சென்னை- ஜூலை 19, 2022

சிறந்த மனிதர்களை உருவாக்கிடும் கல்வியை கற்றுக்கொடுக்கும் தனியார் நிர்வகிக்கும் கல்விக்கூடங்கள் பல தங்களிடம் பயிலும் மாணவர்களை மார்க் எடுக்கும் மெஷினாக பார்க்கிறது. மேலும் பல பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று ஊரிலேயே ஏன் உலகிலேயே சிறந்து விளங்கிட வேண்டும் என்று பேராசைகள் கூட உண்டு என்றால் மிகையாகாது.

அப்படி எண்ணமுள்ள பெற்றோர்கள் பலர் தங்கள் பிள்ளைகளை நெம்பர் ஒன் என்று பெயரெடுத்த பள்ளிகளில் எக்கசக்க பணம் கட்டியும் படிக்க வைத்திட முயல்கையில் அதை தங்களின் துருப்புசீட்டாகவே பயன்படுத்திக் கொள்கிறார்கள் தனியார் பள்ளி நிறுவனர்கள்.

ஹாஸ்டல் வசதிகள் உள்ள பள்ளிகள் என்றால் சொல்லவே வேண்டாம் அதிகாலை முதல் இரவுவரை பிள்ளைகளை புத்தகங்கள் கையுமாகவே இருக்கச் செய்யும்படி அழுத்தம் தருகிறார்கள். எந்த பொழுதுபோக்குகளும் பிள்ளைகளுக்கு இல்லை. மன அழுத்தம் தரும்படியான சந்தர்ப்பங்கள் மாணவர்களுக்கு உண்டாவதால் அவர்கள் விபரீத முடிவுகளை எடுத்து விடுகிறார்கள். இவற்றையெல்லாம் விட உண்டு உறைவிடப் பள்ளியில் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவிகளின் நிலை சொல்லவே தேவையில்லை. சில குறுக்குப்புத்தி சபல எண்ணங்களும் உடையவர்கள் சில மாணவிகளை பாலியல் தொல்லை தந்து விடுகிறார்கள்.

தனியார் பள்ளிகளின் தரம் சுற்றுச்சூழல் மாணவர்களுக்கு போதுமான வசதிகள் கழிவறை உட்பட போதுமான அளவில் கண்காணிப்புக் கேமேராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதா, தங்கும் விடுதிகள் உள்ள பள்ளிகள் என்றால் 24 மணிநேரமும் வாட்ச்மேன் எனப்படும் காவலாளிகள் போடப்பட்டு உள்ளதா என்றெல்லாம் ஆய்வு செய்திட வேண்டும். அப்படி ஆய்வு செய்யும் அதிகாரிகள் அரசு பள்ளிகளுக்கே எப்போதாவது தான் பேருக்கு வருகிறார்கள் என்ற நிலை உள்ளபோது தனியார் பள்ளிகளுக்குள் அவர்கள் நுழைவதே அவசியமற்ற கருதக்கூடும். இது போன்ற ஆய்வுகளை தவிர்க்காமல் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தனியார் பள்ளிகளுக்கும் விதிகளை கடுமையாக விதிக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் விதிமீறுதல்கள் உள்ளனவா என்றும் கண்கானிக்கப்படவேண்டும்.

சட்டம் ஒழுங்கு

சட்டமும் ஒழுங்கும் ஆட்சியாளர்கள் தங்களின் இரு கண்கள் போல கருதவேண்டும். ஒரு மாநிலத்தின் முதல்வர் மட்டுமே பெரும்பாலும் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். காவல்துறையின் உயர்ந்த பதவிகளுக்கு தகுந்த நுண்ணறிவும், செயல்திறனும், நேர்மையும், துணிச்சலும் கொண்ட அதிகாரிகளை நியமிப்பது மட்டுமே சட்டத்தையும் ஒழுங்கையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும். காவல்துறையின் உயரிய பதவிகளுக்கு அடுத்தடுத்த பதவிகளும் இதே போன்று தொடர்ந்து வந்தது எனில் அம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறை சொல்ல முடியாதபடி சிறப்புடன் அமையும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். அதைபற்றிய விவாதம் எழுந்தபோது அதிமுக ஆட்சியின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த சம்பவத்தையே நான் தொலைக்காட்சியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் எனும் ரீதியில் பதிலளித்தது கேலிக்குரியதாக எடுத்துக் கொள்ளாமல் வேதனைக்குரியதாக எடுத்துக் கொள்வதே சரி.

இவ்வளவு மெத்தனப்போக்கில் ஓர் ஆட்சியாளர்கள் இருப்பதினால் நாடெங்கும் கொலை, கொள்ளைகள், பாலியல் துன்புறுத்தல்கள், வன்புணர்வுகள் என நாள்தோறும் அரங்கேறி வருவதும் அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் நிற்கும் காவல்துறையினர் எப்படி என்ன பதில் கூறுவார்கள் ?

கள்ளக்குறிச்சி பள்ளியில் மர்மமான முறையில் இறந்து போன 12 ஆம் வகுப்பு மாணவியின் மரணம் எதனால் நிகழ்ந்தது அது கொலையா தற்கொலையா (இருக்கின்ற சந்தர்ப்ப சாட்சியங்களை கொண்டு பார்க்கப் போனால் அது கொலையாக இருக்கக்கூடும் என அப்பெண்ணின் பெற்றோர் சந்தேகிக்கின்றனர்) எனத் தெரியாமல் போஸ்ட்மார்ட்டம் செய்து முடித்தும் உடலை பெற்றுக் கொள்ளாமல் பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு துவங்கிய போராட்டம் கலவரமாக மாறிப் போய் பள்ளி வளாகத்தில் புகுந்த வன்முறையாளர்கள் பலர் அங்கிருந்த பொருட்களை அடித்தும் வாகனங்களை நொறுக்கியும் தீ வைத்து எரித்ததும் நடந்து முடிந்தது. அதற்கு பள்ளித்தரப்பில் இருந்து தரப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு களத்தில் இறங்கிய காவல்துறையினர் மிக மெதுவாகவே செயல்படத்துவங்கியது.

உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்தது எனலாம், ஆனால் பெற்றோர்கள் இந்த வழக்கினை தமிழகத்தின் சிபிசிஐடி துறையினர் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதில் தலையிட்ட சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

கள்ளகுறிச்சி மாணவியின் மரணத்தில் உண்டாகும் சந்தேகம் அதன் மீதான விசாரணையை துரிதமாக அதே சமயம் நேர்மையாக நடத்திட வேண்டும் எனவும் குற்றவாளிகள் தக்க தண்டனையை பெரும் வகையில் எந்த அரசியல் இடையூறுகளின்றி நடத்திட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

https://www.dailythanthi.com/News/State/action-should-be-taken-impartially-in-kallakurichi-students-death-kamal-haasan-749072

https://www.google.co.in/amp/s/www.news4tamil.com/kamal-haasan-opinion-in-kallakurichi-school-child-death-issue/amp/