான கடைகள் இருக்கச் செய்யலாம். இதனால் பொது மக்களுக்கு ஏற்படும் தேவையற்ற இன்னல்களை தவிர்க்கலாம். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக டாஸ்மாக் கடைகளை குறைத்து பின்னர் மதுவிலக்கை அமல்படுத்தலாம். இப்படிச் செய்தால் இதுவரை மது அருந்தி வந்தவர்களுக்கு உடல் நிலையில் நிலை குலைக்கும் படியான மாற்றங்கள் இல்லாமல் அவர்களால் இயல்பாக குடிப்பழக்கத்தை கைவிட ஏதுவாகும்.

நாளைய சமுதாயம் மது, கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் இல்லாத நல்ல சமுதாயமாக உருவாக நாம் முக்கிய காரணமாக வேண்டும் என்பதில் மிக உறுதியாக நிற்கும் ஓர் மக்களுக்கான கட்சியாக மக்கள் நீதி மய்யம் திகழும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை எனலாம்.