சென்னை – நவம்பர் 25, 2௦22

ஆதாரை இணைக்காவிடில் மின்கட்டணம் செலுத்தமுடியாது என்ற நிலையைக் கைவிடுக! ஆதாரை இணைக்க 3 மாத கால அவகாசம் தரப்படவேண்டும். மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். – திரு செந்தில் ஆறுமுகம், மாநில செயலாளர், மக்கள் நீதி மய்யம்

மத்திய அரசின் மூலமாக வழங்கப்பட்டு வரும் ஆதார் எண் இன்றைக்கு எல்லா துறைகளிலும் இருந்து சேவை பெறுவதற்கு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வங்கிக்கணக்கு, வருமானவரி கணக்கு பான் கார்டு முதற்கொண்டு பல அடையாள அட்டைகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பல துறைகளின் அடையாள அட்டைகளுடன் ஆதார் எண் இணைக்கப்படுவது முறைகேடுகளை தவிர்க்கும் என்பதும் உண்மையே. மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் பலவும் அதன் மூலமாக கிடைக்கக்கூடிய பலன்கள் சலுகைகள் வேறு வழிகளில் முன்பே பெற்றவர்களுக்கே மறுபடி மறுபடி கிடைப்பதை தடுக்கும் மேலும் அனைவருக்கும் அவ்வாறான பயன்கள் கிடைக்கக்கூடிய வகையில் வழிசெய்யும் என்பதில் ஐயமில்லை.

அந்த வகையில் மத்திய அரசின் வழிமுறையின்படி பொதுமக்கள் தங்கள் பயன்பாட்டுக்கான வீட்டு உபயோக மின்சார இணைப்பும் மற்றும் வணிக ரீதியாக பெறப்பட்டுள்ள மின்சார இணைப்புகள் என இரண்டு வகைப்பட்ட மின் இணைப்புகள் அதன் அசல் உரிமைதாரருடைய ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இதனால் ஒவ்வொரு வீடு மற்றும் வணிக ரீதியிலான மின் இணைப்புகள் ஒருவேளை முறைகேடாக பெறப்பட்டிருந்தால், அதிகமாக இணைப்புகள் வைத்திருத்தல் போன்றவற்றை இனம்கண்டு அவற்றை கட்டுப்படுத்தி அல்லது துண்டித்தும் அவசியமற்ற போலி மின் இணைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

அதனால் தமிழ்நாடு அரசு மின்பகிர்மானத்துறை மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது ஆதார் அட்டை மின் நுகர்வோர் இணைப்புடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வீட்டு மின் இணைப்பு நுகர்வோருக்கு 100 யூனிட் மின்சாரம், குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இலவச மின்சாரம், விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. மேலும் பொது வழிபாட்டுத் தலங்களுக்கு முதல் 750 யூனிட் இலவசமாகவும், விசைத்தறிக்கு , முதல் 200 யூனிட் இலவசமாகவும் வழங்கப்படுகிறது. இவர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின் நுகர்வோர்கள், குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இதனால் பல சிரமங்கள் உண்டாகியுள்ளதாக தெரியவருகிறது. தற்போது தமிழக அரசின் மின் நுகர்வோர் வாரியம் செய்துள்ள அறிவிப்பால் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது மட்டுமல்லாமல் குறுகிய கால இடைவெளியில் ஆதார் எண் இணைக்கப்படவேண்டும் என அழுத்தம் தருவது பொதுமக்களுக்கும் மட்டுமல்லாது மின்சாரத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிக பனிச்சுமையை உருவாக்கியுள்ளது. கிராமபுறங்களில் போதுமான அளவில் ஊழியர்கள் இல்லாத காரணத்தினால் மின் கட்டணம் அளவீடு செய்வது முதல் அவற்றை வசூலித்து வருகின்ற நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மின்வாரிய அலுவலகங்களில் தற்போது ஆதார் இணைக்கப்படவேண்டும் என்கிற அறிவிப்பால் அலைமோதும் மக்கள் கூட்டத்தினை அவர்களால் சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள்.

