கோவை, ஜூலை 06, 2022
சூயஸ் திட்டத்தில் இரட்டை வேடம் போடும் திமுக.
கடந்த அதிமுக ஆட்சியில் 2018-ம் ஆண்டு சூயஸ் என்கிற பிரெஞ்சு நிறுவனத்துக்கு 3000 கோடி மதிப்பில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குடிநீர் வழங்க ஒப்பந்தம் 26 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது.
அப்போது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் சூயஸ் திட்டத்தை ரத்து செய்வோம் என கோவை மாவட்டத்துக்கான தேர்தல் வாக்குறுதியில் திமுக தெரிவித்திருந்தது.
6.7.2018, 19.6.2019, 27.8.2019, 10.10.2019 மற்றும் 28.11.2019 ஆகிய தேதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பல கட்ட அறவழிப் போராட்டங்களை நடத்தியது.
தற்போது தன் தேர்தல் வாக்குறுதியை எல்லா ஓட்டுக் கட்சிகளும் செய்வதைப்போல காற்றில் பறக்கவிட்டு, மக்கள் பிரச்சினையாவது மண்ணாங்கட்டியாவது என்று சூயஸ் திட்டத்தை செயல்படுத்துகிறது.
கோவை மாநகராட்சியின் முதல் பட்ஜெட் கூட்டம் 30.3.2022 அன்று நடைபெற்றது. மேயர் கல்பனா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டம் தொடரும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் “தற்போது 76-வது வார்டு ஜெயராம் நகர் என்கிற பகுதியில் 1240 வீட்டு இணைப்புகளுக்கு இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மற்ற பகுதிகளிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
இத்திட்டம் 2025-ம் வருடம் முழுமையினைப் பெற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் வழிகாட்டுதலின்படி குடிநீரையும் விற்பனைப் பண்டமாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் சூயஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நவ தாராளமயம், பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படுவது தான் திராவிட மாடலா?. தமிழக அரசு சூயஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். –
நன்றி கட்டுரையாளர் : M தாலிஃப்
https://www.bbc.com/tamil/india-59987553