பயிர்க் காப்பீடு திட்ட பிரீமியத் தொகையை மாநில அரசின் தலையில் சுமத்துவதா? மத்திய அரசுக்கு மநீம கடும் கண்டனம். விவசாய அணி மாநில செயலாளர் டாக்டர்.G.மயில்சாமி அறிக்கை.

பயிர்க் காப்பீடு திட்ட பிரீமியத் தொகையை மாநில அரசின் தலையில் சுமத்துவதா? மத்திய அரசுக்கு மநீம கடும் கண்டனம் விவசாய அணி மாநில செயலாளர் Dr. G.மயில்சாமி அறிக்கை. 15/12/2022

பிரதமர் பயிர்க் காப்பீடு திட்டத்துக்கான பிரீமியத் தொகையை மாநில அரசின் மீது சுமத்துவதாக மத்திய அரசு மீது புகார்கள் எழுந்துள்ளன. பிரதமர் பெயரில் செயல்படுத்தப்படும் திட்டத்துக்கு மூன்றில் 2 பங்குத் தொகையை மாநில அரசே செலுத்த வேண்டியிருப்பது மிகப் பெரிய அநீதியாகும்.

படாத பாடுபட்டு விளைவிக்கும் வேளாண் பயிர்கள், புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும்போது, ஓரளவுக்கு கைகொடுப்பது பயிர்க் காப்பீட்டுத் திட்டம்தான். இந்நிலையில், பிரதமர் பயிர்க் காப்பீடு திட்டத்துக்கான பிரீமியத் தொகையில் பெரும் பங்கை மாநில அரசின் மீதே மத்திய அரசு சுமத்துவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

2016-ம் ஆண்டில் இந்த திட்டம் தொடங்கப்பட்டபோது, மத்திய, மாநில அரசுகள் சமமான பிரீமியத் தொகையை வழங்கின. இந்நிலையில், தற்போது மூன்றில் இரண்டு பங்கு தொகையை மாநில அரசின் தலையில் சுமத்துவதாகக் குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.

பிரதமர் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் இணையும் விவசாயிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு தனது பங்கை குறைப்பது எந்த வகையில் நியாயம்?

முன்பு 49 சதவீதமாக இருந்த மத்திய அரசின் நிதிப் பங்கீடு 2021-ம் ஆண்டுக்குப் பிறகு 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் பங்கு ஏறத்தாழ 73 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனவே, பயிர்க் காப்பீடு திட்டத்தில் முன்புபோல 49 சதவீத தொகையை மத்திய அரசே ஏற்க வேண்டுமென தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

ஒரு திட்டத்தின் பெயரில் பிரதமர் பெயர் இருக்க வேண்டும், ஆனால் அதிக நிதியை மாநில அரசு ஒதுக்க வேண்டுமென்ற `பெரியண்ணன்’ மனப்பான்மையை மத்திய அரசு கைவிட வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்க வேண்டும்.

ஏற்கெனவே நிதிச் சுமையில் தள்ளாடும் தமிழகத்தை கூடுதல் நிதி நெருக்கடிக்கு உள்ளாக்குவது மத்திய அரசுக்கு அழகல்ல. ஏற்கெனவே தமிழகம் கட்டும் வரித் தொகையில் அதிக அளவு விகித்தை வட மாநிலங்களுக்கு ஒதுக்கிவிட்டு, தமிழகத்துக்கு மிகக் குறைந்த விகிதமே ஒதுக்குவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், புதிய சர்ச்சைக்கு உடனடியாக தீர்வுகாண வேண்டும்.

முற்றுரிமை, சர்வாதிகாரப் போக்கை மத்திய அரசு தொடர்ந்து கடைப்பிடிக்குமானால், மாநிலங்கள் தங்களின் உரிமைகளுக்காக எழுப்பும் குரல் வேறு வடிவை எட்டக்கூடும் என்று எச்சரிக்கிறோம். எனவே, பிரதமர் பயிர்க் காப்பீடு திட்டத்தில் முன்புபோல சம பங்குத் தொகையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. – Dr. G மயில்சாமி, மாநில செயலாளர் – விவசாய அணி, மக்கள் நீதி மய்யம்.