சென்னை, செப்டம்பர் 26, 2022
பெரிய பட்டியல் தந்தனர் தேர்தல் வாக்குறுதிகள் வழியாக. அதில் இலவசம் என பல. பெற்ற ஓட்டுக்கள் எதன் மூலமாக என்பதும் அவர்களுக்கு தெள்ளத்தெளிவாக தெரியும்.
அரசு சார்பில் நடத்தப்பட்ட ஓர் விழாவில் உயர்கல்வி அமைச்சரான பொன்முடி அவர்கள் பேசுகையில் பெண்களுக்கான நலத்திட்டங்களை எங்கள் திமுக திராவிட மாடல் அரசு தொடர்ச்சியாக வழங்கிக் கொண்டே இருக்கிறது எனும் ரீதியாக நீட்டி முழக்கிக் கொண்டிருந்தவர் கொரொனோ நிதியாக நான்காயிரம் ரூபாயும் தந்தது என்றும் சொன்னவர் அடுத்து பேசியது தான் எரிகின்ற தீயில் இன்னும் எரியட்டும் என்று பெட்ரோல் ஊற்றிய கதையாகிப் போனது.
என்ன ஐயா எல்லாம் பெண்களின் நலனுக்காக தருகிறீர்களே ஆண்களான எங்களுக்கு எந்த சலுகைகளும் இல்லையா என்று சொல்லிவிட்டாவது அந்த பேச்சை நிறுத்தி இருக்கலாம். பேச்சு சுவாரஸ்யத்தில் பெண்களுக்கான இலவசப் பயணம் குறித்து சிறப்பான வார்த்தை முத்துக்களை உதிர்த்தார் அது “பெண்களான நீங்கள் சென்று வருகிறீர்களே கோயம்பேடில் இருந்து இதோ இங்கு வந்து சேர பஸ் பயணம் அது ஓசி எப்படி ஓசி” என்றார் அதுவும் சாதரணமாக சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை என்று கடந்து விட்டு போகலாம் (எப்படிச் சொல்லியிருந்தாலும் அது தவறு தான் எனினும் மூத்த அமைச்சராக இருப்பதால் கொஞ்சம் சகித்துக் கொண்டு போகலாம் அதையும் சகித்துக் கொண்டு செல்வது அவரின் சொந்தக் கட்சியை சேர்ந்தவர் ஆக மட்டுமே இருக்கக் கூடும். அதிலும் உதயநிதி ஸ்டாலின் சொன்னாரே வெக்கம் மானம் சூடு சொரணை இருக்கிறவர்கள் எந்த தொணியில் சொன்னாலும் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்) அவருடைய அந்த வார்த்தை உச்சரிப்பில் ஓர் திமிர் தெரிந்தது, ஆணவம் தெரிந்தது, அதிலும் அவருடைய உடல்மொழி எல்லாவற்றையும் விட ஒரு படி மேலாக எகத்தாளமும் அலட்சியமும் தெரிந்தது.
அரசியலில் உங்களின் அதிகாரங்களை ஆளுமைகளை நிலைநிறுத்திக்கொள்ள நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பேசிச் செல்ல மக்கள் என்ன ஆட்டு மந்தைகளா ? கேலியும் கிண்டலுமாக மக்களுக்கு அப்பாற்பட்ட பொதுவான விஷயங்களை ஏதேனும் பகிரலாம் அல்லது நகைச்சுவை உணர்வு ததும்ப திரைப்படங்களில் இருந்து ஏதேனும் காட்சிகளை விவரித்து பேசலாம் அவையும் இல்லை என்றால் என்னென்ன சொன்னோம் அவற்றில் எதைச் செய்து முடித்தோம் என்று புள்ளி விவரங்கள் தந்திருக்கலாம் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழக பெண்களை பயணக் கட்டணம் கொடுத்துச் செல்ல இயலாதவர்களைப் போல் சித்தரித்தது போன்ற அலட்சியப் பேச்சு எதற்கு ?
இப்படியே ஒவ்வொரு அமைச்சர்களும் அவ்வப்போது மிகச்சிறந்த முத்துக்களை உதிர்த்துக் கொண்டே வருகிறார்கள். உதிர்ந்த முத்துக்களை கோர்த்தெடுத்து அணியப்போகும் மாலை அடுத்த தேர்தலில் திமுகவை ஈசியாக ஓரம்கட்டி வைக்கும் இந்த ஓசி !
உயர்கல்வித்துறை அமைச்சரான திரு பொன்முடி அவர்களின் பேச்சிற்கு கடும் விமரிசனங்கள் எழுந்ததையடுத்து சர்ச்சையை குறித்து தான் சாதாரணமாக பேசும் தொனியில் பேசிவிட்டதாக கூறி வருத்தம் தெரவித்தார்.