புதுக்கோட்டை – டிசம்பர் 3௦, 2௦22

கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல் எனும் கிராமத்தில் பட்டியலின மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். அங்குள்ள கோயிலுனுள் செல்ல அனுமதி மறுத்தும் குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மனித மலத்தை கலந்தும் தண்ணீரை பயன்படுத்தாத வகையில் நினைக்கவே மனம் பதறும் காரியங்களைச் செய்த ஆதிக்கச் சாதியினரின் மனிதத் தன்மையற்ற கொடுஞ்செயலை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கிறது.

குடிநீர்த் தொட்டியில் கலந்த மலம் தண்ணீரில் கலந்து அதை அருந்திய பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து சாதி மத வேறுபாடு ஒழிய வேண்டும் என தொடர்ந்து குரலெழுப்பி வரும் தலைவர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் இச்செயலை வன்மையாக கண்டித்து ஈடுபட்டவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

‘‘தீண்டாமை கொடுமை புரிவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குக.’’ தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் திரு சு பொன்னுசாமி அறிக்கை

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய கொடுங்கோல் ஆட்சியை களைய அவர்களை இங்கிருந்து அகற்றி வெளியேறச் செய்ய பல ஆண்டுகள் ஆயின அதற்கென ஏராளமான போராட்ட வீரர்களும் தியாகிகளும் பொதுமக்களும் தமது உயிரையும் தந்துள்ளது அனைவரும் அறிந்ததே. மேலும் குறுநில மன்னர்களும், அரசர்களும் அதன் பிறகு வந்த நிலச்சுவான்தாரர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெறுவர். சுதந்திரத்திற்கு வித்திட்ட பலரும் வரலாற்றில் இடம்பெற்றதும் 1947 இல் சுதந்திரம் பெறுவதற்கு முக்கியக் காரணியாக சத்தியாகிரக போராட்டத்தினை முன்னெடுத்த மகாத்மா என உலகம் முழுதும் அழைக்கப்பட்ட காந்தியார் உட்பட பல முக்கிய ஆளுமைகள் நாடு முழுதும் பரவியிருந்த சாதி மத வேற்றுமை மற்றும் தீண்டாமை போன்ற கொடிய பிரிவினைகளை எதிர்த்து வந்தனர்.

தீண்டாமை கொடுமையால் பல கிராமங்களில் தொடர்ந்து வந்த அதிகார ஆதிக்கச் சாதியினர் மூலம் வெறிகொண்டு கொலைகளும், வசிக்கும் குடிசைகளை தீயிட்டு கொளுத்துவதும் நடந்துகொண்டே வந்தது அவற்றை நீக்கிட போராடிய பலரும் தமக்குப் பின்னர் இந்தப் பிரிவினைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறையக்கூடும் சமத்துவம் நிலவிடும் என நினைத்தவைகள் எல்லாம் இன்னமும் சாதிய பாகுபாடுகள் மறையாமல் இன்னமும் பல ஊர்களில் சாதியை வைத்து இழிவுசெய்யும் கொடுமைகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது என்பது வேதனைக்குரியது.

என்று தீரும் இந்த சுதந்திர தாகம் என வெள்ளையனை நினைத்து எழுப்பிய கூக்குரல் என்று தணியும் இந்த சாதிய வன்மம் என எங்கெங்கும் கூக்குரல்கள் கேட்டுகொண்டே இருப்பது என்னவென்று சொல்வது ?

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ஆணைக்கிணங்க மற்றும் துணைத்தலைவர் திரு A.G மௌரியா அவர்களின் ஆலோசனையின்படி வேங்கைவயல் கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய மண்டல அமைப்பாளர் IT பிரிவு திரு செந்தில்குமார், மாவட்ட நிர்வாகி IT பிரிவு திரு ஹக்கீம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் பலரும் உடன் சென்றனர். மேலும் அங்கு நிலவும் குடிநீர் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாக சுத்திகரிப்பு செய்யப்பட்ட சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருவதாக தலைவரின் சார்பில் அறிவித்தனர்.

மேலும் இந்த கொடுஞ்செயலை அறிந்த தலைவர் அவர்கள் பாதிக்கப்பட்ட இறையூர் வேங்கைவயல் கிராம மக்களுக்கு ஆறுதல் கூறி சிகிச்சை பெற்றுவருபவர்களின் நலன் விசாரித்தார். மேலும் உடல்நிலை பாதித்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதை நேரில் சென்ற நிர்வாகிகள் மூலம் கேட்டறிந்த தலைவர் அச்சிறுமியின் தாயாரிடம் தொலைபேசியில் உரையாடினார். இத்தகைய செயலை செய்தவர்களை வன்மையாக கண்டிப்பதாகவும் இதன் மூலமாக மனவேதனையை அடைந்ததாக பேசியவர் இந்தச் செயலுக்கு ஓர் குடிமகனாக தான் தார்மீகமாக வருத்தம் அடைந்து மன்னிப்பு கோருவதாக பேசியது நெகிழச் செய்தது.

Follow-Up

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் வழங்கும் மேல்நிலைத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட வேதனை செயலை கேள்வியுற்று துயரம் அடைந்த தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் சார்பாக புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்து தருவதாக கிராம மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து கட்சி சார்பில்லாத ஓர் குழுவை அமைத்து அவர்களை அக்கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து விபரங்களை அளிக்க வேண்டும் என்ற ஆணையின்படி குழுவினர் நேரில் சென்று கிராம மக்களைச் சந்தித்தனர்.