இதனால் உண்டாகும் தாமதங்கள் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்படும் நிலை உள்ளதால் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.

அரசின் துறைகளில் அடுத்தடுத்த நிர்வாக சீர்திருத்தம் செய்யப்படும் நோக்கில் கணினி மயமாக்கப்படுவதோ, இதுவரை இருக்கும் தரவுகளை சரிபார்ப்பது, இணைத்தல் அல்லது நீக்குதல் போன்றவைகள் மற்றும் அத்துறையை தற்போதுள்ள நவீன கோட்பாடுகளுடன் மேம்படுத்துவது போன்றவை மாநிலத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது தான் என்றாலும் அத்தகைய மாற்றங்களை மேற்கொள்ள அனைத்து வகையிலும் மனிதவளமும் மற்றும் தொழில்நுட்ப வசதிகளும் ஒருங்கே அமையப்பெற்றால் மட்டுமே மேற்கண்ட பணிகள் நிறைவுபெறும்.

ஆனால் அதற்கு மாறாக தமிழகம் முழுக்க அமைந்துள்ள மின்சார வாரிய அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்தும் கவுண்டர்களில் போதுமான அளவில் ஊழியர்கள் அமர்த்தப்பட்டு இல்லாததால் ஆதார் எண் இணைக்கப்படவேண்டும் என்ற அறிவிப்பினால் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகின்றது, அதனால் பெரும் சிரமத்திற்குள்ளாகும் அவர்கள் இத்திட்டத்தின் மேல் அதீத எரிச்சலும் எதிர்மறையான அதிருப்தியை உண்டாக்குகிறது எனலாம்.

எனவே தமிழக அரசு இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட வேண்டிய கால அவகாசத்தை இன்னும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பதால், பதியப்படும் தகவல்களில் எந்தப் பிழையும் இல்லாமல் பொதுமக்களுக்கு வீண் அலைச்சல்கள் மற்றும் ஊழியர்களுக்கு அதீத பனிச்சுமையை ஏற்படுத்தாமல் சுமூகமாக இப்பணியை மேற்கொள்ள ஏதுவாகும் என மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொண்டுள்ளது.

மின் மோசடிகளை தவிர்க்க ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை சேர்க்க வேண்டுமென தமிழக அரசு அறிவிப்பு – tangedco next billing cycle consumers will be link their connection number with their aadhaar card. | Economic Times Tamil

eb number aadhar link: உங்களிடம் அதிக மின் இணைப்பு இருக்கா? உங்கள் ஆதாரில் அனைத்தையும் இணைக்க முடியுமா? அரசு விளக்கம்! – multiple eb connection holders can link their aadhar number | Economic Times Tamil

காமன் சர்வீஸ் மின் இணைப்புக்கு ஆதார் அவசியமில்லை!| Dinamalar

Abolish the status of not being able to pay electricity bills without linking Aadhaar – People’s Justice Center insists | ஆதாரை இணைக்காவிடில் மின்கட்டணம் செலுத்தமுடியாது என்ற நிலையைக் கைவிடுக – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல் (dailythanthi.com)

மின் இணைப்புடன் ஆதார் அடையாள எண் குறுகிய கால அவகாசத்திற்குள் இணைக்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மக்கள் நீதி மய்யம் இது குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் மின்சாரத்துறை தற்போது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு அமலில் இருந்தாலும் இதெற்கென முன்பு போல் காலக்கெடுவை விதிக்கவில்லை மேலும் இணையதளத்தில் இதற்கான பிரத்தியேக வசதி செய்யப்பட்டு உள்ளது என்றும் முறைகேடாக மின் இணைப்புகளை பயன்படுத்துவோரை கட்டுபடுத்தவே இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்றும் அதே போல் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மானியம் ரத்து செய்யப்படும் என்பதும் எங்கும் குறிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.