சென்னை – நவம்பர் 14, 2௦22
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வலுத்ததன் காரணமாக பல மாவட்டங்களில் சாகுபடி செய்த பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்து பயிர் செய்த விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தி கடும் நிதிச்சுமையை உண்டாக்கி விட்டது.
நிலைமை இப்படியிருக்க தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு முடிவடையும் சூழ்நிலையில் சம்பா தாளடி நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உடனடியாக தங்கள் பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளுமாறு வேளாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மாநிலம் முழுவதும் வடகிழக்குப் பருமழை தீவிரமடைந்து பல்லாயிரம் ஹெக்டேர்களில் விவசாயம் செய்யப்பட்ட பயிர்கள் சேதமடையும் வகையில் பாதிக்கப்பட்டுள்ளதால் முறையான பயிர்க் காப்பீடு அவசியமாகிறது. ஆயினும் பல மாவட்டங்களில் தீவிர மழையினால் மின்சார தொடர்புகள் சாலை வழி மார்க்கங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் பயிற்க்காப்பீடு செய்வதில் அல்லது புதுப்பிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.
எனவே இன்னலில் சிக்கியுள்ள விவசாயிகளின் நிலையை கண்டுணர்ந்து சம்பந்தப்பட்ட துறை பயிர்க்காப்பீடு செய்ய வேண்டிய இறுதி நாளை இம்மாதத்தின் இறுதிவரை நீட்டிக்க வேண்டும் என்றும் தொடர்மழையால் பல்வேறு இன்னல்களில் உள்ள விவசாயிகளைக் கண்டு ஆளும் மத்திய அரசும் மாநில அரசும் உதவிட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் மாநில செயலாளர் திரு செந்தில் ஆறுமுகம் அவர்கள் அறிக்கையின் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.